அன்று, ஒரு வயல்வெளிக்கு உமா மிஸ் அனைவரையும் அழைத்துவந்திருந்தார். விவசாயம் எப்படி நடைபெறுகிறது என்பதைச் சொல்லித் தருவதற்காக உருவாக்கப்பட்ட மாதிரி வயல்வெளி அது. காலை பள்ளியைவிட்டு கிளம்பியதில் இருந்தே, எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
மதியம் அங்கேயே சாப்பாடு. பரந்துவிரிந்த வெட்டவெளியில் தரையில் உட்கார வைத்து உணவு பரிமாறப்பட்டது. நான்கு சுவருக்குள் அமர்ந்து சாப்பிட்டுப் பழக்கப்பட்ட கதிருக்கு அந்தக் காற்றும், வெயிலும், பரந்த வெளியும் சொல்லமுடியாத மகிழ்ச்சியை அளித்தது.
உமா மிஸ் மரத்தினடியில் அமர்ந்திருந்தார். கைகழுவி வந்த கதிரைப் பார்த்தார்.
“அடுத்து என்ன மிஸ்?”
“கிராமத்துல விளையாடற விளையாட்டை உங்களுக்குச் சொல்லிக் கொடுக்கப் போறாங்க…எல்லோரும் கை கழுவிக்கிட்டு வரட்டும். ஆரம்பிச்சுடலாம்.”
“இது மாதிரி வாராவாரம் வந்தா நல்லா இருக்கும்ல மிஸ்?”
“நிச்சயமா. இயற்கைக்கிட்டே இருந்து கத்துக்கறதுக்கு எவ்வளவு இருக்கு தெரியுமா? இதுக்கு 'ஃபாரஸ்ட் ஸ்கூல்'னே பேரு. பல நாடுகள்ல இந்த முறை இருக்கு.”
ஓவியா ஆர்வமாக வந்து சேர்ந்துகொண்டாள். “என்ன பண்ணுவாங்க மிஸ்?” என்று கேட்கவும் செய்தாள்.
“ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, பக்கத்துல இருக்கிற ஒரு காட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க.”
“காட்டுக்கா?” என்று ஆச்சரியப்பட்டாள் ஓவியா. உமா மிஸ் தொடர்ந்து பேசத் தொடங்கினாள்.
1927லேயே ஹெச்.எல். ரஸ்ஸல் என்பவர் அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் உருவாக்கியது வனப் பள்ளி. வாரத்துக்கு ஒருநாள், ஒவ்வொருவகுப்பு மாணவரையும் வனத்துக்குள் அழைத்துச் செல்லவேண்டும். அங்கே போனவுடன், முதலில் பத்து நிமிடங்கள் முழு அமைதி. ஒவ்வொரு மாணவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு, அமைதியாக, சுற்றி நடப்பவற்றைக் காதுகொடுத்து, மூக்கு கொடுத்து, கேட்கவேண்டும்.
அதற்கு முந்தைய வாரம் வந்தபோது இருந்ததில் இருந்து என்ன மாறுதல் ஏற்பட்டுள்ளது என்பதை உணர முடியும். பசுமை பூத்துக் குலுங்கியிருக்கலாம், புதிய பறவை ஒன்று ஒலியெழுப்பலாம். கேட்காத வேறு சத்தங்கள் புதிதாக கேட்கலாம்.
“சூப்பர் மிஸ். புதுசா செடியெல்லாம் கூட முளைச்சுருக்குமே?”
“ஆமாம். அதையெல்லாம் குரூப்பாக எல்லோர் கிட்டேயும் பகிர்ந்துக்கணும். பின்னாடி, சின்னச் சின்னதான பல வேலைகள் செய்யணும், விளையாடணும்.”
“அப்ப, பாடமே சொல்லித்தர மாட்டாங்களா, மிஸ்?” ஓவியா இடையே புகுந்தாள்.
