கோடையில் இளைப்பாறலாம்! | சுற்றுலா | Tour | tamil weekly supplements
கோடையில் இளைப்பாறலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

06 ஏப்
2018
00:00

கோடையின் கடுமையில் இருந்து தப்பிக்க குளிர்மலைகள் மட்டுமல்ல, பசுமைப் போர்த்திய இயற்கையழகு நிறைந்த இடங்களும் சிறந்தவையாகும். தினசரி கடமைகளில் இருந்து விடுபட்டு, சில நாட்கள் புது உலகில் சஞ்சரிப்பது, புதிய உற்சாகத்துடன் வரப்போகும் நாட்களை எதிர்கொள்ள உதவும். இதற்கு பொருத்தமான, சில சுற்றுலா தலங்களை பரிந்துரைக்கிறோம்.


இயற்கை செழிக்கும் 'சைலன்ட் வேலி'
நீலகிரி மலைத்தொடரில், கேரளாவின் எல்லை மாவட்டமான பாலக்காட்டில் அமைந்துள்ள, இயற்கை அழகு நிறைந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சைலண்ட் வேலி. சைலன்ட் வேலிக்குள் வனத்துறையின் ஜீப்பில் தான் பயணிக்க வேண்டும். ஜீப் சபாரியில் வனவிலங்குகளை காண வாய்ப்பு கிடைக்கும். ஆண்டு முழுவதும் சுற்றிப்பார்க்க ஏற்ற இடம் என்றாலும், டிசம்பர் - ஏப்ரல் காலகட்டத்தில், தங்கள் குட்டிகளுடன் நீர் அருந்தவரும் நிறைய விலங்குகளை காணலாம். கோடையில் சராசரி வெப்பம் 39 டிகிரியாக இருக்கும். இங்குள்ள 125 அடி உயர டவரில் ஏறி நின்று, சைலன்ட் வேலியின் மொத்த அழகை ரசிக்கலாம்.
கோவையில் இருந்து ஆனைகட்டி, அட்டப்பாடி, முக்காலி வழியாக பயணித்தால், 114 கி.மீ., தொலைவில் சைலன்ட் வேலி வந்துவிடும். இங்கு 'எக்கோ' டூரிஸம் காட்டேஜ்கள் மற்றும் கட்டணம் அதிகமான 'டிரீ டாப்' காட்டேஜ்களும் உண்டு. சைலன்ட் வேலிக்கு அருகில், மலம்புழா அணை- - 76 கி.மீ., அட்டப்பாடி - 22 கி.மீ., பாலக்காடு கோட்டை - 73.6 கி.மீ., நெல்லியம்பதி - 127 கி.மீ., மசினகுடி - 168.5 கி.மீ., போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன.
கட்டணம்: நுழைவுக்கட்டணம்: நபருக்கு ரூ 50/-
அனுமதி நேரம்: சுற்றிப் பார்க்க - காலை 6:45 முதல் மதியம் 2:45 வரை
ஜீப் சபாரிக்கு : சபாரிக்கு - ரூ 1,600/- (5 பேருக்கு) + கைடுக்கு ரூ.150/-
காலை 8:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.


சாரல் அடிக்கும் 'குடகு (எ) கூர்க்'
எப்போதும் நிலைத்திருக்கும் குளிர்ச்சி, அவ்வப்போது தலைகாட்டும் மெல்லிய வெயில், சூழலை இதமாக்க வலிக்காமல் அடித்துவிட்டுப் போகும் சாரல் என, உங்களை மெய்ச் சிலிர்க்க வைக்கும் கூர்க், கர்நாடகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
பசுமைமாறாக் காடுகள், பொங்கி வழியும் நீர்வீழ்ச்சிகள், ஓடைகள், ஆறுகள், அழகைப் போர்த்தியிருக்கும் காபி, டீ எஸ்டேட்கள் நிச்சயம் உங்கள் மனம் மயக்கும். காவிரி உற்பத்தியாகுமிடம் அருகில் தான் உள்ளது. 'இரவு கேம்பிங், டிரெக்கிங், ராப்டிங்' என சாகச பொழுதுபோக்குகளும் விளையாட்டுகளும் உண்டு.
அப்பே அருவி, இருப்பு அருவி, நாம்ட்ரோலிங் நியிங்மாபா பெளத்த மடம், கோல்டன் டெம்பிள் ஆகியவை அருகிலுள்ள சுற்றுலா இடங்கள். ஆண்டு முழுவதும் கண்டுகளிக்கக் கூடிய இடம் இது. ரயில் அல்லது சாலை வழியாக செல்லத் திட்டமிட்டால், மைசூரில் இருந்து செல்வது வசதியாக இருக்கும். பிரீமியம் ஹோட்டல் முதல், பட்ஜெட் ஓட்டல் வரை தங்குமிட வசதியுண்டு. ஹோம்ஸ்டே வசதியும் உண்டு.


