சந்திரபாபு! (25)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2018
00:00

ஒரு சில படங்களில் மட்டுமே சந்திரபாபு நடித்து வந்த காலத்தில், ஒரு சினிமா பத்திரிகையில் அவரது பேட்டி வந்தது. அதில், தன் நிலை என்ன என்பதையும், புகழ் ஒரு மாயை என்பதையும் தெளிவாக புரிந்து வைத்திருந்ததுடன், அவரது தன்னம்பிக்கை சிறிதும் குறையவில்லை என்பதை அவரது பதில்கள் பிரதிபலித்தது...
உங்களுக்கு திறமை இருந்தும், தமிழ் திரையில் நிரந்தர இடத்தை பிடிக்காதது ஏன்?
நிரந்தர தன்மை என்பதை எதை வைத்துச் சொல்கிறீர்கள்... கையில் இருக்கும் பணத்தையும், பட ஒப்பந்தங்களையும் வைத்தா சொல்கிறீர்கள்... வாழ்க்கை என்பதே ஏற்றமும், இறக்கமும் நிறைந்தது தான். ஒரு காலத்தில், ஓயாது படங்களில் நடித்து வந்தவன் நான். இதேபோல், அன்று, பல நடிகர்களும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இருந்தனர்; இன்று, என்னால் முன்போல் பல படங்களில் நடிக்க இயலவில்லை; அவ்வளவு தான்!
நீங்கள் ஊரோடு ஒத்து வாழ்ந்தால் என்ன?
ஊரோடு ஒத்து வாழ்... கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது. என்னை விட, அறிவில் குறைவானவர்களை இங்கு நான் சந்திக்கிறேன். என் பார்வைக்கு அவர்கள் பைத்தியக்காரர்களாக தெரிகின்றனர்; அவர்கள் பார்வைக்கு, நான் பைத்தியக்காரனாக தெரிகிறேன். ஏதோ ஒரு சிலர்தான், அத்திப்பூத்தார் போல் அறிவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றனர். அவர்கள், என்னை ஓரளவுக்கு புரிந்து கொண்டுள்ளனர்; நானும், அவர்களை புரிந்து வைத்துள்ளேன். மற்றவர்களை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்!
நீங்கள் பிறவி கலைஞரா?
'சிலர், பிறக்கும்போதே மேதையாக பிறக்கின்றனர்; சிலர், மேதைகள் ஆக்கப்படுகின்றனர். சிலர் மீதோ, மேதைத் தன்மை திணிக்கப்படுகிறது...' என்றான், ஷேக்ஸ்பியர். இதையே நான் ஏற்றுக்கொள்ளவில்லை. துாத்துக்குடியில், மீனவ குடும்பத்தில் பிறந்தேன்; அங்கிருந்த சில நுாறு மீனவர்களில் நான் ஒருவன் தான் நடிகனாக வந்தேன். பாடுவேன், நடனமாடுவேன், மியூசிக் டைரக்டராகவும் இருந்திருக்கிறேன். 'பம்பரக் கண்ணாலே...' பாடலின் மெட்டு நான் போட்டது தான்; இன்னும் பல பாடல்களுக்கு மறைமுகமாக மெட்டு அமைத்திருக்கிறேன். மற்றவர் எல்லாம் என்னைப் போல் வர முடியவில்லை. அதற்காக, அவர்களை எல்லாம் முட்டாள் என்று சொல்லி விடுவதா அல்லது இதையெல்லாம் தெரிந்து வைத்து, சும்மா இருக்கின்றனர் என்று சொல்வதா?
ஒரு மனிதன் தன்னை எப்படி வளர்த்துக் கொள்ள விரும்புகிறான் என்பதை பொருத்தது இது. ஒரு மனிதன் நினைத்தால், தான் நினைத்தபடி எப்படியும் வர முடியும்.
ஆகவே, அவன் தன்னை உருவாக்கிக் கொள்வதைப் பொருத்தது இது. பிறவி இப்படி, அப்படி என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சு. உழைப்பிலே இல்லாதது உதிரத்தில் மட்டும் வந்து விடுமா என்ன... வேடிக்கையாக இருக்கிறதே!
தற்போதைய பட தயாரிப்பாளர்களை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?
அவர்களை பற்றி குறை சொல்ல மாட்டேன்; அவர்கள் என்ன செய்வர்... இது, ஒரு தொழில்; தொழிலில் பணத்தை முடக்குபவன், அதை, லாபத்தோடு எடுக்கவே முயற்சிப்பான். கலை, கத்திரிக்காய் என்பதெல்லாம் சுத்த பிதற்றல்; நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள சொல்லப்படும் அலங்கார சொற்கள். எப்போது இது தொழிலாகி விட்டதோ, அதில், லாபம் கிடைக்க என்ன வழிகள் உண்டோ, அதைத்தான் தயாரிப்பாளர்கள் செய்கின்றனர்; செய்வர். ஆனால், இது, ஒரு சக்கரம் போன்றது.
இன்று உயர்ந்த நிலையில் இருப்பவன், நாளை கீழே வருவதும், கீழே இருப்பவன் நாளை உயர் நிலைக்கு செல்வதும் சகஜம். இதைக் கொண்டு மட்டும் வெற்றியை எடை போட முடியாது, யாருக்குமே நிரந்தர வெற்றி இருந்ததில்லை; இருக்காது என்றே சொல்ல முடியும்.
