மாணவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி
1. வானத்துக்கு ஆரம்பம், முடிவு உண்டா, அல்லது எல்லை அற்றதா?
ச.சாரதி, 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.
தலைக்கு மேலே நாம் பார்ப்பதை வானம், ஆகாயம் என்கிறோம். ஆனால், வளிமண்டலமும் வளிமண்டலம் தாண்டிய விண்வெளியும் கூட இந்த வானத்தில்தான் அடங்கியுள்ளன. விண்வெளி என்பது பிரபஞ்சத்தில் இருக்கிற எல்லாம் அடங்கியது. பூமி உட்பட எல்லாம் விண்வெளியில்தான் இருக்கின்றன. ஆகையால் விண்வெளிக்கு ஆரம்பம், முடிவு என அறிவியல்ரீதியாக எதையும் வரையறுக்க முடியாது.
ஒரு வாகனத்தை விண்கலம் எனவும், விண்ணில் பறக்கும் ஒருவரை விண்வெளி வீரர் எனவும் அழைப்பதற்கு வரையறை செய்துள்ளார்கள். 1905ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சர்வதேச வானூர்தி அமைப்பு (The Federation aeronautic International - FAI) பூமியிலிருந்து 100 கி.மீ. உயரத்தை கார்மன் எல்லை (Karman line) என வகுத்துள்ளது. எந்த உயரம் வரை ஆகாய விமான தொழில்நுட்பம் கொண்டு பறக்க முடியும், அதற்குத் தேவையான காற்று அடர்த்தி உள்ளது என ஆய்வு செய்து மதிப்பீடு செய்த கார்மன் என்பவர் பெயரில் இந்த வரையறை நிறுவப்பட்டது. இதை ஒட்டிதான் பல சர்வதேச விண்வெளிச் சட்ட திட்டங்கள் உள்ளன. சாதாரண விமானம் சுமார் 1 கி.மீ. உயரத்திலும், போர் விமானங்கள் அதிகபட்சம் 3 கி.மீ. உயரத்திலும்தான் பறக்க முடியும்.
2. நட்சத்திரங்கள் கருந்துளைகளாக மாறுவது ஏன்? அவை பூமி மேல் விழ வாய்ப்புகள் உண்டா?
எம்.ஆஷிகா, 10ஆம் வகுப்பு, பிரின்ஸ் மேல்நிலைப் பள்ளி, மடிப்பாக்கம், சென்னை.
மிகப்பெரிய அளவு ஆற்றல் கொண்ட, அதாவது சூரியனைப் போல பல மடங்கு ஆற்றல் கொண்ட, விண்மீனின் மையத்தில் எரிபொருள் தீர்ந்து, வெப்பம் ஏற்படுவது நின்ற பிறகு, தனக்குள் குலையும் நட்சத்திரங்களே கருந்துளைகளாக மாறுகின்றன. வேறு ஒரு விண்மீன் பூமியில் விழுவதற்கு எவ்வளவு வாய்ப்புக் குறைவோ அதுபோல கருந்துளைகளும் பூமியில் விழுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு.
பூமியின் மையம் நோக்கி நாம் இழுபடக் காரணம் ஈர்ப்பு விசை. ஓர் அணுவை மற்றொரு அணுவுக்கு அருகே கொண்டு சென்றால் ஓரளவுக்கு மேல் நெருங்காது. ஓர் அணுவில் உள்ள எலக்ட்ரான்கள் மற்ற அணுவின் எலக்ட்ரான்களுடன் வினைபுரிந்து ஒன்றை ஒன்று விலக்கும். இதனால்தான் பூமி தனக்குள் சுருங்கி, மையம் நோக்கிச் செல்லாமல் இருக்கிறது.
3. கறுப்பாக இருக்கும் உடல் நிறத்தை மாற்ற மருந்து ஏதேனும் உள்ளதா?
ப. சிலம்பரசன், 7ஆம் வகுப்பு, அரசு மேல்நிலைப்பள்ளி, குருவாயல், திருவள்ளூர்.
உடலின் நிறம் என்பது, தோலுக்குக் கீழே உருவாகும் ஒருவகை உயிரி நிறமியான 'மெலனின்' என்ற வேதிப்பொருள் சுரப்பதால் ஏற்படுகிறது. மெலனின் கூடுதலாகச் சுரந்தால் தோல் நிறம் மேலும் கறுமை அடையும். புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆபத்தான புற ஊதாக்கதிர்களை மெலனின் தடுத்து நிறுத்தும். ஆகவே, புற ஊதாக்கதிர் கூடுதலாகப் பாயும் நிலநடுக்கோட்டுக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் மனிதர்களின் தோல் கறுமையாக உள்ளது.
மெலனின் உற்பத்தியைச் செயற்கையாகக் கட்டுப்படுத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கூடலாம். தோல், முகம் முதலியவை வெண்மை அடைய சில அழகு சாதனப் பொருட்களும் இருக்கின்றன. இவற்றில் ஒளிரும் பொருட்கள் இருப்பதால் புற ஊதாக்கதிரை உள்வாங்கி வெள்ளை ஒளியை வெளிவிடும். இதனால்தான் முகம், தோல் போன்றவை வெண்மையாகக் காட்சி தருகிறதே தவிர தோல் வெளுக்காது. மொத்தத்தில் அழகு என்பது தோல் நிறத்தில் இல்லை, அன்பான உள்ளங்களில் இருக்கிறது.
4. பூமி சுற்றும்போது அதன் அதிர்வை நம்மால் உணர முடிவதில்லை, ஏன்?
பி.சிஜூ கவிதா, 6ஆம் வகுப்பு, புனித சூசையப்பர் மெட்ரிக் பள்ளி, திண்டிவனம்.
பஸ் பயணத்தில் ஏற்படும் சில அனுபவங்களை முதலில் பார்ப்போம். பஸ் கிளம்பும்போது இருக்கையின் பின்னோக்கி உந்தப்படுகிறோம்; பிரேக் பிடித்தால் முன்நோக்கிச் செல்கிறோம். பஸ் சீரான வேகத்தில் செல்லும்போது முன், பின் உந்துதல் எதுவும் இருப்பதில்லை. நெடுஞ்சாலைகளில் பஸ் செல்லும்போது அதன் இயக்கம் நமக்குப் புலப்படுவது இல்லை.
நியூட்டன் முதல் விதி இதைத்தான் சுட்டுகிறது. ஒரு பொருள் ஓய்வாக இருக்கும்போது அது ஓய்வாக இருக்கவே முயற்சி செய்யும். அதனையும் மீறி அதன் மீது உந்தம்- விசை செலுத்தும்போதுதான் அது நகரும். அதுபோல ஒரு பொருள் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும்போது அதே சீரான வேகத்தில் செல்லவே முயற்சிக்கும். அதற்கு எதிராக விசை செலுத்தினால் மட்டுமே அதன் இயக்கம் மாறும்; நிற்கும். அதாவது இயற்பியல் பார்வையில் சீர் வேகமும் ஓய்வு நிலையும் ஒன்றுதான்!