திருஅண்ணாமலை கிரிவலம் 17 கி.மீ.தான். ஆனால் அதே மாவட்டத்தில் சேயாற்றின் கரையையொட்டி பர்வதமலை கிரிவலம் 32 கி.மீ.கொண்டது.
மாதிமங்கலத்து கரைகண்டேசுவரர், மார்கழி மாதத்தில் பர்வதமலையை வலம் வந்து, தீர்த்தவாரி கொள்வதோடு; ஆங்காங்கே உள்ள ஊர்களில் மண்டகப்படி பெற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்து பர்வதமலைக்கு வடக்கில் அமைந்துள்ள வெள்ளந்தாங்கீசுவரர் கோயிலுக்குச் செல்கிறார். அங்கே மிருகண்ட நதியில் தீர்த்தவாரி கொண்டுவிட்டுப் பின் மகாதேவ மங்கலத்திற்குத் திரும்பி வருகிறார்.
காசிக்குச சென்றுவந்தவர்களைப் பார்த்தாலே புண்ணியம் என்பார்கள். எல்லோராலும் பர்வதமலையின் உச்சிக்குச் சென்று இறைவனை தரிசிப்பது இயலாது; கிரிவலம் செல்வது என்பதும் சந்தேகத்துக்குரியதுதான். எனவே, கிரிவலம் வந்துவிட்ட கரைகண்டேசுவரரை தென்மகாதேவ மங்கலத்தில் தரிசித்து அந்தப் புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளலாமே !
தென் மகாதேவ மங்கலம் : மாதிமங்கலம் என்று அழைக்கப்படும் தென்மகாதேவ மங்கலம். போளூருக்கும், செங்கம்நகருக்கும் நடுவே உள்ளது. போளூரிலிருந்து 16 கி.மீ. இவர்தான் மத்திய கரைகண்டேசுவரர். விஜயநகரமன்னர்கள், சம்புவராயர், சோழமன்னர்கள் மற்றும் பல குறுநில மன்னர்களால் திருப்பணி செய்விக்கப்பட்ட திருக்கோயில். பர்வதமலைக்குச் செல்வோர், மாதிமங்கலத்து மகாதேவரை தரிசித்துவிட்டுத்தான் புனித யாத்திரை மேற்கொள்வர்.
கிராமத் தீர்ப்பாயம், தேர்த்திருவிழா என்றெல்லாம் பெருமை பெற்ற பகுதி இது. தேர்த்திருவிழாவின்போது, தேர்க்காலில் அடிபட்டு மரணமுற்ற ஒருவனுக்கு "தேரடிவீரன்' என்று நினைவுச்சின்னம் எழுப்பப்பட்டுள்ள பெருமை உண்டு.
பெரியகோயில் : ராஜகோபுரம் இல்லாவிடிலும், இரண்டு சுற்றுக்களைக் கொண்ட பெரிய கோயில் தென் மகாதேவ மங்கலத்தில் உள்ளது. அதுதான் கரைகண்டேசுவரர் திருக்கோயில். கரைகண்டேசுவரர் முன்னே உள்ள நந்தியெம்பெருமானின் கொம்புகள் வழியே வடக்கே நோக்கினால், பர்வதமலை உச்சியில் உள்ள மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில் தெரியும்.
பிரதான நுழைவாயிலில், பஞ்சமூர்த்திகளின் கதைச்சிற்பங்கள் கொண்ட நுழைவாசல் மண்டபம். அதன்முன்னே நந்திமண்டபம் திருஅண்ணாமலை திருக்கோயிலை நினைவூட்டுகிறது. வெளிச்சுவற்றில் திருக்குளம் அமைந்துள்ளது.
