ஃபிஜி சிவ சுப்ரமண்ய ஸ்வாமி ஆலயம் ! - வெளிநாட்டுக் கோயில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2011
00:00

அயல்நாட்டுக் கோயில்களை அகம் குளிர தரிசித்து வரும் நாம் இப்போது செல்லப்போவது. ஒரு தீவுக்கு. கடல் கடந்துசெல்லும் இடங்களில் மட்டுமல்ல ; கடல் நடுவே உள்ள தீவுக்குச் சென்றாலும், கடவுளை மறப்பதில்லை நம்மக்கள் என்பதை சொல்லாமல் சொல்லும் விதமாக அமைந்த கோயில் இது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் கடல்நீர். எங்கேயிருந்து பார்த்தாலும் தெரியும் ஆகாயம்... எங்கும் எப்போதும் சுதந்திரமாகச் சுற்றிவரும் காற்று... பச்சை விரித்தது போன்ற பூமி. இப்படிப் பஞ்ச பூதங்களில் நான்கு வெளிப்படையாக அமைந்திருக்கும் இந்தத்தீவு 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், அக்னியால் உருவானது. ஆமாம். கடலின் உள்ளே எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியதால் உருவானது இத்தீவு என்கிறார்கள்.

ஆபத்துக் காலத்திலும், காடுகள் நடுவிலும், கடலுக்கு மத்தியிலும் ஏற்படும் துன்பங்கள் அனைத்திலும் இருந்து நம்மைக் கவசம் போல் காப்பவை, இறை அருளே! அதிலும் குறிப்பாக ஸ்கந்தனாகிய முருகனே முன் நின்று கவசமாய்க் காப்பான் என்கின்றன புராணங்கள்.
இங்கேயும் நம்மவர்களுக்கு அந்த கந்தனே கைகொடுக்க மனம் கொண்டான் போலும். அதனால், பஞ்சபூதங்களும் ஒன்றுசேர்ந்து உருவானதுபோல் அமைந்துள்ள இத்தீவில் பஞ்சாட்சரப் பரமனின் மகன் ஆறுமுகன் அழகுறக் கோயில் கொண்டிருப்பது அற்புதமான தரிசனம்!
ஒரு நிமிஷம்... ""எந்த கோயில்... எங்கே இருக்கிறது?'' என்று ஆர்வமாகக் கேட்கிறீர்கள் அல்லவா ! தமிழகத்தின் தெற்கே பழநியில் கோயில் கொண்டிருக்கும் அந்த தண்டபாணியின் இந்தக் கோயில் அமைந்திருப்பது உலகத்தின் தெற்கே உள்ள துருவப் பகுதியிலிருக்கும் ஃபிஜி தீவில்.
அதிலும் தென் துருவத்திலேயே மிகப்பெரிய கோயில், இந்த ஸ்ரீ சிவ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்!
ஃபிஜி எங்குள்ளது என்று உலக வரைபடத்தில் தேடலாமா?
உலக வரைப்படத்தில், ஆஸ்திரேலியாவுக்கு வல மேற்புறம், நியூசிலாந்து நாட்டுக்கு மேலே பசிபிக் பெருங்கடலில் சின்னச் சின்னப் புள்ளிகளாக கொசகொசவென்று தெரியும் குட்டித் தீவுகள்தன் ஃபிஜி. என்ன, தேடிக் கண்டுபிடித்து விட்டீர்களா? வாருங்கள், பிறைசூடும் பெம்மான் மகன் முருகனை ஃபிஜி தீவில் தரிசிக்கலாம் !
தமிழ்க் கடவுள் முருகன் எப்படி இங்கே வந்தார்? தல வரலாறு இதோ.
ஃபிஜி நாட்டுக்கும் இந்தியர்களுக்கும் தொடர்பு இன்று நேற்றல்ல... 1870களிலேயே ஆரம்பித்துவிட்டது. ஆங்கிலேயர்கள் நம்மை ஆண்டு வந்த அந்தக்காலத்தில், இப்பகுதியில் கரும்புத் தோட்டத்தில் கூலி வேலை செய்ய இந்திய நாட்டில் இருந்து வேலையாட்கள் ஃ பிஜி நாட்டுக்கு அனுப்பப்பட்டனர். ஃபிஜி நாடு எங்கே உள்ளது என்று கூட தெரியாமல் கப்பலில் மாதக்கணக்காகப் பயணித்து கொத்தடிமைகளாக வந்து சேர்ந்திருக்கிறார்கள் நம் மூதாதையர்.
