பகிர்தலும் இன்பமே!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

04 பிப்
2018
00:00

படுக்கையில் இருந்து எழும் போதே, 'அப்பாடா... நாளையிலிருந்து, கால்ல கஞ்சிய கொட்டின மாதிரி பரபரக்க வேணாம்...' என நினைத்தார், ரகுநாதன். சிறிது நேரத்தில் குளித்து, அலுவலகத்திற்கு தயாராக வந்தவர், ''கோகிலா... எனக்கு, 'லஞ்ச்' வேணாம்; பிரண்ட்ஸ் கொடுக்கறாங்க...'' என்றார்.
''இன்னைக்கு நீங்க ரிடையராகப் போறீங்க... அதுக்காக உங்க பிரண்ட்ஸ், 'லஞ்ச்' கொடுக்கப் போறாங்கன்னு நேத்தே சொல்லிட்டீங்க,'' என்றவாறு, அலுவலகத்திற்கு செல்லவிருக்கும் தன் மகன்கள் மற்றும் மருமகள்களுக்கு தனித்தனியாக, 'லஞ்ச்' பாக்சை நிரப்பினாள், மனைவி கோகிலா.
அவருடைய பணி ஓய்வு நாளுக்காக, பிள்ளைகள் ஆசையாக வாங்கி தந்திருந்த கறுப்பு கலர் பேன்ட், இளம் நீல நிறத்தில் கோடுகள் போட்ட ஷர்ட், தங்க பிரேம் போட்ட கண்ணாடி அணிந்து, ஆபீஸ் கிளம்பி போனார், ரகுநாதன்.
கிளார்க்காக பணியில் சேர்ந்து, படிப்படியாக பதவி உயர்வு பெற்று அதிகாரியாக, 34 ஆண்டுகள் பணியாற்றி, இன்று ஓய்வு பெறுகிறார். அன்பான மனைவி, இரண்டு மகன்கள். இருவரும் இன்று நல்ல வேலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு பொருளாதார ரீதியில் எந்த குறையும் இருக்கக் கூடாது என்று வேலைக்கு செல்லும் பெண்களையே திருமணம் செய்து வைத்தார். மூத்தவனுக்கு ஒரு பையன்; இளையவனுக்கு ஒரு பையனும், பெண்ணும்!
கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டுமென்று, இடம் வாங்கி, மாடியில் இரண்டு மகன்களுக்கும், கீழே தங்களுக்குமாக வீடு கட்டினார். ஒரே சமையல்; முன்பு மகன்களை வளர்த்து ஆளாக்கிய கோகிலா, இப்போது, பேரன் - பேத்திகளை வளர்க்கிறாள்.
'ரிடையரான பின் கிடைக்கும், பி.எப்., மற்றும் கிராஜுவிட்டி பணத்தை மனைவி பெயரில் டிபாசிட் செய்துவிட வேண்டும்...' என்று நினைத்தவாறு, அலுவலகத்திற்குள் நுழைந்து, தன் இருக்கையில் அமர்ந்தார், ரகுநாதன். ஒவ்வொருவராக வந்து அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, களை கட்ட ஆரம்பித்தது, செக் ஷன்.
அவரிடமிருந்த ரிஜிஸ்டர்கள், பைல்கள் எல்லாவற்றையும் அவருக்கு கீழ் பணிபுரியும் சம்யுக்தாவிடம் ஒப்படைக்க வேண்டும்.
''சம்யுக்தா... சார்ஜ் எடுத்துக்கிறீங்களா?''
''ஓ.கே., சார்...'' என்று அவள் வர, அரை மணி நேரத்தில் வேலை முடிந்தது.
சார்ஜ் பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்த சம்யுக்தாவையே உற்றுப் பார்த்தார். 40 வயதிருக்கும்; துடிப்பான பெண். ஐந்து ஆண்டுக்கு முன், பணி மாறுதலில் அவள் இங்கு வந்த முதல் நாளே, அவளுடன் பிரச்னை ஏற்பட்டது.
'அதிகாரி கேம்ப் போயிருக்கார்; அவர் வந்தவுடன் அவர்கிட்ட நீங்க ஜாயின்ட் ரிப்போர்ட் கொடுங்க...' என்றார், ரகுநாதன்.
