இதுவரை யாரும் பார்த்திருக்காத அல்லது யோசித்திருக்காத தயாரிப்புகளை கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவது தான், ரேஸர் நிறுவனத்தின் பாணி. தற்போது 'தானே சார்ஜ் செய்துகொள்ளும் வயர்லெஸ் மவுஸ்' 'லிண்டா லேப்டாப்' என, இரண்டு புதுமையான தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இருக்கிறது. 'ஹைப்பர்ப்ளக்ஸ்' என்ற தொழில்நுட்பத்தின் மூலம் இயங்கும் வயர்லெஸ் மவுஸ், இயங்குவதற்கான மின்சாரத்தை, அதனுடன் வழங்கப்படும் மவுஸ் பேடில் இருந்தே எடுத்துக் கொள்கிறது. இதனால் வாடிக்கையாளர்கள், வயர்லெஸ் மவுஸ் சாதனத்தை தனியே சார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
ரேஸரின் புதிய லிண்டா லேப்டாப், 13.3 அங்குலம் குவாட் ஹெச்.டி., தொடுதிரை கொண்டது. இதனுடன் ஆண்ட்ராய்டு சார்ந்து இயங்கும் ரேஸர் போனை இணைத்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற லேப்டாப்களில் இருக்கும் மவுஸ்/டச்பேட் பகுதியில், ரேஸர் போனை பொருத்தி இணைக்க முடியும். ஒரே டச்சில், லேப்டாப்புடன் போன் இணைப்புப் பெற்றுவிடும். ரேஸர் போனின் 5.7 அங்குலம் டிஸ்ப்ளேவை, டச்பேட் அல்லது இரண்டாவது திரை போன்று பயன்படுத்திக் கொள்ள முடியும். லேப்டாப் கீபோர்டில் குரோமா பேக்லைட் வழங்கப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பும் நிறங்களை தேர்வு செய்து கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது.
இதர சிறப்பம்சங்களாக, 200 ஜி.பி., உள்ளீட்டு சேமிப்பு, பில்ட்-இன் கீ-போர்டு, 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், யு.எஸ்.பி., டைப்-ஏ போர்ட், யு.எஸ்.பி., டைப்-சி சார்ஜிங் போர்ட், 720 பிக்சல் திறன் கொண்ட வெப்கேமரா, டூயல்-அரே மைக்ரோபோன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே, வருகிற மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை குறிப்பிடப்படவில்லை.