அடுக்குமாடியில் தொங்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிறுவனை, இளைஞர் ஒருவர் வீரதீர சாகசம் புரிந்து காப்பாற்றிய சம்பவம் பலரின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நான்கு வயதுச் சிறுவனை தனியே வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, சூப்பர்மார்க்கெட்டுக்கு அவனது தந்தை சென்றுள்ளார். அப்போது பால்கனியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், 5வது தளத்திலிருந்து தவறி விழுந்தான். அப்போது, அதிர்ஷ்டவசமாக 4வது மாடியின் பால்கனிக் கம்பியை பிடித்துக்கொண்டான். அங்கு நின்றுகொண்டிருந்த நபர், சிறுவனைக் கீழே விழாமல் பத்திரமாகப் பிடித்துக்கொண்டார். எனினும், பால்கனி அமைப்பு காரணமாக அந்த சிறுவனைப் பிடித்து மேலே தூக்க முடியவில்லை.
ஏராளமான மக்கள் அந்தப் பகுதியில் கூடினர். அந்தரத்தில் தொங்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த சிறுவனை அவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில், அந்த வழியாகச் சென்ற மம்மோதா கஸ்ஸாமா என்ற இளைஞர், கொஞ்சமும் யோசிக்காமல் கட்டடத்தில் சரசரவென்று ஏறினார். முன்புறத்தில் சுவரைப் பிடித்தபடி, சிலந்தி பூச்சி போல் 60 அடி உயரத்தை, 30 நொடிகளில் அடைந்தார். தொங்கிக்கொண்டிருந்த சிறுவனை பத்திரமாக மீட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது. 'பிரான்ஸ் நாட்டின் ஸ்பைடர் மேன்' என்று கஸ்ஸாமாவுக்கு மக்கள் பட்டம் சூட்டியுள்ளனர். அந்நாட்டின் அதிபர் மெக்ரோன், இளைஞரை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அகதியாக பிரான்ஸ் நாட்டில் தங்கியிருந்த அவருக்கு, நிரந்தரக்குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 'நான் ஓர் உத்வேகத்தில் மேலே ஏறினேன். மேலே ஏறஏற, இறைவன் இன்னும் அதிகமான தைரியத்தை வழங்கினார்.' என்று கஸ்ஸாமா கூறியுள்ளார். அவருக்கு, அந்நாட்டு தீயணைப்புத் துறையிலும் வேலை அளிக்கப்பட உள்ளது.