மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி
மரங்களில் ஆண், பெண் என்று இருக்கிறதா?
மா.குமார், 5ஆம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர்.
விலங்கு, பறவை முதலியவற்றில் ஆண், பெண் பாலினங்கள் உண்டு. அதுபோலவே, சில மர வகைகளிலும் ஆண், பெண் மரங்கள் உள்ளன. சில மரங்களில் ஒரே பூவில் ஆண், பெண் உறுப்புகள் இருக்கும். இவை, 'ஓரில்லமுள்ள இருபால்' மலர்த் தாவரம் என அழைக்கப்படுகின்றன. சில மரங்களில் ஒரே மரத்தில் ஆண் பூ தனியாகவும், பெண் பூ தனியாகவும் பூக்கும். பூசணி போன்ற தாவரங்களில் தனித்தனியே ஆண் பூ, பெண் பூ பூக்கும்.
வண்டுகளும் பூச்சிகளும் மகரந்தத்தை ஆண் பூவில் இருந்து எடுத்துச் சென்று பெண் பூவில் சேர்க்க வேண்டும். பப்பாளியில் ஆண் பூ மட்டுமே பூக்கக்கூடிய ஆண் மரங்களும், பெண் பூ மட்டுமே பூக்கக்கூடிய பெண் மரங்களும் உள்ளன. பனை மரத்தில் ஆண் பனை், பெண் பனை என தனித்தனியே உண்டு. இவற்றில் இரண்டு மரங்களும் பூத்தாலும், பெண் மரம் மட்டுமே காய்க்கும். தென்னையில் ஆண் மரம், பெண் மரம் என்று கிடையாது.
பூமி உருவாக பிரபஞ்ச வெடிப்புதான் காரணமா?
சி.யுதிஷ், 9ஆம் வகுப்பு, ஜீசஸ் மெட்ரிக் பள்ளி, இராமநாதபுரம்.
பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்வில்தான் அணுத்துகள்கள் உருவாகின. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற அணுக்கள் உருவாகின. மேலும் சில கோடி ஆண்டுகள் கடந்த பிறகு, இவற்றிலிருந்து முதல் தலைமுறை விண்மீன்கள் உருவாகின. அந்த விண்மீன்களால் கார்பன், ஆக்சிஜன், தங்கம் போன்ற தனிமங்கள் உருவாகின. இந்த விண்மீன்கள் வெடித்துச் சிதறிய சாம்பலில் இருந்து புது விண்மீன்கள் பிறந்தன. இப்போது இருக்கும் நமது சூரியன், இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை விண்மீன். 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியன், பூமி உருவானது.
தொலைவில் உள்ள விண்மீன்கள் வெளியிடும் ஒளி போன்ற மின்காந்த அலைகளை ஆய்வுசெய்து, வானவியலாளர்கள் பிரபஞ்சம் குறித்து அறிந்து கொள்கின்றனர். முதல் விண்மீன் எப்போது ஒளிர்ந்தது என்கிற மர்மப் புதிரை சமீபத்தில்தான் ஆய்வாளர்கள் விடுவித்தனர். இந்த ஆய்வில் கோவையைச் சேர்ந்த நிவேதிதா என்ற மாணவியும் பங்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதன் போல தானாக யோசித்துச் செயற்படும் கணினியைக் கண்டுபிடிக்க முடியுமா?
பி.அசோக்குமார், 11ஆம் வகுப்பு, மின்னஞ்சல்.
'செயற்கை நுண்ணறிவு' (AI - Artificial intelligence) எனப்படும் இந்த ஆய்வுத்துறை, தற்போது வெகுவேகமாக வளர்ந்து வருகிறது. கூகுளில் ஏதாவது வார்த்தையை டைப் செய்து தேடிப் பாருங்கள். நாம் டைப் செய்து முடிக்கும் முன்பே, கூகுள் தானாகப் பல இணைப்புகளைப் பரிந்துரைக்கும். இதற்கு முன்பாக நாம் என்னென்ன விஷயங்களைக் கூகுளில் தேடினோம் என்பதை வைத்து, சுயமாகக் கணிக்கும் புரோகிராம் அதில் செய்யப்பட்டுள்ளது. அதைக் கொண்டு நாம் எதைத் தேடுகிறோம், எதைத் தேடுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை முடிவு செய்து, நமது தேடல் குறித்து கூகுள் முன் கணிப்பு செய்கிறது. இதனை, இயந்திரக் கற்றல் (Machine learning) என்பார்கள். எதிர்காலத்தில் இதைவிட மேலும் கூர்மையான செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் கண்டுபிடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
உணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகளை நோக்கி எறும்புகள் வர காரணம் என்ன?
ரா.பூஜா, 5ஆம் வகுப்பு, டி.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மதுரை.
எறும்பு போன்ற பூச்சிகளில் அதிர்வு உணர்வி, ஒளி உணர்வி, வேதிவாசனை உணர்வி என மூன்று உணரும் அமைப்புகள் இருக்கின்றன. எல்லாப் பூச்சிகளுக்கும் வாசனை உணர்வு மிக அதிகமாகவே இருக்கும். உணவுப் பண்டங்கள், இறந்த உயிரிகள் வெளிப்படுத்தும் வேதிவாசனைகள் போன்றவற்றை முகர்ந்தே, அதனை நோக்கிப் பூச்சிகள் வருகின்றன.
மற்ற பூச்சிகளுடன் ஒப்பிடும்போது, வேதிவாசனையை உணரும் திறன் எறும்புக்கு மிக அதிகம். அதிகபட்சம் 400 வேதிவாசனைகளை உணரும்படியான வாசனை உணர்விகள் எறும்பின் மரபணுவில் உள்ளன. அதன்படி, ஈக்களுக்கு 61, கொசுக்களுக்கு 74 முதல் 158, தேனீக்களுக்கு 174 வகை உணர்விகள் உள்ளன. வாசனையை வைத்து மட்டுமே எறும்பால் உணர முடியும் என்பதால், உணவுப் பொருட்களை காற்றுப் புகாமல் மூடி வைத்தாலே எறும்பு வருவதைத் தவிர்க்கலாம்.