பறவைகளின் முக்கிய உணவு ஆதாரங்களில் ஒன்று பூச்சி. இப்படிப் பறவைகளால் உண்ணப்படும் பூச்சிகளோ, அவற்றின் முட்டைகளோ பிழைக்கவே வாய்ப்பில்லை என்றுதான் இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால், ஜப்பானைச் சேர்ந்த கோபெ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், புதிய உண்மை ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். அதாவது, பூச்சியின் வயிற்றுக்குள் இருக்கும் முட்டைகளை, பறவைகள் தங்கள் எச்சங்கள் மூலம் வெளியேற்றிவிடுவதாகத் தெரியவந்துள்ளது. 'நாங்கள் முட்டையுடன் உள்ள பூச்சிகளை பறவைகளுக்கு உண்ணக் கொடுத்தோம். கழிவுகளுடன் அந்த முட்டைகள் வெளியேறின. அதுதவிர, அந்த முட்டைகள் பொரிந்து, குஞ்சுகளும் வெளிவந்துள்ளன. இதன்மூலம், பூச்சிகளின் இனப்பெருக்கத்துக்கு பறவைகளும் உதவுவது தெரியவந்துள்ளது.' என்று ஜப்பான் விஞ்ஞானி கெஞ்சி சுட்சுகோ தெரிவித்துள்ளார்.