இது உங்கள் இடம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 ஜன
2018
00:00

குழந்தையை தத்தெடுக்க போகிறீர்களா?
அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும், குழந்தை இல்லை. அதனால், இந்தியாவிற்கு வந்து ஒரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினார். அதன்படி, சமீபத்தில் இந்தியா வந்த நண்பரும். அவர் மனைவியும், இங்குள்ள ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று குழந்தைகளை பார்த்தனர். இறுதியாக, ஒரு மாற்றுத் திறனாளி குழந்தையை தத்து எடுத்தனர்.
இதைப் பார்த்து உறவினர்கள் முகம் சுளிக்க, அவரோ, 'எல்லாரும் மாற்றுத் திறனாளி குழந்தைகளை புறக்கணித்து, ஆரோக்கியமான குழந்தையையே தத்து எடுக்கின்றனர். அதனால், இக்குழந்தைகள் மிகவும் பரிதாபத்துக்குரியவர்களாக போய் விடுகின்றனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தான் முதலில் வாய்ப்பு கொடுக்கணும். எங்களுக்கும், நலிவுற்ற குழந்தைக்கு வாழ்வு கொடுத்த ஆத்ம திருப்தி கிடைக்கும். அமெரிக்காவில் இத்தகைய குழந்தைகளை வளர்க்க வசதிகள் அதிகம்; பரிவும், பாசமும் தாராளமாக கிடைக்கும்...' என்றார்.
கொஞ்சமும் சுயநலமில்லாமல், குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, அவர்கள் செயல்பட்டதை பார்த்தபோது, 'யாருமே அனாதை இல்லை...' என்ற எண்ணமே தோன்றியது!
— ஜி.நீலா, கும்பகோணம்.

மறக்க முடியாத அனுபவம்!
ஸ்காட்லாந்து நாட்டில் இருக்கும், ஒரு நிறுவனத்துக்கு, முதன் முறையாக, அலுவலக வேலையாக சென்றிருந்தேன். மாலை, 6:00 மணிக்கு, ஊழியர்கள் அனைவரும் தங்களுடைய கணினிகளை மூடி, வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர்.
'எனக்கு நிறைய வேலை இருக்கிறது... கொஞ்ச நேரம் இருந்து வேலையை முடித்துவிட்டு கிளம்புகிறேன்...' என்று, என் சக ஊழியரிடம் கூறினேன். 'இன்னும் பத்து நிமிஷத்தில், எல்லா விளக்குகளையும் அணைச்சுடுவாங்க; திங்கட்கிழமை வந்து பார்த்துக்கங்க...' எனக் கூறினார்.
'ஏன், நாளை, சனிக்கிழமை தானே... என்னிடம் தான் அலுவலக அனுமதி கார்டு இருக்கிறதே... நாளை வந்து வேலையை பார்க்கிறேன்...' என்று சொன்ன போது,'விடுமுறை நாட்களில், பாதுகாவலரைத் தவிர, அலுவலகத்திற்கு வர யாருக்கும் அனுமதி கிடையாது. அப்படியே ஊழியர்கள் அலுவலகம் வரவேண்டும் என்றால், ஜெனரல் மேனேஜரிடம் விளக்கம் கூறி, அவர் அனுமதி பெற்றால் தான் வரமுடியும். அவர் சாமானியமாக ஒத்துக்கொள்ள மாட்டார்; ஏனென்றால், அரசாங்கத்தின் அனுமதி பெற்றுதான், அவர் சரியென்று சொல்ல முடியும்...' என்று அவர் கூறியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தேன்.
மேலும், 'விடுமுறை நாட்கள், நம் குடும்பத்திற்கும், நமக்கும் மட்டுமே சொந்தம்...' என்றார்.
நம்மூர் நிலைமையை எண்ணிப் பார்த்தேன். வேலை நேரத்தில், வெட்டி பொழுது போக்கிவிட்டு, வேலை நேரத்துக்கு பின் மற்றும் விடுமுறை நாட்களிலும் வேலை செய்வதாக போக்குக் காட்டி, 'ஓவர் டைம்' சம்பளம் வாங்குவதை எங்கே போய் சொல்வது!
— ரெங்கநாதன் நாராயணன், பெங்களூரு.

மனமிருந்தால்...
மாநகராட்சி பள்ளியில் படிக்கும் என் உறவினரின் மகன், 'பிறர் பேசும் ஆங்கிலம் புரிந்தாலும், தன்னால் சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லையே...' என்று வருத்தப்பட்டான். இதற்காக, தனி வகுப்புகளில் சேர்ந்து படிக்க, அவனது குடும்ப பொருளாதாரம் இடம் கொடுக்காது.
இந்நிலையில், நுாலகத்திற்கு சென்று, மதுரையை பற்றிய புராண விவரங்களை படித்து தெரிந்து கொண்டான். மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி வெளிநாட்டவர், வெளி மாநிலத்தவர் என்று சுற்றுலா பயணியர் கூட்டம் எப்போதும் இருக்கும்.
அவர்களிடம் வலிய சென்று, வழிகாட்டியாக, ஊர் மற்றும் கோவில்களைப் பற்றி கூறி, சுற்றி காண்பிப்பான். தப்பு தப்பாக என்றாலும், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு என்று அவர்கள் மொழியிலேயே பேசுவான்; அவர்கள் கேலியை பொருட்படுத்த மாட்டான்.
இப்போது, சரளமாக அவன் பேசும் ஆங்கிலத்தை கேட்டு, எல்லாரும் ஆச்சரியப்படுகிறோம். கூடுதலாக, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழியும் அவனுக்கு அத்துப்படி. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று சாதித்து காட்டிய அவனை நினைத்தால், மிகவும் பெருமையாக இருக்கிறது.
—விஜயலட்சுமி, மதுரை.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X