கூட்டுக் குடும்பம்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2018
00:00

''நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது... இந்த வீட்டுல ஒரு நல்லது நடக்கப்போகுது...''
மாலதியின் வீட்டு வாசலில் நின்று சத்தமிட்டுக் கொண்டிருந்தான், குடுகுடுப்பைக்காரன்.
'ஆமாம்... காலையிலேயே வந்துட்டான்... இதுங்க ரெண்டும் எப்போ வீட்டை விட்டு கிளம்புதுங்களோ அப்போதான் எனக்கு நல்ல காலம் பொறக்கும்; எல்லாம் என் தலையெழுத்து. மாமனார் - மாமியார் இல்லாத வீட்டுல தான் காலடி வைக்கணும்ன்னு நினைச்சேன்; கடைசியில...' எரிச்சலில் முணுமுணுத்தாள், மாலதி.
''என்னடி... காலையிலயே புலம்ப ஆரம்பிச்சிட்டே... பாப்பா எழுந்துட்டாளா...'' சேகர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, துாங்கியெழுந்து வெளியே வந்த மீனா பாப்பா, நேராக ஓடிச்சென்று கூடத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியின் மடியில் உட்கார்ந்தாள். அவளின் கலைந்திருந்த தலைமுடியைக் கையால் கோதி, சிறிய கொண்டை போட்டு, பேத்தியின் முகத்தை திருப்பி அழகு பார்த்தாள், பாட்டி வாசுகி.
தோட்டத்தில் இருந்து மல்லிகைப் பூவை பறித்து வந்த சிங்காரம், ''வாசுகி... இந்த பூவை கட்டி பாப்பா தலையில வச்சு விடு; அடுத்த வாரம் மொட்டையடிச்சு காது குத்திட்டா, கொஞ்ச நாளைக்கு, பூ வச்சு அழகு பாக்க முடியாது,'' என்றார். அப்போது, அறைக்குள், மகனும், மருமகளும் பேசுவது கேட்டது...
''என்னங்க... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... நீங்க மட்டும்தான் உங்க அப்பா, அம்மாவுக்குப் பிள்ளையா... சென்னையில இருக்கிற உங்க அண்ணன் கொஞ்ச நாளைக்கு இவங்களப் பாத்துக்கலாம்ல... காலத்துக்கும் நானே கஷ்டப்படணுமா... உங்க அண்ணன்கிட்டப் பேசுங்க... அவங்க நல்லா சம்பாதிச்சு சொகுசா தானே இருக்காங்க... பெத்தவங்கள பாத்துக்க என்ன குறைச்சலாம்,'' என்றாள், மாலதி.
''ஏய் வாய மூடு... எங்கம்மா, அப்பா காதுல விழுந்துடப் போகுது... அவங்க இருக்கிறதுல உனக்கு என்னடி கஷ்டம்... குடும்பத்துல பெரியவங்க இருக்கறது எவ்வளவு பெரிய பலம் தெரியுமா... பிள்ளைங்களுக்கு பெத்தவங்களா நாம எல்லாமே செஞ்சாலும், தாத்தா, பாட்டியோட, அரவணைப்புங்கறதே தனி. நம்ம பாப்பா கொடுத்து வச்சவடி... இதுபோல தாத்தா, பாட்டியோட சேர்ந்து வாழ முடியாத, என் அண்ணன் பிள்ளைங்கதான் பாவம்; போய் ஆகற வேலையப் பாரு...'' என்றான்.
அவர்கள் பேசியது காதில் விழுந்தும், கேட்காதது போல இருந்த கணவரை கண்ணீரோடு பார்த்தாள், வாசுகி.
''என்னங்க... இதுக்கு மேலயும் நாம இங்க இருக்கணுமா... எங்காவது போயிடலாம்,'' என்றாள்.
''இங்க பாரு வாசுகி... பேசுனது யாரு நம்ம மருமக தானே... விபரம் தெரியாம பேசறா; விடு,'' என்றார், சிங்காரம்.
கலங்கியிருந்த அவரது கண்களைப் பார்த்த மீனா பாப்பா, ஓடிச்சென்று ஒரு கைக்குட்டையை எடுத்து வந்து, ''தாத்தா... கண்ணுல துாசி விழுந்துருச்சா... எங்க கண்ணக் காட்டு...'' என்று, கைக்குட்டையை வாயில் வைத்து, ஊதி ஊதி சிங்காரத்தின் கண்ணில் ஒத்தினாள்.
''பாத்தியா வாசுகி... இவள விட்டுட்டு போகணும்ன்னு நினைக்கறயே,'' என்று பேத்தியை வாரி எடுத்து மடியில் வைத்துக் கொண்டார்.
அலுவலகத்திற்கு புறப்பட்ட கணவனிடம், ''என்னங்க... பாப்பாவோட காதணி விழாவுக்கு, பத்திரிகை கொடுக்க வேணாமா... நாள் நெருங்கிடுச்சு; நாளைக்கு உள்ளூர்ல பத்திரிகை கொடுத்துட்டு, திங்ககிழமை உங்க அண்ணன் வீட்டுக்குப் போயிட்டு வந்துடலாம்; அப்படியே அவங்ககிட்ட நான் காலையில சொன்னதப் பத்தியும் பேசணும்,” என்றாள்.
அவன் அமைதியாக இருந்ததால், அனுமதி கிடைத்து விட்டதாய் நினைத்து, வேலையில் சுறுசுறுப்பானாள், மாலதி.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை -
''மாலதி... சீக்கிரம் வேலையை முடி; உன் தோழி வீட்டுல பத்திரிகை கொடுக்கணும்ன்னு சொன்னியே... குடுத்துட்டு, அப்படியே அப்பா, அம்மாவுக்குத் துணியெடுத்துட்டு வந்துடலாம்,'' என்றான், சேகர்.
''ஆமா, இப்போ அதுங்களுக்கு துணியெடுக்கறதுதான் ரொம்ப முக்கியம்...'' முனங்கியபடி கிளம்பி வந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில், இருவரும் மாலதியின் தோழி வீட்டை அடைந்தனர். கூடத்தில், ஒரு சிறுவனும், சிறுமியும் தங்களது தாத்தா, பாட்டியுடன் பல்லாங்குழியும், பரமபதமும் விளையாடிக் கொண்டிருந்தனர். மாலதியை பார்த்ததும், மகிழ்ச்சியுடன் ஓடி வந்தாள், அவள் தோழி.
''அம்மா... நான் அடிக்கடி சொல்வேன்ல... இந்த ஊர்ல என் தோழி இருக்கான்னு... அது, இவதான், பேரு மாலதி,'' என்றதும், பெரியவர்கள் இருவரும் கைகூப்பி வணக்கம் தெரிவித்தனர். உடனே, விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளும் அவர்களுக்கு வணக்கம் சொல்லி, மீண்டும் விளையாட்டைத் தொடர்ந்தனர்.
அடுக்களையில் காபி போட்டுக் கொண்டிருந்த தோழியின் அருகே சென்ற மாலதி, ''என்னடி இது... உங்க அப்பாவும், அம்மாவும் சின்னப் பிள்ளைங்க கூட பல்லாங்குழி, பரமபதம் விளையாடிட்டு இருக்காங்க. படிக்கற பசங்க கெட்டுப் போயிட மாட்டாங்களா...'' என்றாள்.
''என்னது பசங்க கெட்டுடுவாங்களா... ஏற்றமும், இறக்கமும் உள்ளதுதான் வாழ்க்கைன்னு சொல்லிக் கொடுக்கறது தான், பரமபதம்; அதேமாதிரி, தங்களிடம் இருப்பதை எடுத்து, இல்லாதவர்களுக்கு கொடுக்கும் பண்பை சொல்லித்தரும் விளையாட்டு பல்லாங்குழி. இதுபோல நல்ல விளையாட்டுகளைத் விளையாடி தான் நாமெல்லாம் வளர்ந்தோம். ஆனா, இப்போ மொபைல்போன்லயும், வீடியோ கேம்லயும் காலத்தைத் தொலைச்சு, எவ்வளவு பிள்ளைங்க வீணாப் போறாங்க தெரியுமா... கூட்டுக் குடும்பம்ன்னு ஒண்ணு இருந்த வரைக்கும் பிள்ளைகளோட பழக்க வழக்கம் நல்லாத்தான் இருந்துச்சு. என்னைக்கு குடும்பங்கள் எல்லாம் தனிக்குடித்தனமா ஆச்சோ, அன்னையில இருந்து பிள்ளைகளோட பழக்க வழக்கமும் மாறிப் போயிருச்சு. ஏதோ, என்னோட பிள்ளைகள் குடுத்து வச்சதுங்க... இதுபோல நல்ல விளையாட்டுகள குழந்தைகளுக்கு செல்லித்தர வீட்டுல பெரியவங்க இருக்காங்க...'' என்றாள்.
காபி குடித்த பின், பத்திரிகையை கொடுத்து, ''சரிடி... அடுத்த வாரம் புதன் கிழமை பாப்பாவுக்கு காதணி விழா வச்சுருக்கோம்; மறக்காம, உங்க அப்பா, அம்மாவையும் அழைச்சிட்டு வந்துடு,'' என்றவள், விளையாடிக் கொண்டிருந்த பெரியவரிடம், “ஐயா... விசேஷத்துக்கு உங்கப் பொண்ணோட நீங்களும் அவசியம் வரணும்,'' என்றாள், மாலதி.
உடனே, ''அவ, எங்க மக இல்லம்மா... மகளுக்கும் மேலான மருமக,'' என்றார், பெருமையுடன்!
மாலதிக்கு யாரோ அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல் இருந்தது.
துணிக்கடையில், ''உங்களுக்கு எந்த மாதிரி புடவை வேணும்ன்னு சொன்னீங்கன்னா... எடுத்துப் போட வசதியா இருக்கும்,'' என்றாள், விற்பனை பெண்.
''விலை அதிகமாக இருந்தாலும் பரவாயில்ல; நல்ல உயர் ரக துணியில புடவையும், வேட்டியும் எடுத்துப் போடுங்க,'' என்றாள், மாலதி.
சட்டெனத் திரும்பிப் பார்த்த விற்பனை பெண், ''உயர் ரக துணி கேட்குறீங்களே... உங்க அம்மா, அப்பாவுக்கா...'' என்றாள்
''இல்லம்மா... என்னோட மாமனார், மாமியாருக்கு,'' என பதிலளித்த மாலதியை, ஆச்சரியமாகப் பார்த்தான், சேகர்.
வண்டியில் திரும்பி வரும் போது, “மாலதி... நீ காலையில சொன்னத நிதானமா யோசனை பண்ணிப் பாத்தேன்; காதணி விழா முடிஞ்சதும், அம்மா, அப்பாவ கொஞ்ச நாள், அண்ணன் வீட்டுக்கு அனுப்பி வைக்கலாம்,'' என்றான் சேகர்.
''அதுக்கு அவசியமே இல்லங்க... அவங்க, இனிமே கடைசி வரைக்கும் நம்மோடவே தான் இருப்பாங்க,'' என்ற மாலதியின் வார்த்தைகளில், அன்பின் இழை தெரிந்தது.

பூபதி பெரியசாமி

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X