முகமண்டபம், ஸ்தபன மண்டபம், துவார பாலகர்களை கடந்து செல்கிறோம். ஏழு திருத்தலங்களின் மையமாக அமைந்துள்ள இத்தலத்து"மகாதேவர்' சற்று வித்தியாசமானவர்தான். கம்பீரமாகக் காட்சி தருகிறார். கருவறையின் வெளிச்சுவற்றில் வடக்கே "வைகுண்டவாசல்' உள்ளது. சைவ- வைணவ ஒற்றுமைக்குச் சான்றாக இப்பகுதியில் பல திருக்கோயில்களில் "வைகுண்டவாசல்' உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் வழியே வெளியே வந்து பெரிய நாயகி சன்னதியை அடைகிறோம்.
வெளிச்சுற்றில், இன்னும் நாம் தரிசிக்க வேண்டிய மூன்று கரைகண்டேசுவரர்களையும் லிங்கவடிவில் காணலாம். வள்ளி தேவயானையுடன் முருகப்பெருமான், காலபைரவர், நவகிரக சன்னதிகள் அமைந்துள்ளன.
தென் மகாதேவ மங்கலத்தின் சிறப்பினைப் பறைசாற்றும் ஒன்பது கல்வெட்டுகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றியெல்லாம் இத்தலத்து இறைவன் "ஸ்ரீகரைகண்டேசுவரம் உடைய நாயனார், ஸ்ரீகரைகண்டேசுவர நாயனார், ஸ்ரீகரைகண்ட கடவுள்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே "காரியுண்ட ஈசுவரன்' கரைகண்டேசுவரராக மாறியது பல நூறு ஆண்டுகளுக்கும் முன்னமேயே என்று அறியமுடிகிறது. நாமும் அவரை கரைகண்டேசுவரராக வணங்கி, வெளியே வருகிறோம்.
சதுர்வேத நாராயணர் : மாதமங்கலத்தில் நாம காணவேண்டிய மற்றோர் ஆலயம், ராதா, ருக்மணி சமேத சதுர்வேத நாராயணப் பெருமாள் திருக்கோயில் ஆகும். எல்லாவிடங்களிலும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ள திருமால், நான்குமறையோனாக, ராதா-ருக்மிணியுடன் சேவை சாதிக்கிறார். மகாதேவமங்கலத்திற்கு மேற்கில்தான் மல்லிகார்ஜுன சுவாமி அருள்பாலிக்கம் பர்வதமலை உள்ளது. சற்று கடினமான பயணமாகத்தான் இருக்குமாம் !
எலத்தூர் : சப்த கரைகண்டேசுவரர் திருத்தலங்களில் நாம் அடுத்து தரிசிக்கப்போவது எலத்தூர் ஆகும். போளூரிலிருந்து 13 கி.மீ. சேயாற்றின் வடகரையில் உள்ள ஐந்தாவது திருத்தலம் இது. சோழ மன்னர்கள் காலத்தில் உருவாகி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் உருவாகி, விஜயநகர மன்னர்கள் காலத்தில் விரிவடைந்த வரலாறு கொண்ட திருக்கோயில். "பிரதாப தேவராயபுரம்' என்றும் இத்திருத்தலம் அழைக்கப்பட்டதாம். விஜயநகர மன்னர்கள் காலத்தில் கன்னடமொழி பேசும் அந்தணர்கள் பலர் இங்கு குடியேறியதாக வரலாறு கூறுகிறது.
தெற்கு நோக்கிய நுழைவாயிலின் வழியே உள்ளே சென்று, 4 கால் மண்டபத்தில் கனகசபையை தரிசித்தவாறு, மூலவரைக் காண விழைகிறோம். அமைதியான சூழலில், சிறிய பாணமாக கரைகண்டேசுவரர் எழுந்தருளியுள்ளார். வடக்கே தனிச் சன்னதி கொண்டு நின்ற கோலத்தில் பெரிய நாயகி அம்மன் அருள்பாலிக்கிறாள்.
மூலவர் கருவறையைச் சுற்றிலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், நான்முகன், துர்க்கை, சண்டிகேசுவரர் சன்னதிகள். தனியாக விமானத்துடன் கூடிய சன்னதியில், வள்ளி தெய்வானையுடன் ஆறுமுகப்பெருளமான் எழுந்தருளியுள்ளார்.
