கோடையில் வரவேற்கும் குளிர் மலைகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2018
00:00

கோடை வந்துவிட்டது, குழந்தைகளுக்கு விடுமுறையும் தொடங்கப் போகிறது. கொளுத்தப் போகும் கோடையில், சில நாட்களேனும் பரபரப்பு வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சுற்றுலா சென்று வந்தால், உடலுக்கும் புத்துணர்வு கிடைக்கும், மனதிலும் புது உற்சாகம் பொங்கும். நகரத்தின் பரபரப்பு, தூசி, புகை, மன அழுத்தம், இவற்றிலிருந்து தப்பிக்க, தமிழ்நாட்டில் குளிர் மலைகளுக்கு பஞ்சமில்லை. ஆனால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற இடங்களும் கோடையில் குவியும் சுற்றுலா பயணியரால் நெரிசலில் தவிப்பதால், தமிழ்நாட்டிலுள்ள நெரிசல் குறைந்த, அதே நேரத்தில் இயற்கை அழகு நிறைந்த சுற்றுலா இடங்களை இங்கு பட்டியலிடுகிறோம்.

வரவேற்கும் வால்பாறை
மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரளமும், தமிழகமும் சந்திக்கும் இடத்தில், கோயம்புத்தூரில் இருந்து, 105 கி.மீ., தொலைவில் அமைந்திருக்கிறது வால்பாறை. கடல் மட்டத்தில் இருந்து, 3,400 அடி உயரத்தில் இருக்கும் இங்கு எப்போதும் மழைச் சாரல் தான். பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு, 40 கொண்டை ஊசி வளைவுகள் வழியே மலைச் சாலையில் பயணிப்பது அலாதியான அனுபவமாக இருக்கும்.
விடியற்காலையிலும், மங்கிய மாலை வேளையிலும் பயணிக்கும் போது, யானைகள், சிங்கவால் குரங்குகள், காட்டுப் பன்றிகள், மலபார் அணில்கள், மான்கள் போன்றவற்றை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இங்கு சிறுத்தைகளும் யானைகளும் அதிகம்.
குரங்கு அருவி, அட்டக்கட்டி, ரொட்டிக் கடை போன்ற இடங்களும் உங்களை கவரும்.
இங்கு பெரும்பான்மை டீ எஸ்டேட்கள் தான். பசுமையின் வனப்பையும், இயற்கையின் வண்ணத்தையும் ரசிக்க, வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாகும். மலிவு விலை லாட்ஜ்கள் முதல் ஆடம்பர காட்டேஜ்கள் வரை, இங்கு தங்குமிடங்கள் நிறைய உண்டு.
வால்பாறைக்கு அருகில் சோலையார் அணை - 20 கி.மீ., சின்னக் கள்ளாறு - 15 கி.மீ., ஆழியார் அணை - 38 கி.மீ., டாப் சிலிப் - 37 கி. மீ., அக்கா மலை -16.கி.மீ, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளன.
தவிர பிரம்மிப்பூட்டும் நிறைய வியூ பாயின்ட்களும், பள்ளத்தாக்குகள் மற்றும் சிற்றாறு களும் உண்டு. இரண்டு அல்லது மூன்று நாட்கள் செலவிட்டால், எல்லா இடங்களையும் பார்த்துவிட்டு வரலாம்.


அழகிய அக்கா மலை
பச்சைப் பசேல் புல்வெளி போர்த்திய சிறு சிறு குன்றுகளாக வளர்ந்து நிற்கும் மலைப்பகுதி இது. வனத்துறையின் அனுமதி பெற்று தான் அக்கா மலைக்கு போக முடியும். இங்கு எப்போதும் குளிர்ச்சியை உணரலாம். சுற்றுலா பயணியருக்கு வழிகாட்ட இங்கு உள்ளூர் கைடுகளும் உள்ளனர். இந்தப் பகுதி பசுமைச் சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளனர். பொள்ளாச்சியில் இருந்து இங்கு பயணிக்கலாம்.


தனித்துவமான டாப் ஸ்லிப்
கோயம்புத்தூரில் இருந்து, 76 கி.மீ., தொலைவில், ஆனைமலையில் அடர்ந்த காட்டுப் பகுதியான, இந்திரா காந்தி வன விலங்குகள் சரணாலயம்தான் டாப் சிலிப் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள வளர்ப்பு யானைகள் முகாம் மிகவும் பிரபலம். மலையில் ஏறும்போதே இருபுறமும் அடர்ந்த மூங்கில்கள் சாலைக்குக் குடை பிடிக்கும். அடர்ந்த காட்டுப் பகுதியையும், இயற்கையான சூழலையும் கண்கள் சலிக்கும் அளவுக்கு அனுபவிக்கலாம்.
வனப் பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை போன்ற விலங்கு இனங்களும், அபூர்வமான பறவை இனங்களும் இருக்கின்றன. இயற்கை ஆர்வலர்களுக்கும் இயற்கைச் சூழலில் தங்கிச் செல்ல விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடம் இது. இங்கு தங்குமிடம் கிடையாது.


