அவன் பெயர் அனிருத்! (24)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
00:00

சென்றவாரம்: அனிருத்தை கடத்தியதற்கான காரணத்தையும், அதன் பின்னணியில் செயல்பட்ட சாமியார் பற்றியும் புட்டுப்புட்டு வைத்தான் கிறிஸ்டோபரின் உதவியாளனாக இருந்து வெளியேறியவன். முழு விவரங்களையும், மொபைல் போனில் பதிவு செய்தாள் சாகித்யா. இனி-

அசோக வனத்தில் சீதையை கண்டு வந்த அனுமன், ராமனிடம் கூறிய முதல் வாக்கியம்...
'கண்டேன் சீதையை...'
பனாஜியில், அனிருத்தை கண்டு வந்ததும் இளவேனிலும், சாகித்யாவும் கூறிய முதல் வாக்கியம், 'கண்டோம் அனிருத்தை...'
ஜோதிலட்சுமி, சந்தோஷத்தில் பொங்கினாள்; அவளது கர்ப்ப பையில், ஐஸ்கிரீம் தொழிற்சாலை பூத்தது; திரும்பிய இடங்களில் எல்லாம் வானவில்கள் தோன்றின; தொட்ட இடமெல்லாம், துாலிப் மலர்கள்; எட்டு ஆண்டு பிரிவு துயர், நீராவியாகி, காற்று மண்டலத்தில் மறைந்தது.
''கடவுளே... என் மீது கருணை மழை பொழிந்ததற்கு நன்றி; என் காத்திருப்பு வீணாகவில்லை; ஒரு தாயின் ஜீவ மரண போராட்டம் ஜெயித்து விட்டது...''
''இப்போ... அனிருத் பார்க்க எப்படி இருக்கான்; ஒரு அடி உயரம் வளர்ந்திருப்பானா; ரோஜா நிறம் மாறியிருக்குமோ; எந்த ஊரில் இருக்கான்; யாரு பாதுகாப்பில இருக்கான்; அவன் குரல் இப்போ, எப்டி இருக்கும்... படிக்கிறானா... எந்த வகுப்பு படிக்கிறான்; ஆங்கிலப் பள்ளியிலா, அரசுப் பள்ளியிலா... எங்களை ஞாபகம் வச்சிருக்கானா...
''நாகப்பட்டினம் சுனாமியில் தப்பி, யாரு கைகளுக்கு போனான்; அவன கையோடு கூட்டி வரலியா. அவன அனுப்ப, பணம் கேட்கிறாங்களா...'' என்று, கேள்விகளை அடுக்கினாள், ஜோதிலட்சுமி. ஸ்தம்பித்து நின்றார் ஈஸ்வர்.
ஆனந்த கண்ணீர் வடித்தாள்; அவளது கை, கால்கள் நடுங்கின; றெக்கை இருந்தால், அனிருத் இருக்கும் இடத்துக்கு பறந்து போயிருப்பாள்.
''கொஞ்சம் பொறுமையா நடந்ததை கேளுங்கம்மா...'' முழுக்க விவரித்தான், இளவேனில்.
விக்கித்து போனாள், ஜோதிலட்சுமி.
''இது என்ன புதுக் குழப்பம்; என் மகனா இப்படி சொன்னான்; துப்பாக்கி எடுத்து, உங்களை சுட பார்த்தானா; என்னால் நம்ப முடியல...''
இளவேனிலின் கைகைளை நன்றியுடன் பிடித்துக் கொண்டார், ஈஸ்வர்.
''நீ மட்டும் சின்னப் பையனா இல்லைன்னா, உன் காலுல விழுந்திருப்பேன்; எல்லாரும் கை விரிச்ச பின், நீ போய் துப்பறிஞ்சு, என் மகன கண்டுபிடிச்சிட்ட; அவன், உயிரோடு இருக்கிற சந்தோஷமே போதும்...''
''அங்கிள்... நானும், சாகித்யாவும் பாதி கிணத்த தான் தாண்டியிருக்கோம்; இதுக்கு பாராட்டு விழா தேவையில்ல; அனிருத்த உங்க கையில ஒப்படைச்சு, மீதி கிணத்த தாண்டுவோம்...''
''உன் நம்பிகை பேச்சு, புத்துணர்ச்சிய தருது; அனிருத் நிச்சயமா திரும்புவான்னு உள்ளுணர்வு சொல்லுது...''
சமையற்கட்டுக்கு ஓடினாள் ஜோதிலட்சுமி; பால் பாயாசம் செய்து, டம்ளர்களை நீட்டினாள்.
''எடுத்துக்கங்க...''
அக்கம்பக்கத்தவருக்கு பால் பாயாசம் வினியோகித்தாள்.
