பாடச்சுமை, வீட்டுப்பாடங்கள், மாறிவரும் உணவு முறை போன்ற பல காரணங்களால் மாணவர்களுக்கு உடல்பருமன், சோர்வு, மனஅழுத்தம் போன்றவை ஏற்படுகின்றன. பள்ளிகளில் விளையாட்டுப் பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உடற்பயிற்சி என்பதே இல்லாமல் இயந்திரம்போல காலையில் எழுந்து பள்ளிக்குச் செல்வது, மாலை திரும்பியதும் வீட்டுப்பாடம், படிப்பு என மாணவர்களின் நாட்கள் கழிகின்றன. உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி மனதுக்குப் புத்துணர்ச்சியையும் தரக்கூடியது. மாணவர்களின் மனநலனுக்கு உடற்பயிற்சி எந்த அளவு அவசியம்? என்ற தலைப்பில் சென்னை, மாங்காடு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் உணவு, உடல் நல ஆலோசகர் ஷங்கர் ஜி அவர்களுடன் உரையாடினார்கள்.
ஷங்கர் ஜி: ஒவ்வொரு மனிதருக்கும் உடல் ஆரோக்கியம் எந்த அளவு முக்கியமோ அதே அளவுக்கு மன நலனும் முக்கியமானது. மனநலனில் அக்கறை செலுத்தாம இருந்தோம்னா உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். பல்வேறு காரணங்களால நம்மால உடற்பயிற்சி செய்ய முடியறதில்ல. இந்த நிலையில உடற்பயிற்சி எந்த அளவுக்கு மனநலனை ஆரோக்கியமா வெச்சுக்க பயன்படுதுன்னு நாம தெரிஞ்சுக்கலாம். பரபரப்பா இருக்கற இன்றைய வாழ்க்கை முறையில அன்றாடம் செய்யற வேலைகளையே உடற்பயிற்சியா மாத்திக்க முடியும். அதுக்காக தனியா நேரம் ஒதுக்கணும்னுகூட அவசியமில்ல. நீங்க அன்றாடம் என்ன உடற்பயிற்சியெல்லாம் செய்யறீங்கன்னு சொல்லுங்க.
கே.கே.சின்மயி, 7ஆம் வகுப்பு
ஸ்கூல் விட்டுப்போனா ஹோம்ஒர்க் செய்ய ஆரம்பிச்சுடுவேன். அதுக்கே நேரம் சரியா இருக்கும். காலையில மட்டும் கொஞ்ச நேரம் யோகா செய்யறேன். நான் செய்யற ஒரே உடற்பயிற்சி அதுதான். யோகா செஞ்சு முடிச்சதும் மைண்ட் பிரஷ்ஷா இருக்கும்.
ஹ.பு.ஹரிட்டா, 7ஆம் வகுப்பு
ஸ்கூல் விட்டுப் போனா கொஞ்ச நேரம் விளையாடுவேன். அதுக்குப் பிறகு படிப்பேன். உடற்பயிற்சி எதுவும் செய்யறதில்ல. சில நாட்கள்ல பள்ளி விட்டு வந்ததும் சோர்வா இருக்கும். அப்பல்லாம் விளையாடப் போக மாட்டேன்.
சொ.கீர்த்திகா, 7ஆம் வகுப்பு
நான் என் அம்மாவோட தினமும் 2 கி.மீ. வரை நடைப்பயிற்சி செய்யறேன். எனக்கு உடல் பருமனா இருக்கறதால நடைப்பயிற்சி செய்யறது நல்ல எக்ஸர்சைஸா இருக்கு. நடைப்பயிற்சி போய் வந்ததும் முகம், கை, கால்களை சுத்தப்படுத்திக்கிட்டு படிக்கவும், ஹோம்ஒர்க் பண்ணவும் ஆரம்பிச்சுடுவேன். நடந்துட்டு வந்த பிறகு நல்லா உற்சாகமாக இருக்கும். நிறைய படிக்க முடியும்.