'அவருக்கு அடுத்த அதிகாரி நீங்க தானே... நீங்களே என் ஜாயினிங் ரிப்போர்ட்டை வாங்கலாமே...' என்றாள், சம்யுக்தா.
'அது வழக்கமில்ல மேடம்...' என்றதும், 'அப்ப, கேம்ப் போனவர் இன்னைக்கு வரலைன்னா, என் லீவு வீணாகிடாதா... நான், ஹெட் ஆபீசுக்கு புகார் செய்வேன்...' என்று அவள் எகிற, வேறு வழியில்லாமல், மேல் அதிகாரியிடம், போனில் விஷயத்தை சொல்லி, அனுமதி வாங்கி, அவளை பணியில் சேர அனுமதித்தார்.
அதன்பின்பும், அவளுடன் சின்னச் சின்ன மோதல்கள் ஏற்படவே செய்தது. ஆனாலும், இருவருக்குமே வேலையின் மீது அக்கறை இருந்ததால், அவை பெரிதாக்கப்படவில்லை. தன் வசீகரத் தோற்றம், படபடவென்ற பேச்சு, யார் தவறு செய்தாலும், தட்டிக்கேட்கும் தைரியம் என, எல்லாரையுமே கவர்ந்து விட்டாள், சம்யுக்தா. இன்றும் அவள் தான் அவருடைய பிரிவுபசார விழாவுக்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தாள்.
மாலை, 5:00 மணி - பிரிவுபசார விழாவுக்காக, தலைமை அலுவலர் அறைக்கு எல்லாரும் அழைக்கப்பட்டனர். டிபன், காபி சாப்பிட்டு, ரகுநாதனுக்கு, மாலை, மரியாதை எல்லாம் செய்த பின், நன்றி சொல்ல எழுந்தார், ரகுநாதன்.
''என், 24வது வயதில் வேலைக்கு சேர்ந்தேன்; ஆபீசுக்காகவும், வீட்டுக்காகவும் உழைத்து, எல்லா கடமைகளையும் நிறைவாக முடித்து விட்டேன்; இனி, பூரண ஓய்வு தான்,'' என்றார், திருப்தியாக!
''உங்க ஓய்வு காலத்தை, எப்படி கழிக்கிறதுன்னு ஏதாவது திட்டம் வச்சுருக்கீங்களா சார்,'' என்று கேட்டார், தலைமை அலுவலர்.
''உள் நாடு, வெளிநாடுன்னு உடம்பு ஒத்துழைக்கும் வரை சுற்றிக்கிட்டே இருக்கணும்ன்னு ஆசை; அடுத்த மாசம் சிங்கப்பூர் போக, பிளைட் டிக்கெட் ரிசர்வ் செய்திருக்கேன். அப்புறம், நாய் வளர்க்கணும்; அதோட விடியற்காலை வாக்கிங் போகணும். அது, எனக்கு நல்ல தோழனா இருக்கும். கம்ப்யூட்டரில் அனிமேஷன் படிக்கணும்; இப்படி நிறைய சின்னச் சின்ன ஆசைகள் இருக்கு. புதுசு புதுசா ஏதாவது கத்துக்கிட்டே இருந்தா, வாழ்க்கை எப்பவும் பிரஷ்ஷா இருக்கும்,'' என்றார்.
எல்லாரும் கை தட்டினர்.
சம்யுக்தா எழுந்து, ''சார்... உங்ககிட்ட சில சந்தேகங்கள் கேட்க வேண்டியிருக்கு... கேட்கலாமா?'' என்றாள்.
இந்த நேரத்தில் இவள் என்ன சந்தேகம் கேட்கப் போகிறாள் என்று ஆச்சரியப்பட்டாலும், ''கேளுங்க மேடம்,'' என்றார்.
''உங்க திட்டமெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு; உலகமெல்லாம் சுற்றி பாக்கணும்ன்னு சொல்றீங்க... அது நல்ல விஷயம் தான்; அதுல உங்க மனைவிக்கு என்ன பங்கு இருக்கு?''
''அவளுக்கு இதுல என்ன பங்கு இருக்கப் போகுது... என் பயண ஏற்பாடுகளை எல்லாம் அவ தான் கவனிச்சுக்கப் போறா...'' என்றார்.
''அப்ப, அவங்கள உங்களோட கூட்டிப் போக மாட்டீங்களா?''