வேதம் ஓதுவோர், நாதஸ்வரம் வாசிப்போர், திருவுலா வரும்போது பல்லக்கு சுமப்போர், தீவட்டி தூக்குவோர், முடிமழிப்போர், துணி வெளுப்போர் என திருக்கோயில் பணியாளர்களுக்கு நிலமானியம் வழங்கப்பட்டிருந்த வரலாறும் எலத்தூருக்கு உண்டு. இன்று...?
வில்வாரணி நட்சத்திரக் கோயில் : எலத்தூர் கரைகண்டேசுவரர் கோயிலுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் முருகப்பெருமான் அருகிலேயே சிறு குன்றின் மீது குடிகொண்டுள்ளார். அந்த மலையே, "நட்சத்திரக் கோயில் ' என்ற சிறப்புப் பெயரை பெற்றுவிட்டது. "வில்வராய நல்லூர்'ண என்று அழைக்கப்பட்டது.
முருகப்பெருமானின் பெருமையில் கரைகண்டேசுவரருக்கும், பெரிய நாயகிக்கும் பங்கு உண்டு. கந்தசஷ்டி திருநாளில் ஐந்தாம் நாள் "சக்திவேலை' அன்னையிடம் பெறுவதற்காக, வில்வாரணி முருகப்பெருமான் எலத்தூர் திருக்கோயிலுக்கு எழுந்தருளுகிறார். அதேபோல, சித்திரை மாதத்தில் "ஆற்று உற்சவ ஊறல்' திருவிழாவிலும், அம்மையப்பரை பூசை செய்திட முருகப்பெருமான் ஏலத்தூருக்கு எழுந்தருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பங்குனி மாதத்தில் "பிரம்மோற்சவம்' நடைபெறும் போது, திருமணம் நடந்து முடிந்ததும், பாலிகையை நதியில் விடுவதற்காக முருகப்பெருமான் சேயாற்றுக்கு எழுந்தருளுகிறார்.
எழில் குன்றின் மீது அழகன் குமரன் : சப்த கரைகண்டேசுவரர்களையும் வழிபட்ட குமரன், தனக்கென தனிக்கோயில் கொண்டுள்ள இடமே வில்வாரணி நட்சத்திரக்கோயில். 12ம் நூற்றாண்டில் உருவாகியுள்ளது. இப்போது நாம் காணும் எழில் குமரன் கோயில் சோழமன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்.
குன்றின் மீது வாசம் செய்யும் குமரன் "சிவ சுப்ரமணிய சுவாமியாக' எழுந்தருளியுள்ளார். நாகம் குடைபிடிக்க, சிவலிங்க ரூபியாகக் காட்சி தந்ததால் சிவ சுப்பிரமணியசுவாமி என்று திருநாமம் கொண்டுள்ளார்.
மேற்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கூடிய அழகிய கோயில். அடிவாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், நவகிரக சன்னதிகள் குன்றின் மீது அமைந்த கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள அருவத்திருமேனியின் பின்புறம் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமியின் சிலைகள் நிறுவப்பட்டு, பூஜிக்கப்படுகின்றன. சேயாற்றில் இரண்டு முறை தீர்த்தவாரி கொள்ளும் சிறப்பைப் பெற்றவர் சிவசுப்பிரமணியசுவாமி.
பூண்டி : பூண்டி, சேயாற்றின் வடகரையில் உள்ள ஆறாவது "கரை கண்டேசுவரர்' திருத்தலம். போளூருக்குத் தெற்கே 9 கி.மீ. தொலைவில் உள்ள கலசப்பாக்கத்திலிருந்து ஒரு கி.மீ.தூரம். கலசத்தின் நூல் ஒதுங்கிய தலம்.