ச.ஆகாஷ்நாதன், 8ஆம் வகுப்பு
நான் தினமும் காலையில கொஞ்ச நேரம் ஜாகிங் பண்ணுவேன். வேற எந்த உடற்பயிற்சியும் செய்யறதில்ல. விடுமுறை நாட்களில் மட்டும் கொஞ்ச நேரம் விளையாடுவேன். எனக்கு வெயில்ல விளையாடினா ரொம்ப டயர்டா ஆகிடுவேன். ஆனா ஜாகிங் போய் வந்த பிறகு நல்ல உற்சாகமா இருக்கும்.
வி.அக் ஷய் குமார், 7ஆம் வகுப்பு
நான் உடற்பயிற்சி எதுவும் செய்யறதில்ல. தினமும் அரை மணி நேரம் தியானம் பண்ணுவேன். எனக்கு ஹோம்ஒர்க் பண்ணவும், படிக்கவும்தான் நேரம் சரியா இருக்கு. அதனால உடற்பயிற்சி எதுவும் செய்ய முடியறதில்ல. ஒரே இடத்துல அமர்ந்து படிக்கறதால நிறைய நேரங்களில உடல் சோர்வா இருக்கும். கண்கள், தலை வலிக்க ஆரம்பிச்சுடும்.
எம்.பி.விஷ்வநாதன், 7ஆம் வகுப்பு
நான் தினமும் ஸ்கிப்பிங் பண்ணுவேன். ஒரு நாளைக்கு ஐம்பது முறையாவது ஸ்கிப்பிங் பண்ணுவேன். எனக்கு உயரமாகணும்னு ஆசை. அதுக்காகவாவது உடற்பயிற்சி பண்ணணும்னு நினைக்கறேன். படிக்கிற வேலை, வீட்டுப்பாடம் போன்ற காரணங்களால உடற்பயிற்சிக்குத் தனியா நேரம் ஒதுக்க முடியறதில்ல.
ஷங்கர் ஜி: நீங்க எல்லாம் மிகக் குறைவான உடற்பயிற்சியே சிலர் செய்யறீங்க. சிலர் அதுக்கு நேரமில்லைன்னு சொல்றீங்க. மனசைப் புத்துணர்ச்சியோட வெச்சுகிட்டாதான் நல்லா படிக்கவும், ஆக்டிவா இருக்கவும் முடியும். அதுக்கு உடற்பயிற்சி ரொம்ப அவசியம். உடற்பயிற்சிக்குன்னு நேரம் ஒதுக்க முடியலன்னு காரணம் சொல்லக்கூடாது. இப்ப எல்லாம் உடல் பருமன் (Obesity) பிரச்னை சின்ன வயசிலேயே இருக்கு. இதுக்கு நம்மோட உணவுப் பழக்கமும், உடற்பயிற்சி இல்லாம இருக்கறதும்தான் காரணம். உடற்பயிற்சின்னா அதுக்குன்னு நேரம் ஒதுக்கி செய்ய வேண்டியதில்ல. நாம அன்றாடம் செய்யற வேலைகளிலேயே பல உடற்பயிற்சி இருக்கு. ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது நடக்கணும். வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய உடற்பயிற்சிகளையும் செய்யலாம். யோகா பண்றது நல்லது. குனிஞ்சு நிமிர்வது, தோப்புக்கரணம் போடறது, ஸ்கிப்பிங் பண்றது இதுக்கெல்லாம் அதிக நேரம் தேவைப்படாது. இதையெல்லாம் பழகிக்கிட்டா உடல் மட்டுமில்ல, மனசும் ஆரோக்கியமா இருக்கும். உடற்பயிற்சியின் மூலம் மனம் ஒருநிலைப்படுகிறது. உற்சாகமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. அதனால உடற்பயிற்சியை நாம அவசியம் செய்யணும்.