நாட்டு நாய்கள் பற்றி ஆராய்ச்சி செய்த, ஆய்வாளர் பொன் தீபங்கர் கூறும் அபூர்வ தகவல்களின் தொகுப்பு:
ஆடு, மாடுகளை அடைத்து வைத்திருக்கும் இடத்தை, தொழுவம் அல்லது பட்டி என்று கூறுவது பழங்கால தமிழர்களின் வழக்கம். பட்டியை பாதுகாக்கும் நாய்களைத் தான், அக்காலத்தில், பட்டி நாய்கள் என்று அழைத்தனர். மலையாளத்தில், நாய்களை, 'பட்டி' என்று அழைப்பதற்கும், இதுவே காரணமாக இருக்கலாம்.
பட்டி நாய்களில், கறுவாய் செவலை, கறுநாய் மற்றும் பச்ச நாய் ஆகிய மூன்று இனங்கள் இருந்துள்ளன. இவற்றில், உடல் முழுக்க செவலையும், வாய் பகுதி கறுப்பாகவும்
இருக்கும் கறுவாய் செவலைக்கு, அதிக வரவேற்பு இருந்துள்ளது. இது காவலுக்காகவும், செல்லப் பிராணியாகவும் வளர்க்கப்பட்டுள்ளது.
உடல் முழுக்க, கறுப்பு நிறத்தில் இருக்கும் கறுநாய், பட்டிகளை காவல் காக்க, மிகச் சிறந்தவையாக கருதப்பட்டுள்ளது. காரணம், இருளில் இந்நாய்கள் படுத்திருப்பது தெரியாமல் பிற விலங்குகள் வந்து மாட்டிக் கொள்ளும்.
பச்ச நாய் துரத்தித் துரத்தி கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்நாய்கள் இருக்கும் சுற்று வட்டார பகுதிக்கு யாருமே செல்ல முடியாது; பாய்ந்து வந்து கடிக்கும்.இதுபோன்று வேறு சில நாட்டு நாய்களும் இருந்துள்ளன. ஆனால், இன்று வெளிநாட்டு இன நாய்களின் மோகத்தால், நாட்டு நாய்களை தெருவுக்கு துரத்தி, தெரு நாய்களாக்கி விட்டோம்.
முன்பு, விவசாயிகள் தோட்டத்துக்கு செல்லும்போது, பட்டி நாய்கள் அவர்களுக்கு முன் நடந்து செல்லும். பாம்புகள் வந்தால், அவற்றின் குரைப்பு சத்தம் வித்தியாசமாக இருக்கும். அதை, உணர்ந்து, தங்களை காத்துக் கொள்வர், விவசாயிகள். எல்லாவிதமான விஷ ஜந்துகளையும் நாய்களுக்கு அடையாளம் தெரியும். அவைகளை தங்கள் எஜமானர் அருகே நெருங்க விடாமல் காக்கும். அதுபோலவே, மாட்டுப் பட்டியை காவல் காக்கும் இந்நாய்கள், மாடுகளை எந்த ஜந்துவும் அணுகாமல் பார்த்துக் கொள்ளும்.
நாட்டு நாய்கள், முன்பின் தெரியாதவர்கள் போடும் உணவை உண்பதில்லை.
வீட்டை மட்டுமல்ல, ஒரு கிராமத்தையே கட்டிக்காக்கும் திறன், பட்டி நாய்களுக்கு உண்டு.
இப்போது, தெரு நாய்களாக்கப்பட்ட பின்னரும், வீதியில் தினமும் வந்து செல்வோரை தவிர, இரவு நேரத்தில், புதிய நபர் யாராவது வந்தால், உடனே குரைக்கும். அதைத் தொடர்ந்து ஆங்காங்கே நிற்கும் நாய்களும் குரைக்கும். இப்படி தகவலை பரப்பி, ஒருசேர உஷாராக்கும் ஆற்றல் நாட்டு நாய்களுக்கு மட்டுமே உண்டு.
வேட்டி கட்டி செல்லும் நபர்களை பார்த்து, பெரும்பாலும், பட்டி நாய்கள் குரைப்பதில்லை. காரணம், வேட்டி கட்டியவன் தன்னை தாக்க மாட்டான் என்பது பட்டி நாய்களின் ஜீனில் பதிவாகி இருக்க வேண்டும்.
இன்று, நாம் கொண்டாடும் வெளிநாட்டு நாய்களின் மூலம் ஆஸ்துமா, சைனஸ் போன்ற, தொற்று நோய்கள் பரவும். குளிர் பிரதேசத்தில் வாழும் தன்மை கொண்ட அவைகளை, அதற்கேற்றபடி பராமரிக்க வேண்டும்.
ஆனால், நம் நாட்டின் கால நிலைக்கு ஏற்றாற்போல் நம்மோடு வாழும் பட்டி நாய்களால் எந்த நோயும் பரவாது. அவை, நோயால் பாதிக்கப்பட்டால், மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு தானாகவே சென்று இறந்துவிடும் அறிவாற்றல் கொண்டது.
கிராமங்களில், நாய் வளர்த்தவரின் வீட்டில் ஒருவர் உடல் நலமில்லாமல் இறக்கும் தருவாயில் இருந்தால், அவருக்கு பதிலாக நாய், தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றும் என்பர். எனவே தான், கால பைரவரின் வாகனமாக போற்றப்பட்டது, பட்டி நாய்.
பட்டி நாய்களை, சற்று உற்று கவனித்துப் பாருங்கள்... அது, ஒவ்வொரு சூழலிலும் வெவ்வேறு விதமாக குரல் எழுப்பும்; சிறு குழந்தைகளை கடிக்காது. பாதுகாப்பற்ற சூழலில் வீட்டை விட்டு வெளியே செல்லும் குழந்தைகளை பார்த்தால், குரைத்து, மிரட்டி மீண்டும் வீட்டுக்குள் வரும்படி செய்துவிடும். இதற்கு காரணம்,
முன்பு பட்டியிலிருந்து தொலைந்து போகும் கன்றுகளை, தேடிக் கண்டுபிடித்து திரும்ப கொண்டு வந்து சேர்ப்பதால் தான்.
எந்த உணவு வகைகளையும் சாப்பிடும், பராமரிப்பு செலவு குறைவானதும், நம் பாதுகாப்புக்கு உத்தரவாதமுமான நாட்டு நாய்களை வளர்ப்போம்!