முதலில் வந்ததென்னவோ வடநாட்டைச் சேர்ந்த இந்தியர்கள்தான். பின்னர் நம் தமிழ்நாட்டு மக்களும் ஃபிஜி நாட்டில் வேலைக்கு வந்தபோது, கூடவே முருகப் பெருமானையும் கூட்டி வந்து விட்டனர். கௌமார வழிபாட்டுக்குப் பெயர் தமிழகத்தில் இருந்து சென்றவர்கள், இஷ்ட தெய்வமான முருகப் பெருமானை மறந்துவிட முடியுமா?
சுவா என்னும் நகரம்தான், ஃபிஜி நாட்டுத் தலைநகர். என்றாலும் இந்தியர்கள் அதிகம் சென்றடைந்தது நந்தி(NADI) நகரைத்தான். (ஆங்கிலத்தில் "நடி' என்று எழுதினாலும், நந்தி என்றுதான் தமிழில் சொல்கிறார்கள்.)
ஒப்பந்தப்பணி மீளவே முடியாது என்பது கூட தெரியாமல் வந்து மாட்டிக்கொண்ட தமிழர்கள் ஏராளம்.
இந்தியர்கள் இங்கு கூலி வேலையில் ஈடுபட்டு தினம் தினம் போராட்டமே வாழ்க்கையான சூழலில், ""என்னைக் காப்பாற்று ஆண்டவா!'' என்று குறை சொல்லி அழவும், நிம்மதி தேடவும் கூட ஒரு கோயில் இல்லை. அடிமைத்தனம், அடக்குமுறை இவை தாங்க முடியாமல், மன அழுத்தத்ததால் தற்கொலை செய்து கொண்ட இந்தியர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாம்.
கஷ்டமான அந்த நிலையில் இங்கு அடிமைப்பட்டுக் கிடந்த கூலித் தொழிலாளர்களுள் ஒருவரான ராசிபுரத்தைச் சேர்ந்த ராமசாமிபிள்ளை என்பவருக்கு, முருகனுக்க ஒரு கோயிலை இப்பகுதியில் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. எவ்வளவோ கஷ்டங்களுக்கு நடுவே மிகுந்த சிரமப்பட்டும் தளராமல் முயற்சி எடுத்து நந்தி நகரம், நந்தி ஆற்றின் கரையில் சிறிய கூரைக் கொட்டகையில் முருகன் கோயில் எழுப்பினார். சிறிய கோயில் என்றாலும் தங்கள் துயர் தீர்க்க ஆறுமுகனையே பெரிய அளவில் நம்பினார்கள் பக்தர்கள். துயரும் தொல்லையும் படிப்படியாக விலக, அதே சமயத்தில் குமரனின் கோயில் படிப்படியாக பெரிதாக வளர்ந்தது.
"பெரிய கோயில்' என்று ஃபிஜி நாட்டு மக்களால் அழைக்கப்படும் இக்கோயில் இன்று தென்துருவத்தில் இருக்கும் பிரமாண்டமான கோயில் என்றால், அது ஃபிஜி வாழ் இந்தியர்கள் அளித்த தாராள நன் கொடையினால்தான்.
ராமசாமி பிள்ளையின் முயற்சியால் உருவான கோயில் என்றாலும், பொதுமக்களுக்கும் உரிமையாகிவிட்டதால், அவர் மட்டும் நிர்வகிக்க முடியாது என்பதால் "தென் இந்திய சன்மார்க்க ஐக்கிய சங்கம்' என்ற ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பே இன்று வரை கோயிலை சிறப்பாக நிர்வகிக்கிறது.
தென்காசியில் வடிவமைக்கப்பட்ட கிரானைட் முருகன் சிலை 1926-ல் திரு.எம்.என்.நாயுடு அவர்களின் உதவியால் தருவிக்கப்பட்டது.
1931இல் முருகன் வள்ளி -தெய்வானை சமேத பஞ்சலோக உற்சவ விக்ரகம் திரு.ஏகாம்பர ரெட்டி மற்றும் பல இந்தியர்களின் உதவியுடன் வந்து சேர்ந்தது.
மேலும் 30 மூர்த்திகள் 1970-ல் டாக்டர் மகாலிங்கம் அவர்களின் உதவியால் கொண்டுவரப்பட்டது. படிப்படியாக ஆலயம் இப்படி வளர்ந்துகொண்டே போக, 1976-ல் புதிய இடம் வாங்கி கோயில் எழுப்ப வேண்டும் என்ற சங்கத்தின் யோசனை இந்திய அரசின் தலைமை கமிஷனரின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் இடப்பட்டுவிட்டாலும் அதன்பின்னர் ஓர் அடிகூட வளராமல் கட்டுமானப் பணி இப்போது அப்போது என்று இழுத்தடித்ததாம். ஏன் இப்படி என்று யோசித்த சமயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த சத்குரு சிவாய சுப்ரமணிய ஸ்வாமி என்பவர், ""தம்பிக்கு கோயில் கட்டுகிறேன் என்னும் அதீத ஆர்வத்தில் , அண்ணனை மறந்து விட்டீர்களே!'' என்று நினைவுபடுத்த, தடைப்பட்ட காரணம் அறிந்ததும், தாமதமே இல்லாமல் பிள்ளையாருக்கு ஒரு சன்னதி அமைத்தனர். அப்புறமென்ன, விக்னங்கள் அனைத்தும் தூள் தூளாகி துரிதமாக கோயில் பணி வேகமெடுத்தது.