யானை சபாரிக்கு பரம்பிக்குளம்
டாப் சிலிப்பில் இருந்து 23 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள பரம்பிக்குளம் அணைக்குச் செல்ல, கேரள வனத் துறையின் அனுமதி வாங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு சுமார் 30 வாகனங்களை மட்டுமே அனுமதிப்பார்கள். இந்தியாவில் உள்ள முக்கிய சூழியல் இடங்களில் ஒன்று பரம்பிக்குளம். இங்கு வனத்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்றும், மர வீடுகளும் வாடகைக்கு கிடைக்கின்றன.
இதற்கு பொள்ளாச்சியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இங்குள்ள மர வீடுகளில் தங்குவது வித்தியாசமான அனுபவமாக இருக்கும். வனத்துறையினர் ஏற்பாடு செய்யும் யானை சபாரியில் செல்லும்போது, வன விலங்குகளை காணும் வாய்ப்பு சில சமயம் கிடைக்கும்.


மயக்கும் மேகமலை
அவ்வப்போது மழை, தலையை வருடிச் செல்லும் மேகங்கள், சுடாத சூரியன், அமைதியான, மாசற்ற காற்று, இவையெல்லாம் இருக்குமிடம், மேகமலை. தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியில் உயர்ந்து நிற்கும் மலைத் தொடர் இது. ஆங்காங்கே பசுமையான தேயிலைச் செடிகள் சூழ அழகான நீர்த்தேக்கங்கள் இருக்கின்றன. சுருளியாறு மின்சார திட்டம் இங்கு செயல்படுகிறது. மஹாராஜா மெட்டு என்ற இடத்தில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கின் முழு அழகையும் ரசிக்கலாம். இங்கிருந்து முல்லைப் பெரியார் நீர்த்தேக்கத்தையும், கண்ணகி கோவிலையும் பார்க்க முடியும். இங்கு யானைகள் நடமாட்டமும் உண்டு.
குறுகிய சாலை தான் என்பதால் பயணத்தின் போது கூடுதல் கவனம் தேவை. ஆனால் அற்புதமான பயண அனுபவத்துக்கு உத்தரவாதம் உண்டு. 45 கி.மீ., தொலைவில் இருக்கும் சின்னமனூரில் இருந்து மேகமலைக்கு செல்லலாம்.
வழியிலுள்ள ஹைவேவிஸ் என்ற இடத்திலிருக்கும் தங்கும் அறைகளை முன்பதிவு செய்துவிட்டுச் செல்வது நல்லது. அருகிலுள்ள தேனியிலும் அனைத்து விதமான விடுதிகளும் இருக்கின்றன. சின்னமனூரில் இருந்து சுருளி அருவி - 27 கி.மீ., தேக்கடி - 44 கி.மீ., தேனி - வைகை அணை - 15 கி.மீ., ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம்.


மசினகுடி
அதிக குளிரோ, வறுத்தெடுக்கும் வெயிலோ இல்லாமல், இதமான வெப்பநிலையை எப்போதும் தக்க வைத்திருக்கும் மசினகுடி வனப்பகுதி, யானை சபாரிக்கும், காட்டுப் பாதையில் பயணப்படுவதற்கும் ஏற்ற இடம். யானைகள், மான்கள், மலை அணில், சிறுத்தை, காட்டு மாடுகள், புலி போன்றவை இங்குண்டு.
யானைகள் நீர் அருந்த குடும்பம் குடும்பமாக வருவதை யும், தெப்பக்காடு யானைகள் காப்பகத்தில் உள்ள யானைகளுக்கு காலை, மாலை உணவு அளிப்பதையும் பார்க்கலாம். தமிழகத்தையும் கர்நாடகத்தையும் பிரிக்கும் ஒரு சிறு ஓடைக்கு அந்தப் பக்கம் இருக்கிறது, பந்திப்பூர் வன விலங்குச் சரணாலயம். அங்கும் சஃபாரி, டிரெக்கிங் போன்றவை உண்டு. பந்திப்பூரைக் கடந்து சென்றால், அருகில் தான் கேரளத்தின் வயநாடு சரணாலயப் பகுதி உள்ளது.
மசினகுடிக்கு, ஊட்டியில் இருந்து மைசூர் நெடுஞ்சாலையில் கூடலூர் வழியாகவும் 68 கி.மீ., செல்லலாம். அல்லது கல்லட்டி வழியாகவும் - 29 கி.மீ. செல்லலாம். ஈரோடு -சத்தியமங்கலத்தில் இருந்து சாம்ராஜ்நகர் வழியாக குண்டக்கல், பந்திப்பூர் வழியாக மசினகுடி வரலாம்.
தெப்பக்காடு ரிசப்ஷன் அருகே வனத்துறை விடுதிகள் இருக்கின்றன. முன்பதிவு செய்வது அவசியம். மசினகுடி ஊருக்குள்ளும், அதைச் சுற்றிலும் ஏராளமான தங்கும் விடுதிகளும், ரிசார்ட்டுகளும் இருக்கின்றன.


ஏலகிரி
வேலூர் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது ஏலகிரி மலை. கடல் மட்டத்திலிருந்து 1110 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது பாரா கிளைடிங், மலையேற்றம், டிரெக்கிங் போன்ற சாகச விளையாட்டுகளுக்கு ஏற்றது. இங்கு செலவிட ஒரு நாள் போதுமானது. ஏலகிரிக்கு அருகில் வேலூர் - 94 கி.மீ., ஏற்காடு - 145 கி.மீ., பெங்களூரு - 178 கி.மீ., போன்ற முக்கிய சுற்றுலா மையங்கள் உள்ளன.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X