நம்பிக்கை துரோகம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
நம்பிக்கை துரோகம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 ஏப்
2018
00:00

ஒருசமயம், ஜாஸ்தியூர் என்ற நாட்டை கந்தகன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன் இருந்தான். அவன் பெயர் அனோபத்தன்.
ஒருநாள் -
காட்டுக்கு வேட்டையாட செல்ல தந்தையிடம் அனுமதி கேட்டான்.
''மகனே... இன்று நாள் நன்றாக இல்லை; நாளைய தினம் வேட்டைக்கு செல்,'' என்றார், அரசர்.
''நாளும், கிழமையும் நம்மை என்ன செய்யும்... நடப்பது நடந்தே தீரும்,'' என்று கூறிய அனோபத்தன், தந்தையின் பேச்சை மீறி, வேட்டையாடப் புறப்பட்டான்.
காட்டில், புள்ளிமான் ஒன்றைக் கண்டான்; அதை துரத்தி சென்றவன் பாதை தவறி வெகுதுாரம் வந்து விட்டான். அவனுக்குக் மிகவும் களைப்பாக இருந்தது; குதிரையை ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு, பக்கத்திலுள்ள குளத்தில், கை, கால்களை கழுவி, தண்ணீர் பருகினான்.
அதற்குள் இருட்டியது; இந்நேரத்தில், சிங்கம் ஒன்று கர்ஜித்தபடியே அரசகுமரான் நின்ற இடத்தை நோக்கி வந்தது.
சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு மிரண்ட குதிரை, கயிற்றை அறுத்து ஓடியது. அரசகுமாரனுக்கு பயம் ஏற்பட்டது. பக்கத்தில் நின்ற மரத்தில் ஏறினான்; அங்கு, மரக்கிளையில், கரடி ஒன்று உட்கார்ந்திருந்தது. அதைப் பார்த்ததும், அவனுக்கு பயம் அதிகரித்தது. அவனால், மேலே ஏறவும் முடியவில்லை; கீழே இறங்கவும் முடியவில்லை.
அவன் நிலையை கண்ட கரடி, ''நண்பா... பயப்படாமல் மேலே ஏறிவா; உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன்,'' என்றது.
''கரடியே... சிங்கத்திடமிருந்து காப்பாற்று,'' என்றான். அவனைப் பக்கத்தில் அமர்த்தி, தைரியம் கூறியது கரடி.
சிங்கமோ மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தது.
சிறிது நேரத்தில் அரசகுமாரனுக்கு துாக்கம் வந்தது. மரக்கிளையில் உட்கார்ந்தவாறே, துாங்கி, வழிய துவங்கினான்.
''அரச குமாரா... இம்மாதிரி உட்கார்ந்தபடி துாங்கினால், விழுந்து விடுவாய்; அப்புறம் சிங்கம் உன்னை சாப்பிட்டு விடும்; பயமின்றி, என் மடியில் படுத்துத் துாங்கு,'' என்றது.
அரசகுமாரனும், கரடியின் மடியில் படுத்து, நன்றாக துாங்கினான்.
இதைப் பார்த்த சிங்கம், கரடியிடம், ''நண்பா... இவன் நம் எதிரி; வேட்டையாடிக் கொல்பவன். எதிரிகளுக்கு அபயமளித்தால், செய்நன்றி மறந்து, நம்மை கொல்லத் துணிவர். நீயும், நானும் காட்டில் வசிப்பவர்கள்; இவனோ நாட்டில் வசிப்பவன். இவனுக்கு ஆதரவு தராதே; பேசாமல், அவனை கீழே தள்ளி விடு; நான், இவனை சாப்பிட்டு, என் இருப்பிடத்திற்குச் செல்கிறேன்; நீயும் பயமின்றி, இருக்கலாம்,'' என்றது.
''சிங்கமே... இவன் எப்படிப் பட்டவனாக இருந்தாலும், இப்போது அடைக்கலமாக வந்திருக்கிறான். நான் நம்பிக்கை துரோகம் செய்ய முடியாது,'' என்றது கரடி.
சிறிது நேரத்தில் அரசகுமாரன் விழித்தான்.
''அரசகுமாரனே... நான், சற்று நேரம் கண்ணயர்கிறேன்; ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்,'' என்று, கூறிய கரடி, அவன் பக்கத்தில் படுத்து துாங்கியது.
''அரச குமாரா... கரடியின் வார்த்தையை நம்பாதே; அது எதற்காக உனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது என்றால், நான் சென்ற பின், உன்னைக் கொன்று சாப்பிடலாம் என்று தான். அதன் பாசாங்கான நடிப்பை, நம்பி விட்டாய்; பேசாமல் கீழே தள்ளி விடு. அதைக்கொன்று, சாப்பிட்டு, என் இருப்பிடத்திற்கு செல்கிறேன். நீயும் பயமின்றி, நகரத்திற்கு செல்லலாம்,'' என்றது சிங்கம்.
சிங்கத்தின் பேச்சைக் கேட்ட அரசகுமாரன் குழம்பிப் போனான்.
'சிங்கம் சொல்வது உண்மையாக இருக்குமோ என்று நினைத்தான்... எப்படியிருந்தாலும் கரடி நம் பகைவன்!' என்று கருதிய அரசகுமாரன், அதை, கீழே தள்ளினான்.
திடுக்கிட்டு விழித்த கரடி, கீழே விழுவதற்குள், இடையில் இருந்த, மற்றொரு கிளையை பற்றியது.
''அரசகுமாரா உன் புத்தியை காண்பித்து விட்டாய்; ஆயினும், இச்சமயத்தில் உன்னைக் கொல்ல விரும்பவில்லை. ஏனென்றால், உனக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறேன்; இரவு வரை, இந்த மரக்கிளையில் தங்கி, பொழுது விடிந்ததும், நகருக்கு செல்,'' என்று கூறியது கரடி.
விடியும் வரை காத்திருந்த சிங்கம், யுக்தி பலிக்காததால் ஏமாற்றமடைந்து இருப்பிடத்திற்கு சென்றது. சிங்கம் சென்ற பின், கரடியும் மரத்திலிருந்து இறங்கி, இருப்பிடத்திற்கு சென்றது.
செய்த தவறுக்காக, வருந்தியவாறே, அரசகுமாரன் நாட்டுக்குச் சென்று சேர்ந்தான்.
குட்டீஸ்... நம்பி, அடைக்கலமாக வந்தவங்களுக்கு துரோகம் செய்யக் கூடாது. அது ரொம்ப ரொம்ப தப்பு. சரியா..

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X