ஜனவரி 29, 1970 - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பிறந்த நாள்
துப்பாக்கிச் சுடுதல் வீரர். ஏதென்ஸில், 2004இல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தியாவின் முதல் தனிநபர் வெள்ளிப் பதக்கமும், 2004ஆம் ஆண்டின் ஒரே பதக்கமும் இவர் பெற்றதுதான்.
ஜனவரி 30 - இந்திய தியாகிகள் நாள்
நாட்டுக்கு உழைத்த தியாகிகளின் கொள்கைகளை நினைவுகூர்ந்து அதற்காக நாம் உழைக்க வேண்டும். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அவர்களது தியாகத்தை நினைவுபடுத்தவும் மகாத்மா காந்தி மறைந்த தினத்தன்று இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
பிப்ரவரி 2, 1915 - குஷ்வந்த் சிங் பிறந்த நாள்
பத்திரிகையாளர், நாவலாசிரியர். பல சிறுகதைகள், நகைச்சுவைப் புத்தகங்கள் எழுதியுள்ளார். 'டிரெய்ன் டு பாகிஸ்தான்' என்ற முதல் நாவலை, இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மையமாகக் கொண்டு எழுதினார். இவருக்கு பத்மவிபூஷண் விருது 2007இல் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 2, 1971 - உலக ஈர நில நாள்
ஈரநிலங்கள் உயிரினங்களின் பல்வகைமைத் தன்மையைக் கொண்டிருப்பதால் 'பச்சை நுரையீரல்கள்' என அழைக்கப்படுகின்றன. இதனைப் பாதுகாப்பதன் மூலம் பல்லுயிர் வளங்கள், கலாசாரத்தைப் பாதுகாக்க முடியும். இதனைக் கருத்தில் கொண்டு இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
பிப்ரவரி 3, 1963 - ரகுராம் ராஜன் பிறந்த நாள்
இந்தியப் பொருளியல் வல்லுநர். இந்திய ரிசர்வ் வங்கியின் 23ஆவது ஆளுநராக இருந்தார். 2017ஆம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பட்டியலில் இவர் பெயரும் இடம் பெற்றது. தற்போது சிகோகோ பூத் பிஸினஸ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர் எழுதிய புத்தகம் 'ஐ டூ, வாட் ஐ டூ'.
பிப்ரவரி 4, 2000 - உலக புற்றுநோய் நாள்
சுற்றுப்புறச் சூழ்நிலை, உணவு, வாழ்க்கை முறை, மரபணு போன்ற காரணிகளாலும் புற்றுநோய் ஏற்படலாம். உலகில் புற்றுநோயை ஒழிக்க வேண்டுமென பாரிஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.