''அது எப்படி... அவளுக்கு வீட்டை கவனிக்கவே நேரம் சரியாயிருக்கும். அவள நம்பித்தானே, நாங்க எல்லாரும் வெளியே போறோம்... அதுவும் தவிர, அவள கூட்டிப் போனால், அவள கவனிக்கவே நேரம் சரியாயிடும். அப்புறம் எங்கே ஊரை சுற்றிப் பாக்கிறது...'' அவருடைய கிண்டலுக்கு, எல்லாரும் சிரித்தனர்.
சம்யுக்தா விடவில்லை...
''நாயை தோழனா வளர்க்கணும்ன்னு சொல்றீங்களே... ஏன், உங்க மனைவி உங்களுக்கு நல்ல தோழியா இல்லயா?'' என்றாள்.
ரகுநாதனுக்கு சிரிப்பு வந்தது... ''என் மனைவி எனக்கு நல்ல தோழி தான்; அதுக்காக, நான் நாய் வளர்க்கக் கூடாதா, அதை தோழனா நினைக்க கூடாதா... நீங்க கேக்கறது, 'சில்லி'யா இருக்கு,'' என்றார்.
''சரி... புதுசு புதுசா கத்துக்கணும்ன்னு சொன்னீங்க... உங்க மனைவிக்கு அந்த மாதிரி ஆசை ஏதும் இருக்கான்னு இதுவரை கேட்டிருக்கீங்களா?''
பேச்சு வேறு திசை நோக்கி செல்வதை உணர்ந்த தலைமை அலுவலர், ''மேடம்... உங்களுக்கு இப்போ எதுக்கு இந்த தேவையில்லாத சந்தேகங்கள்... ரகுநாதனை சந்தோஷமாக வழியனுப்புவோம்,'' என்றார்.
ரகுநாதன், ''இல்ல சார்... அவங்க என்ன சொல்ல நினைக்கிறாங்கன்னே தெரியல... அதை தெளிவாக சொல்லட்டும்,'' என்றார்.
''தேங்க்ஸ் சார்... உங்கள கல்யாணம் செய்து வந்ததிலிருந்து உங்களுக்காக, உங்க பிள்ளைகளுக்காக, இப்போ பேரப் பிள்ளைகளுக்காக உழைக்கும், உங்க மனைவிக்கு ரிடையர்மென்ட் வேணாமா... அதை நீங்க யோசித்து பாத்த மாதிரியே தெரியலயே... 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு வரும் மெனோபாஸ், மூட்டு வலி இதெல்லாம் உங்க மனைவிய கஷ்டப்படுத்தாதா...
''இதுதவிர, சர்க்கரை நோயும் இருந்துட்டால் இன்னும் கஷ்டம். நாய் வளர்க்கணும்ன்னு ஆசைப்படுறீங்க, அந்த நாயை குளிப்பாட்டி, அதுக்கேத்த மாதிரி சோறு போட்டு, அது உடம்புக்கு வந்தால் பாத்துக்கணும். நீங்களோ அடிக்கடி டூர் போகணும்ன்னு ஆசைப்படுறீங்க... அப்போ உங்க மனைவிக்கு தானே வேலை கூடுதலாகும்...
''சதா காலமும் வீட்டில் உள்ளவங்களுக்கான சமையல் பற்றியே சிந்தித்து, வீட்டு நிர்வாகத்தை கவனிக்கும் அவங்களுக்கு ஓய்வு தேவைப்படாதா... உலகம் முழுவதும் இல்லாவிட்டாலும், அவங்களுக்கும் ஊர் சுற்றி பார்க்கவாவது ஆசை இருக்கத்தானே செய்யும்... உங்கள மாதிரி அவங்களுக்கும் சின்னச் சின்ன ஆசைகள் இருக்கலாம்; அதைப் பற்றி நீங்க எப்போதாவது அவங்ககிட்ட கேட்டிருக்கீங்களா...
''நம் குடும்ப அமைப்பில், பெண்கள், தங்களைக் காட்டிலும், தங்கள் குடும்பத்தையே அதிகம் நேசிக்கிறாங்க. குடும்பத்துக்காக சமரசமோ, தியாகமோ செய்யத் தயங்குறதில்ல. அதுதான் பெண்களோட பலவீனம்; அதுவே உங்களுக்கு பலமா போயிடுது. உங்க பேச்சுல என்னோட ஓய்வு, என்னோட சந்தோஷம்ன்னு தான் சொன்னீங்க... வீட்டை பத்தின கவலை ஏதும் உங்களுக்கு இல்லாமல், உங்க மனைவி பார்த்துக் கொண்டதால் தான் உங்களுக்கு இந்த நிம்மதியான ஓய்வு சாத்தியமாகி இருக்கிறது.''