திகட்டாத 'தென்மலை'
சுற்றுச்சூழலை பாதிக்காத, இந்தியாவின் முதல் சூழல்சார் (எக்கோ) சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது தென்மலை தான். குற்றாலத்தில் இருந்து 35 கி.மீ., தொலைவில், கொல்லம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இயற்கை மட்டுமே இங்கு உங்களுக்கு விருந்து. கீழே சலசவென கல்லடை ஆறு ஓடிக்கொண்டிருக்க, அதன் மீது அமைக்கப்பட்டுள்ள தொங்கு மரப்பாலத்தில் அசைந்தாடி நடப்பது உங்களை மெய்சிலிர்க்க வைக்கும். காட்டில் ஓங்கி உயர்ந்த மலைகளின் உச்சியை காண படிக்கட்டுகள் அமைத்து அசத்தியிருக்கிறார்கள்.
கயிற்றில் தொங்கிக் கொண்டு ஆற்றைக் கடப்பது, ஏரியில் படகுச் சவாரி செய்தபடி, வனத்தில் உலவிக் கொண்டிருக்கும் யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகளை ரசிப்பது, மலையேற்றம், மலையில் இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் பயணம், என சாகச விரும்பிகளுக்கு அனுபவிக்க நிறைய உண்டு. கடைசியாக தென்மலையில் இருந்து, 16 கிமி தொலைவில் உள்ள பாலருவியில் ஆனந்த குளியல் போட்டுவிட்டு வரலாம்.
சுற்றுலாத் துறையின் விடுதிகள், டென்ட் போன்ற தங்குமிடங்கள் உள்ளன. குற்றாலத்தில் தங்கியிருந்தும் சென்று வரலாம்.


வசீகரமான 'வயநாடு'
மாசுபடாத இயற்கையை அப்படியே அனுபவிக்க ஏற்ற பசுமை வழியும் வனப்பகுதி, வயநாடு. கேரளா-, தமிழ்நாடு,-கர்நாடகம் என, மூன்று மாநில எல்லைகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் வயநாட்டில் அடர்ந்த காடுகள், பசும் புல்வெளிகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், நறுமண பயிர்த் தோட்டங்கள், சிலுசிலுக்கும் தட்பவெப்பம் என இயற்கையின் மொத்த அழகும் காணக் கிடைக்கும். ஆற்றோர பயணம், டிரெக்கிங் என சாகச அனுபவங்களுக்கும் வசதி உண்டு.
ஏழாயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள செம்பரா சிகரம், டிரெக்கிங் செல்பவர்களுக்கு பிடித்த நீலிமலை, 900 அடி உயரத்தில் இருந்து வீழும் மீன்முட்டி அருவி, சேத்தாலயம் அருவி, பறவைகள் நிறைந்த பக்ஷிபத்தாளம், பனாசுரா சாகர் அணை போன்றவை முக்கிய இடங்களாகும். இதன் அருகிலுள்ள கல்பேட்டா மற்றும் சுல்தான் பத்தேரி ஆகியவையும் வனச்சுற்றுலா பிரதேசங்கள் தான்.
வயநாட்டுக்கு, கோவை, கொச்சின், மைசூர், பெங்களூர் என சுற்றியிருக்கும் பெரு நகரங்களில் இருந்து சாலை வழியாக பயணிக்கலாம். இங்கு அனைத்து வகை தங்கும் வசதிகளும் உண்டு.


சிலிர்ப்பூட்டும் 'சிக்மகளூர்'
கூர்க் அளவுக்கு நமக்கு அறிமுகமாகி இருக்கவில்லை என்றாலும், கர்நாடகத்தின் சிறந்த குளிர்மலைகளில் ஒன்று, சிக்மகளூர். இந்தியாவில் இங்கு தான் முதன்முதலாக காபி பயிரிடப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து, 3,600 அடி உயரத்தில் இருக்கும் சிக்மகளூர், வெயில் காலத்திலும் குளிர்ச்சியாகவே இருக்கும். மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், கோயில்கள், வனச்சூழல் என பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும் சிக்மகளூரை சுற்றி, கர்நாடகாவின் உயர்ந்த மலைச்சிகரமான முல்லையனகிரி, பத்ரா புலிகள் சரணாலயமும் அருகில் தான் இருக்கின்றன. கெம்மங்குண்டி - 60 கி.மீ., குதிரேமுக் - 107 கி.மீ., பாபா புதன்கிரி - 388 கி.மீ., உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்கள் உள்ளன.
தமிழகத்தில் இருந்து நேரடி ரயில் சேவை கிடையாது. ஆனால் சென்னையில் இருந்து செல்லும் வாஸ்கோ எக்ஸ்பிரஸ், ஹூப்ளி எக்ஸ்பிரஸ் ஆகியவை நின்று செல்லும் 'பிரூர்' ரயில் நிலையத்தில் இருந்து சிக்மகளூர், 50 கி.மீ தொலைவு தான். சாலையில் பயணிப்பதாக இருந்தால், கோவையில் இருந்து மைசூர் வழியாகவும், சென்னையில் இருந்து செல்லும்போது பெங்களூரு, ஹாஸன் வழியாகவும் சிக்மகளூரை அடையலாம்.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X