* ஆ.ராகேஷ், பெங்களூரு: எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்களேன்...
அடடா... ஞானி லெவலுக்கு கொண்டு போய் விட்டீர்களே... போகட்டும்! 'நாளை செய்யலாம்' என சோம்பல்பட்டு, எந்த நல்ல செயலையும் தள்ளிப் போடாதீர்கள்; அந்த, 'நாளை' என்ற நாள் வராமலே போய் விட வாய்ப்புண்டு!
ஆர்.விஜயா, சிவகங்கை: காதல் எப்போது உருவாகிறது?
ஓர் ஆணிடம் ஒரு பெண் ஏமாறும்போது... ஒரு பெண்ணிடம் ஓர் ஆண் ஏமாறும் போது!
வி.ஆனந்த கிருஷ்ணன், சென்னை: எந்த நிலையிலும் மனிதன் இழக்கக் கூடாதது எதை?
நிதானத்தை! பதறினால் சிதறிப் போகும் காரியம். எந்த சூழ்நிலையிலும் பொறுமையோடு செயல்பட வேண்டும். அவசரத்தில், ஆத்திரத்தில், ஆசையில் நிதானத்தை இழந்தால், நஷ்டங்களையும், அவமானங்களையும், கஷ்டங்களையும், இழப்பு களையும் எதிர்கொள்ள நேரிடும்.
கே.கணபதி, நகரி: கடன் வாங்கிக் கட்டிய வீட்டில், வாடகைக்கு குடி அமர்த்தினால், சமயத்தில் அவர்களை வெளியேற்ற என்ன தான் வழி?
அடிதடியை விரும்பாத அமைதியான பேர்வழி நீங்கள் என்றால், பகடி ஏதாவது கொடுத்து காலி செய்யச் சொல்லலாம். குடியமர்த்தும் போதே, சாதுவான, மாற்றலாகிப் போகும் வேலையில் இருப்பவர்களாக தேர்வு செய்ய வேண்டும். அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு கண்டவர்களிடமும் கொடுத்தால் அவஸ்தை தான்!
ஆர்.மோகன், ஊட்டி: என் நண்பன் பிடிவாதக்காரனாய் இருக்கிறான்... அவன் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக உள்ளதே...
நல்லதுக்காக பிடிவாதம் பிடித்தால் கவலை வேண்டாம்; அவன் எதிர்காலம் சோலைவனமாகத்தான் அமையும். தன் கவுரவம் மற்றும் அடுத்தவனை கெடுக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருந்தால் எதிர்காலம் பாலைவனம் தான்!
ஆர்.லட்சுமி, புதுச்சேரி:ஆயிரக்கணக்கான இன்ஜினியர்களும், டாக்டர்களும் வேலையில்லாமல் தவிக்கும் போது, தம் குழந்தைகளை இப்படிப்புகளில் சேர்க்க, அட்மிஷனுக்காக அலைந்து கொண்டிருக்கின்றனரே பெற்றோர்...
'இன்று வேலை இல்லை... என் பிள்ளை படித்து முடிக்கும்போது நிலைமை சீராகும்...' என்ற எதிர்பார்ப்பு தான், இதற்கு காரணம். இது இவர்களின் அறியாமை. இன்று, ஐயாயிரம் ரூபாய் சம்பளத்திற்குக் கூட இன்ஜினியரிங் பட்டதாரிகள் வேலைக்குப் போகத் தயாராக உள்ளனர்; வேலை தான் குதிரை கொம்பாக உள்ளது.
* ஜே.புஷ்பம், மானாமதுரை:பண்புள்ள ஒரு சமுதாயத்தை யாரால் உருவாக்க முடியும்?
பள்ளிக்கூட ஆசிரியர்களால்! அவர்களால் மட்டுமே பண்பும், வலிமையும் மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். மாணவப் பருவத்திலேயே பண்பட்டு விட்டால், சமுதாயம் ஒழுக்கமானதாகி விடும். ஆனால், பள்ளிக்கூட வாத்தியார்கள் பலர், ஸ்கூலுக்கு போகாமல் சம்பளப் பணத்தை வட்டிக்கு விட்டுக் கொண்டல்லவா உள்ளனர்!
ஜெ.சசிகலா, நீலகிரி: எவரெவருக்கு ஆயுள் குறைவு?
பயந்த சுபாவம் உள்ள அனைவருக்குமே ஆயுள் கெட்டி கிடையாது!