இரண்டு மதிற்சுவர்களை உடைய பெரிய கோயிலாக இருந்தது. ராஜகோபுரம் இல்லை. "அதிகார நந்தி' பெரிய வடிவில் காணப்படுவதால், சோழர் காலத்துத் திருப்பணி எனக் கருதப்படுகிறது. "நரி பூசித்த தலம்' என்பர். அதற்கு சான்றுரைக்க, கோயிலுக்கு வரும் பாதையில் இருபுறமும், இரண்டு கல்நரி சிலை உள்ளன. இரண்டு சிவனடியார்கள், அகத்தியரின் கோபத்திற்கு ஆளாகி, நரி வடிவம் பெற்றபின், கரைகண்டேசுவரரின் அருளால் விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.
மகாமண்டபம், பிரதோஷ நந்தி, அர்த்தமண்டபம் ஆகியவற்றைத் தாண்டி, கருவறை முன் செல்கிறோம். பதினாறு பட்டைகள் கொண்ட பாணத்துடன் "÷ஷாடச லிங்கத்' திருமேனியராக கரை கண்டேசுவரர் அருள்பாலிக்கிறார். கிழக்கு நோக்கிய சன்னதி. உள் சுற்றில் பெரிய நாயகி அம்மன் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். சித்தி புத்தி விநாயகர், ராதா - ருக்மிணியுடன் வேணு கோபாலசுவாமியும், நடராஜர் சபையில் "ஆடவல்லான் சன்னதி' யும் தனிச் சிறப்பு பெற்றவை.
கரைகண்டேசுவரர் கோயிலுக்குத் தென்கிழக்கில் அகத்தியர் ஆலயமும், சற்று மேற்கில் அரசு கொண்டப்பெருமாள் திருக்கோயிலும் உள்ளன. அண்மைக் காலம் வரை இங்கு வாழ்ந்து வந்த "பூண்டி மகான்' என்றழைக்கப்படும் சுவாமிகளின் மடமும் உள்ளது.
குருவிமலை : காஞ்சிபுரத்திற்கு ஈசானிய பாகத்தில் மாந்தோப்பில் அமைந்து, குரு மூலை என்று அழைக்கப்பட்ட திருத்தலமே தற்போது "குருவிமலை' ஆகியுள்ளது. போளூருக்குத் தெற்கே 3 கி.மீ. சேயாற்றின் வடகரையில் அமைந்த ஏழாவது கரைகண்டேசுவரர் திருத்தலம் இது.
10-ம் நூற்றாண்டில் சோழமன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோயில். முழுவதும் உருக்குலைந்துவிட்ட ஆலயத்தில் நல்ல முறையில் திருப்பணி செய்த அன்பர்கள் பாராட்டுக்குரியவர்களே. மகாமண்டபம், அர்த்தமண்டபம் ஆகியவற்றைக் கடந்து, கருவறையில் கரைகண்டேசுவரரை தரிசிக்கிறோம்.
மூலவருக்கு இடதுபுறம் தெற்கு நோக்கியபடி பெரியநாயகி எழுந்தருளியுள்ளாள். சிவசுப்பிரமணியசாமி, திருவிழாவின்போது இந்தத் திருத்தலத்திற்கும் எழுந்தருளுவார்.
பர்வதமலை : பூண்டியில் வாழ்ந்துவந்த மகானின் அருளாசியுடன் பர்வத மலைக்கு புனிதப் பயணம் சென்று வந்தோர் எண்ணற்றவர். பன்னிரண்டு சித்தபுருஷர்கள், பர்வதமலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமியையும், பிரமராம்பிகை அம்மனையும் இரவில் சென்று ஆராதனை செய்வதாக பூண்டி மகான் குறிப்பிடுவார். சதா ஒரு அழுக்கு மூட்டையுடன் திரிந்து வந்த அவர், இந்த மலைக்கு அடிக்கடி சென்று வருவாராம். அப்படி ஒரு பிணைப்பு !