ஏதோ போய்க்கொண்டே இருக்கின்றனர்; காலம் போய்க்கொண்டே இருக்கிறது. அவ்வளவுதான் சொல்ல முடியும்.
நீங்கள் முன்போல் நடிப்பதில்லை என்று கூறுகின்றனரே... அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?
கேள்வியே அபத்தமானது; அசட்டையாக நடித்து ஒருவன் எப்படி பெயர் வாங்க முடியும்... நான் ஏற்றுக்கொள்ளும் எந்த காரியத்தையும் அசட்டையாக செய்ததே கிடையாது.
துவக்கத்தில் இசையமைப்பாளர் வேதாவுடன் இருந்திருக்கிறேன்; அப்போது, ஜால்ரா கூட தட்டியிருக்கிறேன். அதைக் கூட அக்கறையோடு, முழு ஈடுபாட்டோடு தான் செய்தேன்.
தட்டுங்கள் திறக்கப்படும், சகோதரி மற்றும் குமார ராஜா இன்னும் நான் நடித்த எந்த படத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்... என் நடிப்பு, மற்றவர்களுக்கு ஒரு சவால் தான்; யார் வேண்டுமானாலும் முன் வந்து அம்மாதிரி நடித்துக் காட்டட்டும் பார்க்கலாம்!
சினிமா ரசிகர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அவர்கள் குழந்தையை போன்றவர்கள்; ஒன்றும் தெரியாதவர்கள். நாம், அவர்களை விட மேம்பட்ட இடத்தில் இருக்கிறோம். அவர்களையும் நம் நிலைக்கு கொண்டு வர வேண்டியது நம் கடமை. அதை செய்ய நாம் முயற்சிக்க வேண்டும். எந்த வழியில் கொண்டு போகிறோமோ, அந்த வழியில்தான் அவர்கள் வளருவா்.
- இப்படி பேட்டி அளித்திருந்தார்.
மாடி வீட்டு ஏழை படம் நின்று போன பின், எம்.ஜி.ஆரை பற்றி தன் மனதில் தேக்கி வைத்திருந்த விஷயங்கள் எல்லாவற்றையும் தைரியமாகவும், மிகவும் வெளிப்படையாகவும் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார், சந்திரபாபு. இது, எம்.ஜி.ஆர்., ரசிகர்களை கொதிப்படைய செய்தது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சந்திரபாபு சொன்ன விஷயங்கள், பிரபல சினிமா பத்திரிகையான, 'பிலிமாலயா'வில் தொடராக, 1972ல் வெளிவந்தது. அந்த தொடருக்கு, சந்திரபாபு வைத்த பெயர், 'மாடி வீட்டு ஏழையின் கண்ணீர் கதை!'
இப்படி ஒரு தொடரை எழுத வேண்டிய காரணம் ஏன் வந்தது என்பது பற்றி, சந்திரபாபு பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்...
'என் உள்ளத்தில் புரையோடி போயிருக்கும் புண்ணை கீறப் போகிறேன்...
'எதிரில் இருப்பது முள்வேலி என்று அறிந்தும், அதன் மீது சாய்ந்தேனே... என் உடல் என்ன ஆயிற்று என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டாமா... அதைத்தான் சொல்லப் போகிறேன். 'ஏன் இவ்வளவு காலதாமதம்...' என்று கேட்கிறீர்களா... காரணத்தை சொல்கிறேன்... 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்பது தமிழ் பழமொழி அல்லவா... அதனால் தான் பொறுத்து வந்தேன். 'பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு' என்பதும் தமிழ் பழமொழி என்பதால், இன்று நான் உண்மையை சொல்லப் போகிறேன்... பல லட்சங்களுக்கு அதிபதியான பாபு, இன்று சில நுாறு நோட்டுகளையே பார்க்கக்கூடிய அளவுக்கு மாறிய கதையை நீங்கள் உணர வேண்டாமா... நான், உங்கள் உள்ளத்தில் இருப்பவன்; அதனால், உண்மையை சொல்கிறேன்...'
- இப்படி ஆரம்பித்தார்.
தொடரும்.

நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் சென்னை.

முகில்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
21-ஜன-201804:30:47 IST Report Abuse
கதிரழகன், SSLC 1972 பேசும் படம் ன்னு சொன்னாக இப்ப பிலிமாலயா ன்னு சொல்லுறாக. நான் படிச்சது பொம்மை பத்திரிக்கையில. எல்லா பத்திரிக்கையிலையும் சொன்னாரோ என்னவோ. அந்த சமயத்துல எம்ஜிஆர் தனி கட்சி தொடங்கினாரு. மு க முத்துவை ஈரோ ஆக்க பாத்தாரு கருணாநிதி. கொஞ்சம் காய் நகத்தி இருந்தா இவரு கருணாநிதி ஆதரவுல எம்ஜியாருக்கு எதிரியா உருவாகி இருக்கலாம். ஆனா முடியாது, ரெண்டு பேருமே மகா தலைக்கனம் பிடிச்சவங்க. ஒத்து போக மாட்டாங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X