காடுகள், மலைகள் நிறைந்த இடங்களுக்கு சூழல் சுற்றுலா செல்வது தற்போது அதிகரித்து வருகிறது. இயற்கை சூழலில் சுற்றுலா பயணியரின் அதிகரிக்கும் வருகையால், சூழல் மாசுபடுவதும், அங்குள்ள உயிரினங்கள் பாதிக்கப்படுவதும், உள்ளூர் மக்கள் பாதிப்புக்கு உள்ளாவதும் அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க, சூழல் சுற்றுலா இனிதாக அமைய, பின்வரும் யோசனைகளை பயணியர் பின்பற்றலாம்:
• காட்டுயிர்களை மதியுங்கள். வனப்பகுதிகளை நாம் விரும்பவதற்கு முதன்மை காரணமே, அங்குள்ள விலங்குகளும் தாவரங்களும் தான். அப்படியிருக்க செல்பி எடுப்பது, போட்டோ எடுப்பது என, வனவிலங்குகளை அச்சமூட்டவோ, தொந்தரவு செய்யவோ கூடாது. உங்கள் வசதிக்காக வனத்தை சிதைக்க வேண்டாம்.
• நீங்கள் செல்லும் பகுதியில் உள்ளூர் மக்கள் நடத்தும் தங்குமிடங்களில் தங்குங்கள். இதனால் உள்ளூர்க்காரர்களின் வியாபாரத்துக்கு உதவுவதுடன், உள்ளூர் அனுபவத்தையும் பெற முடியும். அவர்கள் எல்லாவற்றிலும் தங்களின் பாரம்பரியத்தையும், அழகையும் வெளிப்படுத்த விரும்புவதால், உங்களுக்கும் நீங்கள் தேடிச் செல்லும் அனுபவம் கிடைக்கும்.
• முடிந்தவரை உள்ளூர் பொருட்களை வாங்குங்கள். நீங்கள் செல்லும் ஊரை முழுமையாக அறிய சிறந்த வழிகளில் ஒன்று, உள்ளூர் மார்க்கெட்டை சுற்றிப் பார்த்து பொருட்கள் வாங்குவது. உள்ளூர் மக்களுக்கு ஆதரவளித்த உணர்வுடன், தனித்துவமான நினைவுப் பரிசுகளும் உங்களுக்கு கிடைக்கலாம்.
• நீரை வீணாக்க வேண்டாம். குடிப்பதோ குளிப்பதோ, முடிந்தவரை நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்.
• உள்ளூர் வழிகாட்டியுடன் பயணியுங்கள். அப்போதுதான், நீங்கள் சென்றுள்ள இடம் பற்றி நீங்கள் படித்திருக்காத, கேள்விப்பட்டிருக்காத பல சுவாரசியமான விஷயங்கள் தெரிய வரும். மேலும், அவர்கள் எதிர்பாராத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்றும் தெரிந்து வைத்திருப்பார்கள்.
• நீங்கள் செல்லுமிடத்தில், உள்ளூர் மக்களுடன் உரையாடவும், சந்தேகங்கள் மற்றும் தேவைகளை கேட்கவும், முக்கியமான ஒரு சில வார்த்தைகளையாவது தெரிந்து வைத்திருங்கள்.
• ஒரு பொறுப்பான பயணியாக உங்கள் பேக்கிங் இருக்கட்டும். கலாசார ரீதியாக பொருத்தமான உடைகளை எடுத்துச் செல்லுங்கள். மறுசுழற்சி செய்ய முடியாத தூக்கி வீசக்கூடிய பொருட்களை தவிருங்கள்.
• உள்ளூர் மக்களையோ, அவர்களின் உடமைகளையோ போட்டோ எடுப்பதற்கு முன்பாக, அவர்களிடம் அனுமதி பெறுங்கள்.