இந்திய வாஸ்து சாஸ்திர விதிகளின் படியும், ஆகம சாஸ்திர விதிமுறைப்படியும் கட்டப்பட்டு, தென்னாட்டுக் கலை நயத்துடனான கோபுரத்துடன் கோயில் எழுந்தது. 1994ல் கும்பாபிஷேகமும் தமிழகப்பண்டிதர்களின் உதவியுடன் நடந்தது.
திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவரும் ஆயிரக்கணக்கான கும்பாபிஷேகங்கள் நடத்திப் பெருமை பெற்றவருமான சிவாச்சார்ய தியாகராஜகுருக்களை, தமிழக அரசே தலைமை குருக்களாக ஃபிஜி நாட்டு முருகன் கோயிலுக்கு அனுப்ப, ஃபிஜி மக்கள் இதுவரை கண்களிக்காத அபிஷேகங்களும், பூஜைகளும் அவரது வழிகாட்டலால் சேர்ந்து கொண்டன.
கும்பாபிஷேகம் நடந்த அன்று இங்கு அரசு விடுமுறை விடப்பட்டதாம் பள்ளிகளுக்கு. இந்தியர்கள் மட்டுமல்லாது ஃபிஜி நாட்டு மக்களும் கண்டுகளித்த பக்திப் பரவசமான நிகழ்ச்சி !
ஹெலிகாப்டர் ஒன்று வானில் வட்டமிட்டு ஆலயத்தை வலம் வந்து கோயில் கோபுரம். குருக்கள் மற்றும் பக்தர்கள் மீது பூமாரி பொழிந்ததை இன்றும் ஃபிஜி மக்கள் நினைவுகூர்கின்றனர்.
ஃபிஜி வானொலியில் லைவ் கமென்ட்டோடு நடந்ததாம் கும்பாபிஷேகக்கோலாகலம்.
தமிழகத்தைச் சேர்ந்த நாதஸ்வரக் குழுவினரின் மங்கள இசை முழங்க நாட்டியம், பாட்டு என அமர்க்களப்பட்டது.
புனித கும்பாபிஷேக நீர் பக்தர்களின் மேல் தெளித்து விழுந்த போது பக்திப் பரவசம் சட்டென்று பரவி எங்கும் தெய்வீக அதிர்வுகளுடன் அலை வீசியதை இன்றும் சிலிர்ப்போடு கூறுகின்றனர் ஃபிஜி நாட்டு மக்கள்.
சென்னையைச் சேர்ந்த கணபதி ஸ்தபதிதான் தலைமைச் சிற்பியாக முன்னின்று கோயில் எழுப்பியிருக்கிறார்.
இன்று தன்னிகரற்ற தமிழ்தெய்வம் போல் தலை நிமிர்ந்து நிற்கும் கோயிலைக் கண்டவுடன், புதிய நாடு, வேற்று மனிதர்கள், பிரிட்டிஷ் அரசின் கொத்தடிமைத்தனம், புரியாத பாஷை இவ்வளவையும் சகித்துக்கொண்டு என்ன பாடுபட்டு இக்கோயிலைக்கட்டியிருப்பார்கள் என்று மகா ஆச்சர்யம் ஏற்படுவது நிச்சயம் !
பழநி மலையில் இருக்கும் தண்டாயுதபாணிக்கு நிகராக இருக்கிறார் ஃபிஜி நாட்டு முருகன். அறிவு, பிறவாவரம், எதிரிகளை வெல்லும் திறன், ஆரோக்கியம், பயமற்ற மனம் ஆகிய பெருஞ்செல்வங்களைக் கொடுப்பவன் வெற்றிவேல் ஏந்தியிருக்கும் ஆண்டவன், சரவணபவன் என தமிழர்களோடு ஃபிஜி நாட்டினரும் இன்று நம்பிக்கையோடு வணங்குகிறார்கள்.
கோயில் உட்பிராகாரங்களில் புராணக் கதை கூறும் ஓவியங்கள் பல வண்ணங்களில் கண்ணைப் பறிக்கின்றன.