''என் மகன் அனிருத் உயிரோடு இருக்கான்; உங்க பிரார்த்னைக்கு, நன்றி...''
தெருமக்கள், சந்தோஷ செய்தி கேட்டு, ஹோலி பண்டிகை கொண்டாடினர். ஆடல், பாடல் தொடர்ந்தது.
வழக்கறிஞர் மோகனசுந்தரம் டென்னிஸ் ஆடி விட்டு, மட்டையுடன் வீடு திரும்பினார்.
ஈஸ்வர் - ஜோதிலட்சுமி, இளவேனில், சாகித்யா எழுந்து வணங்கினர்.
''வணக்கம்... ஒரு, 10 நிமிஷம் பொறுங்க; உடை மாத்திட்டு வந்துடுறேன்...''
சட்ட புத்தகங்கள் அடுக்குகளில் காட்சியளித்தன.
மோகனசுந்தரம் வந்தமர்ந்தார்.
''என்ன விஷயமா வந்திருக்கீங்க...''
முனைப்பானான், இளவேனில்.
சுனாமியில், அனிருத் காணாமல் போனதில் இருந்து, சுட்டது வரை, விரிவாக கூறினான்.
''எப்பா... கேக்கவே மயிர் கூச்செறியுது; என்னென்ன ஆதாரம் வச்சிருக்கீங்க...''
அனிருத்தின், நான்கு வயது புகைப்படம், தற்போதைய, 12 வயது புகைப்படம், காரில் கடத்தப்படும் புகைப்படம், ஹெலிகாப்டரில் ஏற்றப்படும் புகைப்படம், கிறிஸ்டோபரின் கூட்டாளி சந்தீப் கூறிய, பிளாஷ்பேக் வீடியோ காட்சி... நீட்டினான் இளவேனில்.
மோகனசுந்தரம் தீவிரமாக யோசித்தார்; புருவங்கள் முடிச்சிட்டன.
''குற்றம் நடந்த இடம் நாகப்பட்டினம்; வழக்கை, சென்னை உயர்நீதிமன்றத்தின், மதுரை கிளையில் தாக்கல் செய்யலாம்...''
''என்ன மாதிரியான மனு தாக்கல் செய்யப் போறோம்...''
''ஹேபியஸ் கார்பல் மனு; மனுவை, நீதிபதி ஏற்றதும், தமிழக போலீசுக்கு உத்தரவிடுவார். அதன்படி, தமிழக போலீஸ், கோவா மாநில போலீசுக்கு தகவல் தெரிவிக்கும். அந்த போலீசார் விசாரித்து, அனிருத்தை கஸ்டடிக்கு கொண்டு வருவர்; அதன்பின், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜர்படுத்துவர்...''
''ஆஜர்படுத்த எத்தனை நாள் அவகாசம்...''
''பதினைந்து நாள் முதல், ஒரு மாசம் வரை; ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒளித்து வைத்திருந்தாலும், தேடி, கண்டுபிடிச்சு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவர்; மனுவுக்கு, போலீஸ் அதிகாரிங்க மிகவும் மதிப்பளிப்பாங்க...''
''எக்ஸலன்ட் அட்வகேட் சார்...''
''தன்னை கடத்தியவர் கஸ்டடியில் இருந்து அனிருத் பேசுவதற்கும், நடுநிலையான நீதிமன்றத்தில், நீதிபதி முன் பேசுவதற்கும் பெருத்த வித்தியாசம் இருக்கும்...''
''கிறிஸ்டோபர் தன்னை கடத்தவில்லை; அவர்தான் உண்மையான அப்பா என, நீதிமன்றத்திலும் அனிருத் வாக்குமூலம் கொடுத்தால்... டி.என்.ஏ., டெஸ்ட்டில், அனிருத், ஈஸ்வர், ஜோதிலட்சுமியின் மகன் என்பது, ருஜுவான பின்பும், அனிருத், கிறிஸ்டோபரையே சொந்தம் கொண்டாடுனா என்ன செய்றது...''
''அனிருத் ஒரு மைனர்; அவன், பெற்றோருடன் செல்ல மறுத்தால், 18 வயது நிரம்பும் வரை, சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பர்...''
''நம் முயற்சி எல்லாம் வீணாகிடுமே...''
''முதல்ல, ஹேபியஸ் கார்பஸ் மனு போடுவோம்; நல்லதே நடக்கட்டும்...''
''சரி...''
''கிறிஸ்டோபர், பல வகையா அச்சுறுத்துவாரு; அத சமாளிக்க, மனதளவில் தயாராகுங்க...''
மானசீக காட்சியில் கிறிஸ்டோபர், ஈஸ்வர், ஜோதிலட்சுமி, இளவேனில், சாகித்யா எதிர் எதிர் திசைகளில், கவச உடை அணிந்து, வாள் சுழற்றினர்.