“நிச்சயம் பாடம் உண்டு. ஆனால், அது இயற்கையோட இருக்கும். மரத்தோட உயரத்தை எப்படி அளக்கணும், மண்புழு எப்படி உருவாகுது, காற்று ஏன் ஈரப்பதத்தோட இருக்குது, அந்தக் காட்டோட வரலாறு என்ன? எந்தச் சமயத்துல என்னென்ன பூக்கள் பூக்கும்? எப்போது காய்க்கும்?.... வரிசையா சொல்லித்தருவாங்க. ஆனால், அதையெல்லாம் நீங்கள் நேரடியாக பார்க்கலாம். புரிஞ்சுக்கலாம்.”
“எத்தனை வாரம் போகணும் மிஸ்?”
“ஆண்டு முழுவதும். விடுமுறையில, இன்னும் அங்கேயே கேம்ப் போட்டு, நிறைய சொல்லிக்கொடுப்பாங்க.”
இதனால் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றி உமா மிஸ் சொன்னது தான் இன்னும் அழகா இருந்தது. எல்லோரும் எல்லோரோடவும் பழக முடியும், தயக்கம் கிடையாது, கூச்சம் மறைஞ்சுபோயிடும், சேர்ந்து வேலை செய்யற பக்குவம் ஏற்படும், வெளிப்படையா பேசமுடியும். துணிச்சல் வரும்.
எல்லா வேலைகளையும் செய்யறதுக்கான தெம்பு, தைரியம், உடல் வலிமை கிடைக்கும். அடுத்தவங்களைப் பத்தி நல்ல அபிப்பிராயம், நம்பிக்கை ஏற்படும். சுற்றுச்சூழலையும் இயற்கையையும் எப்படிப் பாதுகாக்கணும், அதையெல்லாம் இன்னும் எப்படி பத்திரமா பார்த்துக்கொள்ளணும்ங்கற அக்கறை பிறக்கும்.
அதேசமயத்துல சொந்தமா முடிவு எடுக்கறது, கவனத்தோட ரிஸ்க் எடுக்கறது எப்படின்னு கத்துக்கமுடியும்.
“எல்லாத்தையும் விட, கவனம் நல்லா குவியும். மனத்தில் எந்தவிதமான குழப்பங்களும் இருக்காது. அதனால், அமைதியா இருக்கும். எதையும் நுணுக்கமாக புரிஞ்சுக்கற சக்தி ஏற்படும். இயற்கை உங்களுக்குள்ளே வந்துடும். பயம், கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகள் கூட மறைஞ்சு போயிடும். இயற்கை சொல்லிக் கொடுக்கற பாடம் ரொம்ப அற்புதமானது…”
உமா மிஸ் கடைசியா சொன்ன விஷயம்தான் ஓவியாவுக்குப் பிடிச்சிருந்தது. நல்லா படிக்கலாம். நல்லா ஞாபகம் வெச்சுக்கலாம். தேவையில்லாத கவனச்சிதறல் இருக்காது.
“பூச்சி, பொட்டுயெல்லாம் கடிக்காதா மிஸ்?” யோசித்தபடியே கேட்டான் கதிர்.
“கடிக்கும்தான். ஆனா, அதுவும் ஒரு பாடம். முதல்ல எப்படி எச்சரிக்கையா இருக்கணும்ங்கறதைக் கத்துக்கணும். கடிச்சுட்டா, அதுக்கு மாற்று மருந்து என்ன என்பதையும் தெரிஞ்சுக்கணும். அதுக்கும்மேல், அந்தப் பூச்சிகள் ஏன் கடிக்குது, அதனோட தன்மை என்ன என்பதையும் புரிஞ்சுக்கணும். இது இயற்கைக் கல்வி. யதார்த்த கல்வி. மனசுல ஆழமா பதியற கல்வி.”
(தொடரும்)
தகவல் பெட்டகம்
* ஃபாரஸ்ட் ஸ்கூல் போன்றே ஃபாரஸ்ட் கிண்டர்கார்டன்ஸ் என்ற கல்விமுறையும் தோன்றியுள்ளது. இது சிறு குழந்தைகளுக்கானது.
* தற்போது ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, அமெரிக்கா, மலேசியா, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், அயர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஃபாரஸ்ட் ஸ்கூல்கள் நடைபெறுகின்றன.
* இந்தியாவிலும் இதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.