இடைவெளி இல்லாமல், மூச்சு வாங்க பேசி முடித்தாள், சம்யுக்தா.
''மேடம்... நீங்க இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டிய அவசியமே இல்ல,'' என்ற தலைமை அலுவலர், ''ரகுநாதன் சார்... கார் ரெடியா இருக்கு; உங்க வீடு வரை உங்கள கொண்டு விடப்போகிறோம்,'' என்று எல்லாரையும் கிளப்பினார்.
நான்கு மாதங்கள் கடந்த பின், ஒருநாள், சம்யுக்தா மற்றும் செக் ஷனில் இருந்த மற்ற எல்லாருக்கும் போன் வந்தது... ரகுநாதன் தான் பேசினார்...
''நாளைக்கு எங்க, 'வெட்டிங் டே' உங்களையெல்லாம் பாத்து ரொம்ப நாளாயிடுச்சு... எல்லாரும், நாளைக்கு எங்க வீட்டுக்கு, 'லஞ்சு'க்கு வரணும்,'' என்றார்.
அடுத்த நாள், 'கிப்ட்' பார்சலோடு அவர் வீட்டுக்குள் நுழைந்தனர். குடும்பமே அவர்களை வரவேற்றது. ஆபீஸ் நிலவரங்களை சிறிது நேரம் பகிர்ந்து கொண்ட பின், சாப்பிட உட்கார்ந்தனர்.
தக்காளி சூப், புலாவ், சாம்பார், கார உருளைக் கிழங்கு, அவியல், அப்பளம், வடை, பாயசம் என்று சாப்பாடு அமர்க்களமாக இருந்தது.
''சாப்பாடு சூப்பர் மேடம்,'' என்று ரகுநாதனின் மனைவி கைகளை பிடித்து குலுக்கினாள், சம்யுக்தா.
''இல்லம்மா... இந்த பெருமை எல்லாம் இவருக்கு தான்; இவர் தான் இதை எல்லாம் சமைத்தார்,'' என்று கணவனை கை காட்டினாள்.
புன்சிரிப்புடன் அதை ஆமோதித்த ரகுநாதன், ''அன்றைக்கு சம்யுக்தா பேசின பேச்சு, என் மனைவியைப் பற்றி வேறு கோணத்தில் சிந்திக்க வைத்தது. புதுசு புதுசா கத்துக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்; சமையலும் ஒரு கலை தானே... என் மனைவிகிட்ட கொஞ்சம் கொஞ்சமா கத்துகிட்டேன். இப்பவும், என் பிளான் படி, என் மனைவியோடு டூர் போறேன். நாங்க வெளியே போகும்போதெல்லாம், மருமகள்கள் ரெண்டு பேரும் வீட்டு பொறுப்பை எடுத்துக்கறாங்க; அனுபவிக்கும் போதுதான் இந்த சந்தோஷம் புரியுது. சம்யுக்தா... உங்களுடைய வெளிப்படையான பேச்சு தான் என் ரிட்டையர்மென்டுக்கு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு,'' என்று நன்றி கூறினார்.
விருந்துண்ட திருப்தியுடன், அவரது மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷம், மனதையும் நிறைக்க, விடைபெற்று கிளம்பினர்.

என்.உஷாதேவி

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thulasingam Jayaram Pillai - Chenai,இந்தியா
05-பிப்-201803:13:35 IST Report Abuse
Thulasingam Jayaram Pillai லவ்லி கதை எழுத்தர் வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
05-பிப்-201800:46:11 IST Report Abuse
Girija ஒரு முப்பது வருஷத்திற்கு முன் வந்திருந்தால் கதையை ஓ கே என்று சொலலி இருக்கலாம் இன்னிக்கு சமையல் வேலை, வீட்டு வேலை என்று செய்து ஆபிசுக்கு சென்று வரும் கணவனை நட்டு நெளிவெடுக்கும் பெண் குலமே அதிகம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X