322 தீவுகள் கொண்ட நாடு ஃபிஜி ஆனாலும் விடி லெவு மற்றும் வனுவா லெவு ஆகிய இரு தீவுகளே ஃபிஜி நாட்டின் இரு முக்கியத் தீவுகள். கோயில் இருக்கும் பகுதி விடி லெவு தீவுப் பகுதியில் உள்ள நாடி நகரில். (அதுதான் நந்தி நகர்) தென்னை மரங்களும், வாழை மரங்களும் நிறைந்த நாடு ஃபிஜி மிதமான கிளைமேட் சுற்றுலா செல்ல சுகம். ஸ்கூபா டைவிங்க், போட்டிங், பவழக் குன்றுகள் என்று கடலில் பொழுதைக் கழிக்கலாம். ஃபிஜி நாட்டில் இந்து மதம் பரப்பிய முக்கியப் பகுதியாகச் செயல்பட்டிருக்கிறது இந் நகரம்.
ஃபிஜி நாட்டில் வடக்கிந்தியர்களே அதிகமாதலால், இங்குள்ள தமிழர்களும் காலப்போக்கில் தமிழை மறந்து இந்தி மொழியிலேயே உரையாடுகின்றனர்.
தமிழ் வம்சாவளி இந்தியர்கள்கூட இந்திமொழியிலேயே அதிகம் உரையாடுவதால், இந்நாட்டில் தமிழ் மொழி மெது மெதுவாக அழிந்து வருவது வருத்தத்தை அளிக்கிறது.
முற்காலத்தில் கடவுள்பால் உள்ள அபரிதமான பக்தியால், கடவுளின் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டிய தமிழ் மக்கள், இன்று நாகரிகப் பெயர்களுக்கு மாறிவருவது போல் இங்கும் மாடர்ன் பெயர்களையே விரும்புகின்றனர். தமிழக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் !
ஏகப்பட்ட இந்தியர்கள் இந்நாட்டில் வசிப்பதால், தீபாவளிக்கு விடுமுறை விடப்படுகிறது.
முருகன் பிரதான தெய்வமாதலால் தைப்பூசம், கந்த சஷ்டி மற்றும் பங்குனி உத்திரம் மிக விஷேசமாகக் கொண்டாடுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் கிருத்திகையன்று கோயில் வளாகத்தில் உற்சவ மூர்த்தி உலா வருவது அழகு.
இச்சா சக்தியையும் கிரியா சக்தியையும் ஆறுமுகனுடன் பிரதிபலிக்கும் வள்ளி தேவசேனா தேவியருடன் இணைந்து வரும் முருகப்பெருமானின் உற்சவ ஊர்வலம் கண்கவர் தரிசனம்.
சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன், மஹாலட்சுமி, நவகிரகங்கள் என்று தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இவற்றுக்கெல்லாம் மேலாக, இக்கோயில் முருகனையே குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு விட்டனர், ஃபிஜி நாட்டு மக்கள். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று வேலை காரணமாக சென்று விட்ட ஃபிஜி நாட்டு இந்திய வம்சாவளியினர், வருடம் தவறாறு வந்து பால் குடம், காவடி எடுப்பது பக்தியின் உச்சம். வேல் காவடி, அலகு குத்தல் இல்லாமல் முருக வழிபாடா? அவற்றையும் விட்டு வைக்கவில்லை.
அக்காலத்தில் வறுமை மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், இந்திய மக்கள் தைப்பூசத்திருவிழாவின்போது நடந்தே வந்து பத்து நாட்கள் கோயில் வளாகத்திலேயே தங்கி வழிபாட்டில் கலந்து கொள்வார்களாம்.
இன்று விழா நாட்களில் மூன்றுவேளை அன்னதானம் அமர்க்களப்படுகிறது. விழாவுக்கு வர இயலாத வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடை அனுப்பத் தவறுவதில்லை. தீவுகளால் நிரம்பிய நாடானதால், சில பக்தர்கள் படகில் கூட வருகின்றனர்.
கோயில் அர்ச்சகர்கள் யாவரும் தமிழகத்தைச் சேர்ந்தோரே.
டகி டகி, கொரொனுபு, நவுவா தீவுகளிலும் முருகனுக்கு கோயில்கள் இருந்தாலும், நந்தி முருகன் கோயிலே முதன்மையான, தொன்மையான ஃபிஜி நாட்டு இந்துக் கோயில்.
நந்தி நகரத்திற்கு நம்பி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களெல்லாம் தன் பன்னிருகரங்களால் அள்ளிக் கொடுப்பதில் வல்லவனாகத் திகழ்கிறார், ஃபிஜியின் நந்தி நகர் நாயகன் வடிவேலன்.

-ராதே வெங்கட்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X