ஏழு சடைப் பிரிவுகள் கொண்டதான பர்வதமலை, முன்பகுதி தென்மகாதேவ மங்கலத்திலும், பின்பகுதி கடலாடியிலும் இருப்பது போல் தோன்றுகிறது. "நன்னன் சேய் மன்னன்' என்பவனால் கட்டப்பட்ட கோயில் இங்கே உள்ளது. சில கோணங்களில் சிவபெருமானின் திரிசூலம் போலக் காட்சி தருவதால் பர்வதமலையை "திரிசூலகிரி' என்றும் அழைப்பர்.
கரடு முரடான பாறைகளைக் கடந்து செல்ல, ஆங்காங்கே இரும்புக் கடப்பாறைகளை ஊன்றி வைத்துள்ளனர். அவைகளைப் பிடித்துப் கொண்டே மேலே ஏறுவது சற்று கடினமாக காரியம்தான். ஒற்றையடிப்பாதையில் கோரைப்புற்கள். கருவேல முள் ஆகியவற்றை கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும்.
குமரி நெட்டு, செங்குத்தான ஏற்றம் கொண்ட கடப்பாறை நெட்டு, தண்டவாளப்படி, ஏணிப்படி என்று பற்பல குறிப்புகள் நம்மை பர்வதமலையின் உச்சிக்கு அழைத்துச் செல்கின்றன. கற்பகச்சுனை அருகே அண்ணாமலையாரின் இருபாதங்கள். அடுத்து கணக்கச்சி ஓடையருகில் கம்பிவேலியைப் பிடித்தபடியே மேலே செல்ல வேண்டும்.
மூன்று பிரிவுகளாக மலைக்கோயில் : மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது பர்வதமலை மல்லிகார்ஜுனேசுவரர் திருக்கோயில். முதல் பகுதியில் விநாயகர். ஆறு பெருமான் ; வீரபத்திரர், காளி, நந்தியெம்பெருமான் ; இரண்டாவது பகுதியில்தான் மல்லிகார்ஜுனேசுவரர், அமைதியான சூழலில் ஆனந்த ஈசுவரனாக அருள்பாலிக்கிறார். ஆண்டு முழுவதும் சென்று வழிப்படக்கூடிய மலையாக பர்வதமலை கருதப்படுகிறது.
மூன்றாவது பகுதியில்தான் அம்மன் சன்னதி. பிரமராம்பிகை என்று திருநாமம். இரண்டு கரங்களுடன் நின்ற கோலத்தில், மீனாட்சியம்மையைப் போன்ற அழகுத்திருமேனி. இருபுறமும் துவாரசக்திகள்.
ஏழு சடைப்பிரிவுகள் கொண்ட பர்வத மலைக்குச் செல்வோர் ஒரு இரவேனும் மலையில் தங்கிவிட்டுத்தான் கீழே இறங்க வேண்டுமாம். அப்படிச் செய்வோர் பிறவிப் பயன் எய்துவர் !
கடுமையான விதிமுறைகளைக் கொண்டது பர்வதமலைப் பயணம். மேலே செல்ல நான்கு மணி நேரம் ; கீழே இறங்கிட ஆறுமணி நேரத்திற்கு மேல் ஆகும் ! வசதி உள்ளவர், மெல்லச் சென்று, மெல்லத் திரும்பி வரலாம். நாம்தான் ஈரேழு சிவாலயப் பயணத்தை விரைவில் முடிக்க வேண்டும்!
போளூருக்கு மேற்கே எலத்தூருக்கு வடக்கில் சிறுவள்ளூர், கேட்டவரம் பாளையம், கண்டபாளையம் ஆகிய திருத்தலங்கள் முக்கியமானவை. நரசிம்மர் வழிபட்ட கேட்ட வரம்பாளையமும், வெள்ளந்தாங்கீசுவரர் அருள்பாலிக்கும் கண்டபாளையமும் தனிச் சிறப்பு பெற்றவை.