அவன் பெயர் அனிருத்! (19)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

16 மார்
2018
00:00

சென்றவாரம்: காணாமல்போன அனிருத் பற்றி துப்பறிந்தனர் இளவேனிலும், சாகித்யாவும். ஜப்பானிய புகைப்பட கலைஞரை கொன்ற மர்ம கும்பல், அவரது நண்பரின் வீட்டையும் ஆராய்ந்திருந்தனர். இனி -


குடியிருப்புக்கு விரைந்தான், ப்யூமியோ.
வீட்டை திறக்க சென்றவன் திடுக்கிட்டான்; பூட்டு உடைக்கப்பட்டு, அலங்கோலமாய் இருந்தது; வீட்டுக்குள் இருந்த பொருட்கள் முழுக்க சிதறி கிடந்தன; யாரோ, எதையோ தேடி, கலைத்து போட்டிருந்தனர்.
மேஜை இழுப்பறைகளை இழுத்து, கீழே சரித்து விட்டிருந்தனர்.
பீரோக்கள், 'பாம்பூத்'தென்று திறந்து கிடந்தன.
ஏதோ நினைத்து கொண்டவனாய், பால்கனிக்கு ஓடினான்; அங்கே கிளி வளர்த்தான்.
''கினாடா...'' கூவினான்.
கிளியிடமிருந்து, எந்த பதிலும் இல்லை.
கூண்டை நோக்கி ஓடினான்.
கிளியை சுட்டு கொன்றிருந்தனர்; சிறகுகள் சிதறி, ரத்த வெள்ளத்தில் கிடந்தன; கிளியை எடுத்து, முகத்தில் வைத்து கதறினான்.
'அடப்பாவிகளா... கினாடாவை சுட்டுக் கொன்றதுக்கு பதிலா, என்னை கொன்றிருக்கலாமேடா...'நெஞ்சில் அறைந்து கொண்டான்.
ப்யூமியோ மடிக்கணினியை சோதித்து பார்த்தான்; கணினியின் கடவுச் சொல்லை கண்டுபிடிக்க முயற்சித்து, தோற்றிருந்தனர்.
மேஜையில், ஒரு சீட்டு காற்றில், 'பட பட'த்து கொண்டிருந்தது.
சீட்டை பிரித்தான் ப்யூமியோ.
அதில் -
'டேய் ப்யூமியோ... அகிகிகோ தொடர்பாக, ஏதேனும் ஆதாரங்கள் வைத்திருந்தால், அதை இந்திய, டிடெக்டிவ் யாரிடமும் தராதே; மீறினால், அகிகிகோ மாதிரி, அலங்கோலமாய் கொல்லப்படுவாய்' என்ற கடிதம், உடைந்த ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.
ப்யூமியோ முகத்தில், யோசனை படர்ந்தது.
'இந்த பயமுறுத்தலுக்கு பயப்படலாமா... கூடவே கூடாது; ஆத்ம நண்பனுக்கு செலுத்தும், இறுதி அஞ்சலியே புகைப்பட ஆதாரத்தை இந்திய டிடெக்டிவ்விடம் ஒப்படைப்பது தான். துரிதமாக செயல்பட்டு, அகிகிகோவின் புகைப்பட கலெக் ஷனை, இந்திய டிடெக்டிவ்வுக்கு மின்னஞ்சலில் அனுப்புவோம்...'
அகிகிகோவின், 2,000 புகைப்பட தொகுப்பை, இளவேனிலுக்கு அனுப்பினான், ப்யூமியோ. பின், டோக்கியோ மெட்ரோபாலிடன் போலீசுக்கு தகவல் அனுப்பினான்.
'என்னுடைய வீட்டில், அகிகிகோவின் கொலையாளிகள் எதையோ தேடி தோற்றிருக்கின்றனர்; என்னுடைய வளர்ப்பு கிளியை சுட்டுக் கொன்று, எனக்கு ஒரு எச்சரிக்கை குறிப்பும் எழுதி வைத்து, போயிருக்கின்றனர்; உடன் வந்து, விசாரணையை மேற்கொள்ளுங்கள்'
வாய்விட்டு முணு முணுத்தான் ப்யூமியோ.
'கிரிமினல்களா... வெகு சீக்கிரம் இந்தியக் காவல்துறையில் மாட்டி, தகுந்த தண்டனையும் பெறுவீர்; இறைவன் இருக்கிறான்; கெட்டவர்களை நிச்சயம் தண்டிப்பான்'
