ஒரு சிறிய மரப்பெட்டியில் 30 புத்தகங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நூலகம், இன்று 25,000 புத்தகங்களுடன் பெரு நூலகமாக வளர்ந்திருக்கிறது. சென்னை, சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ளது மகாத்மா காந்தி நூலகம். கடந்த 65 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நூலகத்தை தனிஒருவராக நிறுவியவர் கு.மகாலிங்கம். 'நூலகத் தாத்தா' என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிறார்.
கடந்த 1946இல் மகாத்மா காந்தி சென்னை வந்தபோது, அவரை நேரில் சந்தித்திருக்கிறார். காந்தியின் எளிமையான ஆளுமை அவரை மிகவும் கவர்ந்துவிட்டது. மக்களிடையே கல்வியறிவை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து காந்தி பெயரில் நூலகம் உருவாக்க எண்ணினார். வாடகை இடத்தில் தையல் கடை வைத்திருந்த இவருக்கு, நிரந்தர வருமானமோ, வசதியோ இல்லை. ஆனால் நூலகம் ஆரம்பிக்க வேண்டும் என்ற லட்சியத்தை அவர் கைவிடவில்லை.
தனது தையல் கடையிலேயே ஒரு சிறிய மரப்பெட்டியில் புத்தகங்களை வைத்து 1952இல் நூலகத்தைத் தொடங்கினார். நூலகம் தொடங்க உறுதுணையாக இருந்தவர்களில் முக்கியமானவர் சக்தி டி.கே.கிருஷ்ணசாமி. பாரதியாரின் கவிதைகளை அச்சிட்டு மக்களிடையே விநியோகித்த பரலி சு.நெல்லையப்பர் இந்த நூலகத்தைத் திறந்துவைத்தார். அன்றிலிருந்து புத்தகங்களைச் சேகரித்துப் பாதுகாத்து வருகிறார்.
காந்தி தொடர்பான 100க்கும் மேற்பட்ட நூல்கள், பல அரிய நூல்கள் பைண்டிங் செய்யப்பட்டு இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு எழுத்தாளரின் புத்தகமும் தனித்தனி நிறத்தில் பைண்டிங் செய்யப்பட்டு எளிதில் தேடி எடுக்கும் விதத்தில் அடுக்கப்பட்டுள்ளது. ராஜாஜி, காமராஜர், கண்ணதாசன், தமிழ்வாணன் எனப் பலர் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகங்கள் இங்கு உள்ளன. ஒவ்வொரு புத்தகத்திலும் யாரால், எந்தத் தேதியில் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது என எழுதப்பட்டிருக்கிறது.
காமராஜர், கக்கன், ம.பொ.சிவஞானம், சிவாஜிகணேசன், ஜெயகாந்தன், லால்பகதூர் சாஸ்திரி என பல பிரபலங்கள் இந்த நூலகத்திற்கு வருகை தந்துள்ளனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் இந்த நூலகத்தின் உறுப்பினர்களாக உள்ளனர். பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம்.
கல்விப்பணி
ஆண்டுதோறும், காந்தி ஜெயந்தி தினத்தில் சிறந்த எழுத்தாளர்களுக்கு சக்தி டி.கே.கிருஷ்ணசாமி விருது வழங்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. பலரிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு இந்த உதவி வழங்கப்படுகிறது. தற்போதும் வறுமை நிலையில் இருக்கும் இவர், நூலகத்திற்காகக் கிடைக்கும் எந்தத் தொகையையும் தன் சொந்தச் செலவுகளுக்குப் பயன்படுத்துவதில்லை. இவரது நூலகச் சேவையைப் பாராட்டி பல விருதுகள், பாராட்டுகள் கிடைத்துள்ளன. வாடகைக் கட்டடத்தில் இயங்கிவரும் இந்த நூலகத்தை எப்படியாவது சொந்தக் கட்டடத்திற்கு மாற்றி இன்னும் பல புத்தகங்களைச் சேமிக்க வேண்டும் என்பதே இவரது கனவு.
“அறிவுதான் வாழ்க்கைக்கான அனுபவத்தைத் தரும். அறிவையும், அனுபவத்தையும் பெற ஒரே வழி நிறையப் புத்தகங்கள் படிக்கறதுதான். நம்ம வாழ்க்கையை அதுதான் சிறப்பாக ஆக்கும்.” என்று உற்சாகத்தோடு சொல்கிறார் 88 வயது கு.மகாலிங்கம்.
மகாத்மா காந்தி நூலகம்
காரணீஸ்வரர் கோவில் தெரு,
சைதாப்பேட்டை, சென்னை - 15.
இயங்கும் நேரம்: காலை 7.30 முதல் 10.30 வரை / மாலை 4.30 முதல் 7.30 வரை.