மதுரை, மீனாட்சி அம்மனின் தாள் பணிந்தனர்.
காலை, 10:00 மணிக்கு தாக்கல் செய்யப் போகும், ஹேபியஸ் கார்பஸ் மனுவை, கோவிலில் அர்ச்சனை செய்தனர்.
மீனாட்சி அம்மன், 'நல்லதே நடக்கும்; தைரியமாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்; அனிருத் உன் ரத்தம், உன்னிடமே வந்து சேருவான்' என அருள் பாலித்தாள்.
மனுவை தாக்கல் செய்தார் வழக்கறிஞர், மோகன சுந்தரம்.
மனுவில் -
கி.பி., 2004 சுனாமியின் போது, அனிருத் என்ற சிறுவன் கடத்தப்பட்டான். அவனை, ஆள் வைத்து கடத்தியது, பனாஜியில் வசிக்கும் கோடீஸ்வரர், ஒலிவேரா கிறிஸ்டோபர். கிறிஸ்டோபரின் விலாசம் குறிப்பிடப்பட்டிருந்தது; கடத்திய போது, அனிருத்துக்கு வயது, நான்கு; இப்போது வயது, 12. அவனது உண்மையான பெற்றோர், ஈஸ்வர் - ஜோதிலட்சுமி விலாசம் குறிப்பிடப்பட்டிருந்தது; கிறிஸ்டோபரின் பிடியில் இருக்கும் அனிருத்தை, மதுரை உயர்நீதிமன்றம் கிளையில் ஆஜர்படுத்த வேண்டும்.
ஆஜர்படுத்தப்படும் அனிருத்தை, அவனது உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்கவும்; கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட கிறிஸ்டோபர் மீது, கிரிமினல் வழக்கு பதியவும் தகுந்த உத்தரவு இடகோருகிறோம்.
மனுவை படித்து விட்டு, காவல்துறைக்கு உத்தரவிட்டார் நீதியரசர் .
ஒலிவேரா கிறிஸ்டோபர் வெறித்தனமாக தரையை உதைத்தார்.
''பனாஜி நகர போலீசார் எப்போதுமே, என் பாக்கெட்டில்... இப்போ... எந்த தைரியத்தில், என் பங்களாவுக்குள்ள புகுந்தீங்க...''
'கோவா மாநில காவல்துறை தலைவரின் நேரடி உத்தரவு இது; எங்களால் தட்டி கழிக்க முடியாது...'
அனிருத் இரவு ஆடையில் தோன்றினான்.
''என்னைத் தானே தேடி வந்தீங்க... வாருங்க போலாம்; நீதிமன்றத்தில், ஒலிவேரா கிறிஸ்டோபர் தான், என் அப்பான்னு ஆணித்தரமா சொல்றேன்...''
கிறிஸ்டோபர் அழுதபடி, அனிருத்தை கட்டிக் கொண்டார்.
''நம்மை யாராலும் பிரிக்க முடியாது; எனக்கு பின், நீதான்டா மாபியா இளவரசன்; கோவாவை முதல்வர் ஆளலாம்; கோவாவின் கடல்பகுதிகளையும், கடற்கரைகளையும் ஆள்வது நாந்தான்...''
மொபைல் போன் சிணுங்கியது.
''பாஸ்... அனிருத்தின் பெற்றோரிடம் பேரம் பேசினேன்; 10 கோடி ரூபாய் தருவதா சொன்னேன்; பூமி பந்தையே கொடுத்தாலும், வாங்க மாட்டாங்களாம்...''
''டாமிட்...''
''அனிருத் பெற்றோரையும், இரண்டு குட்டி டிடக்டிவ்களையும் கொல்லவா...''
''வேணாம்... நீ பனாஜிக்கு திரும்பிடு...''
மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், வாதிகளும், பிரதிவாதிகளும் கறுப்பு கோர்ட் அணிந்த வக்கீல்களும் பரபரத்தனர்.
ஈஸ்வர் - ஜோதிலட்சுமி, இளவேனில், சாகித்யா, மோகனசுந்தரத்துடன் நின்றிருந்தனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள், 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கார் வந்து நின்றது.
ஓட்டுனர் ஓடிப் போய், பின் கதவை திறந்து விட்டான்.
புல்சூட், தொப்பி, குளிர்க்கண்ணாடி அணிந்த அனிருத், மிடுக்காய் இறங்கினான்.
கிறிஸ்டோபருக்காக, சகல மனிதர்களையும் கால்களில் இட்டு நசுக்கும் திமிர்தனம், அவனது முகத்தில் டன் கணக்கில் வழிந்தது!
- தொடரும்...

- ஆர்னிகா நாசர்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X