கடவுளை வணங்கினான்.
மோதிர முறுக்குகளை தின்றவாறே, மடிக்கணினியில் பார்வையை ஓட்டினான், இளவேனில்.
ப்யூமியோ அனுப்பிய மின்னஞ்சலை திறந்தான். புகைப்பட தொகுப்புகளை, ஒவ்வொன்றாக பார்வையிட்டான்.
தொடர்ந்து, ஒவ்வொரு புகைப்படமாய் பார்த்தபடியே வந்தான், இளவேனில். 1,100வது புகைப்படத்திலிருந்து, 2004 சுனாமி காட்சிகள் பதிவாகியிருந்தன.
கடலலைகள் உருமியபடி, 40 அடி உயரத்தில், சீறி, கரையுடன், 'சடு குடு' ஆடின.
கடற்கரை மனிதர்கள் பதறி, சிதறி ஓடுதல்.
பார்த்தபடியே வந்த இளவேனில், ஸ்தம்பித்தான்.
ஒரு புகைப்படத்தில், நான்கு வயது சிறுவனை இழுத்தபடி நான்கு தடியர்கள் காருக்கு ஓடுகின்றனர்; சிறுவன் வீறிட்டு அழுகிறான்.
சிறுவனை, காரில் திணிக்கின்றனர்.
கார், ஒளி வேகத்தில் பறந்தது.
அகிகிகோ, இரண்டு சக்கர வாகனத்தில், பின் தொடர்ந்து மேன்மேலும், புகைப்படங்களை சுட்டு தள்ளுகிறான்; காரின், 'நம்பர் பிளேட்' தெரிகிறது. ஒரு பள்ளி வளாகத்திற்குள் புகுகிறது.
கூடைப்பந்தாட்டம் நடக்கும், மைதானத்தின் முன், ஒரு ஹெலிகாப்டர் நின்றிருந்தது.
துாக்கி வந்த சிறுவனை அதில் ஏற்றுகின்றனர்.
ஹெலிகாப்டர் பறக்கிறது.
புகைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தினான்; மீண்டும், சிறுவன் வீறிட்டு அழும் புகைப்படத்துக்கு தாவினான்; சிறுவனின் முகத்தை பெரிது படுத்தினான்.
''சாகித்யா... நன்கு கூர்ந்து பார்; இந்த சிறுவன் தான் அனிருத்தா...''
''உனக்கு என்ன தோன்கிறது இளவேனில்...''
''புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தான் அனிருத் என, 90 சதவீதம் நம்புகிறேன்; இப்புகைப்பட ஆதாரங்களை, அகிகிகோ நம்மிடம் கொடுத்து விடுவான் என பயந்து தான், அவனை கொன்றிருக்கின்றனர்...''
''இந்த புகைப்பட ஆதாரங்கள் கூறுவது என்ன...''
''ஒரு வலிமையான கூட்டத்தால், அனிருத், சுனாமி நடந்த கடற்கரை பகுதியிலிருந்து கடத்தப்பட்டிருக்கிறான்...''
''சுனாமி வருவது, அந்த வலிமையான கூட்டத்துக்கு, முன்னாடியே தெரியுமா...''
''தெரியாது; அனிருத்தை நாகையில் வைத்து கடத்த, திட்டம் போட்டிருப்பர். அதன்படி, அனிருத்தை கடத்தி ஹெலிகாப்டரில் ஏற்றியிருக்கின்றனர்...''
''நம் துப்பறிதலின் மிக முக்கியமான அம்சம், அனிருத் உயிருடன் இருக்கிறானா, இல்லையா என்பதே...''
''ஆம்...''
''அனிருத் உயிருடன் இருக்கிறான் என்பது, நம் முதல் வெற்றி; அனிருத் எதற்கு கடத்தப்பட்டான், இப்போது எங்கிருக்கிறான், அனிருத்தை கடத்தியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு எல்லாம், பதில் காண வேண்டும்...''
''பெரும் தொகை கேட்டு, அனிருத் கடத்தப்படவில்லை; கடத்தப்பட்டான் என்பதை விட, கவர்ந்து செல்லப்பட்டான் என்பதே உண்மை. கடத்தியவர்கள், பெரும் பணக்காரர்கள். பணத்தை, தவறான வழியில் சம்பாதித்தவர்கள். எப்படியும், ஹெலிகாப்டர் தமிழகத்தை தாண்டி, வேற்று மாநிலத்திற்கு பறந்திருக்க கூடும்...''
''நீ சொல்வது உண்மை தான் சாகித்யா. என்னுடன் பழகி பழகி உன்னுடைய மொக்கையான மூளையும், கூர்மையாகிடிச்சி...''
''அதையேதான் நானும் உனக்கு சொல்றேன் இளவேனில்...''
''எதிரிகள், அகிகிகோவை கொன்றிருக்கின்றனர்; ப்யூமியோ உடமைகளை கலைத்து போட்டு அவனது கிளியை கொன்றிருக்கின்றனர்; எதிரிகளுக்கு எதிரான ஆதாரம் நம்மிடம் சிக்கி இருப்பது தெரிந்தால், நம்மையும் கொன்று விட துடிப்பர்...''
''உண்மை தான். நாமிருவரும் வெடிக்கப்போகும் ஒரு அணு குண்டின் மீது அமர்ந்திருக்கிறோம்...''
''இதுவரை நாம் துப்பறிந்தவற்றை அனிருத்தின் பெற்றோரிடம் தெரிவிப்போம்...''
''எதிராளிகள் ஹெலிகாப்டர் வைத்து, கடத்தி சென்றது உண்மையில் அனிருத்தா அல்லது அனிருத் சாயலில் இருந்த வேறொரு சிறுவனையா என்ற சந்தேகமும் எனக்குள் ஓடுது...''
''இந்த சிறுவன் தான், நாம் தேடி வந்த அனிருத் என்பது, உறுதியான பின், பெற்றோருக்கு தகவல் கூறுவோம்...''
''எதிராளிகள் அனிருத்தை கடத்திய விஷயம் வெளியாகி விடக்கூடாது என்பதற்காக தான், இத்தனை அதிரடி செய்கின்றனர்; உனக்கு இருக்கும் சைக்கிக் பவரை வைத்து, கடத்தப்பட்ட சிறுவன் தான் அனிருத் என்பதை, உறுதி செய்ய முடியாதா...''
''செய்கிறேன்...''
எதிராளிகள் துாக்கி செல்லும் சிறுவனின் முகத்தில் கை வைத்து, இரு கண்களை மூடி மோனநிலையில்ஆழ்ந்தான் இளவேனில்.
அவனின், கை, கால்கள் நடுங்கின; உடம்பு துாக்கிப் போட்டது.
புகைப்படம் எடுக்கப்பட்ட மைக்ரோ நொடியில், எதிராளிகள் பேசிய ஆடியோவை, தற்சமயம் காதுற்றான், இளவேனில்.
'சீக்கிரம் சீக்கிரம் அனிருத் வாயில், பிளாஸ்திரி ஒட்டுங்கள்; அவனை துாக்கி, காருக்கு ஓடுங்க...'
'மயக்க மருந்து நனைத்த கைக்குட்டையை, அனிருத்தின் நாசியில் வைங்க...'
'வைத்தோம்...'
காருக்குள் அவனை கிடத்துகின்றனர்.
'காரை ஹெலிகாப்டருக்கு செலுத்துங்க; அனிருத்தை அடுத்த, 12:00 மணி நேரத்தில் சேர்க்க வேண்டியவர் கையில் சேர்ப்போம்...'
அவர்கள் பேசும் பாஷை புரியவில்லை. ஆனால், பேச்சின் இடையிடையே, 'அனிருத்' என்ற வார்த்தை வந்து, அவர்கள் கடத்தியது அனிருத்தை தான் என்பது உறுதியானது.
'அனிருத்... நீ எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து, உன் பெற்றோரிடம் ஒப்படைப்பேன்...' அறையே நொறுங்கும் டெசிபல்லில் கூவினான், இளவேனில்.
- தொடரும்...

- ஆர்னிகா நாசர்

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X