“ஸ்கூலுக்கு ரெடியாயிட்டியா? 8ஆம் தேதி ஸ்கூல் திறக்கப் போகுதே?”
“ரெடி மிஸ். புக்ஸுக்கு அட்டை போட்டுட்டேன். புது ஷூ, புது சாக்ஸ், புது டிபன் பாக்ஸ் எல்லாம் வாங்கிட்டேன். எல்லாம் பளபளன்னு இருக்கு மிஸ். என்னை எந்த செக்ஷன்ல போடப் போறாங்கன்னுதான் தெரியலை.”
என் கவலை வேறு. ஒவ்வோராண்டும், மூன்று செக்ஷனிலும் மாற்றி மாற்றிப் போடுகிறார்கள். கடந்த ஆண்டு பி செக்ஷனில் இருந்தேன். இந்த முறை நிச்சயம் மாற்றிவிடுவார்கள் என்று தெரியும். ஆனால், அதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறார்கள். முன்னாடியே சொல்லித் தொலைக்க மாட்டார்களோ?
“நான் என்ன செக்ஷன் மிஸ்?”
“ஸ்கூல் தொறக்கற அன்னிக்கு தெரிஞ்சுக்கோயேன்.”
“நீங்ககூட சொல்ல மாட்டேங்கறீங்களே?” வருத்தமாக உமா மிஸ்ஸைக் கேட்டேன். இந்த ஆண்டு இவர் எனக்கு ஆங்கிலம் எடுக்க வரலாம். யார், என்ன வகுப்பு எடுப்பார்கள் என்பது பள்ளி திறந்தால் தான் தெரியும். அது இன்னொரு அவஸ்தை.
ஆனால், எல்லாவற்றையும்விட பெரிய கஷ்டம், எந்த வகுப்பில் உட்காரவைக்கப் போகிறார்கள் என்பதுதான். புதிய கட்டடம் வேறு கட்டியிருக்கிறார்கள். புதிய வகுப்பறையில் உட்கார வைத்தால் எப்படி இருக்குமோ? முதல் நாளே போய் பிடித்த இருக்கையாகப் பார்த்து உட்கார்ந்துவிட வேண்டும். அப்புறம் கிளாஸ் மிஸ் வந்து மாற்றினால் பார்த்துக் கொள்ளலாம்.
“என்ன யோசனை?”
“எந்த ஃப்ளோர்ல மிஸ் எனக்குப் புது கிளாஸ்?”
“ரெண்டாவது மாடியிலன்னு நினைக்கறேன்.”
“கம்ப்யூட்டர் சயின்ஸ் லேப்புக்குப் பக்கத்துல தானே மிஸ்?”
“ஆமாம்.”
உடனே அந்த வகுப்பு நினைவுக்கு வந்துவிட்டது. இரண்டு பக்கமும் ஜன்னல் உண்டு. ஒருபக்கம் வராண்டா. வெளிச்சமாக இருக்கும். எதிர்ப்பக்கம் உட்கார்ந்துகொள்ள வேண்டும். காற்றும் வரும். ஆனால், ஒரே இம்சை, சாலையில் போகும் வாகனங்கள் சத்தம் கேட்கும். காலையும் கொஞ்சம் அகட்டி வைத்துக்கொள்ள முடியாது.
“வேற கிளாஸ்ல போட்டா நல்லா இருக்கும் மிஸ்?”
“ஏன்?”
“நான் கொஞ்சம் உசரம். டெஸ்க் முட்டி இடிக்கும் மிஸ்?”
“ஓ! இந்த தரம் புதுசா ஃபர்னிச்சர் வாங்கியிருக்காங்க…சரியா இருக்கும்னு நினைக்கறேன். ஆனால், நான் கிளாஸ் டிசைனையே மாத்தணும்னு சொன்னேன். கேப்பாங்களான்னு தெரியலை…”
“என்ன டிசைன் மாத்தணும்?”
“பாடப் புத்தகம், கல்விமுறை, சொல்லிக் கொடுக்கும்முறை மாதிரியே வகுப்பறை வடிவமைப்புக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கு. இங்கிலீஷ்ல இதுக்கு 7E டிசைன்னு பெயர். அதாவது ஆற்றலுடைய வகுப்பறை, ஈடுபாட்டை ஏற்படுத்தும் வகுப்பறை, கல்விமுறை மேம்படுத்தும் வகுப்பறை, சிக்கனமான வகுப்பறை, மாணவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள உதவும் வகுப்பறை, சமமான மற்றும் நெருக்கமான வகுப்பறை என்ற முறையில் வடிவமைப்புகள் வேறுபடும். இருக்கக்கூடிய சின்ன இடத்துலேயே இது எல்லாத்தையும் முயற்சி செய்யலாம்.
நம்ம கிட்ட இருக்கற வகுப்பறைகள் எல்லாம், அதிகபட்சம் மாணவர்களை உட்கார வைக்கிறதுக்குத் தோதா உருவான வகுப்பறையே தவிர, ஒரு டிசைன் எண்ணத்தோட உருவாக்கப்பட்டதில்லை.
அதுவும் இன்னிக்கு மாணவர்கள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வளர்ச்சியும் முக்கியம். அதுக்கு வசதியா அவங்களோட சீட் இருக்கணும். அவங்க தங்களை வெளிப்படுத்திக்கவும், உணர்வு ரீதியாக ஒன்றவும் ஒருவித பிணைப்பை ஏற்படுத்திக்கவும் சீட் சரியா இருக்கணும்.”
இந்த இடத்தில் என் அனுபவம் ஞாபகம் வந்தது. போன ஆண்டு நான் உட்கார்ந்திருந்த இடத்தில் என்னவோ என்னை தொல்லை படுத்திக்கொண்டே இருந்தது. கரும்பலகை தெரியவில்லை, அல்லது தேவையற்ற ஒரு நெருக்கடி எல்லாம் உறுத்திக்கொண்டே இருந்தது. பின்னர் இடம்மாறி உட்கார்ந்துகொண்டு, அதனைச் சமாளித்தேன்.
“மாணவர்கள் தங்கள் இடத்தை ஒரு சொத்து போல பார்த்துப்பாங்க. பல பேர், பெரியவங்களா ஆன பிறகுகூட, தங்களோட சீட்டை ஞாபகம் வெச்சுக்கிட்டு பேசிக்கிட்டே இருப்பாங்க. அந்த அளவுக்கு இருக்கைக்கு முக்கியத்துவம் உண்டு. அதேபோல், வகுப்பறையில் என்ன வண்ணங்கள் தீட்ட வேண்டும் என்பதும் முக்கியமானது. ஃபர்னிச்சர், கலர், டிசைன் எல்லாமே இன்னிக்கு மிகமிக முக்கியம். அதுதான் படிக்கற மாணவர்கள் மனசுல ஒரு நெருக்கத்தையும் உணர்வுரீதியான பிணைப்பையும் ஏற்படுத்தும்.
அது அவர்களைத் துரத்திடக் கூடாது. அதனால பல நாடுகள்ல, நிலையான ஃபர்னிச்சர் வாங்கிப் போடறதில்லை. ஒவ்வோராண்டும் அதை மாத்திக்க வழிசெஞ்சு இருக்காங்க. அல்லது குறைந்தபட்சம், வகுப்பறை வடிவமைப்பையாவது மாத்துவாங்க. ஒரே மாதிரி ஒரே சுவரைப் பார்த்துக்கிட்டு இருக்கிறதுக்கு ஆசிரியர்களுக்கும் போர் அடிக்குமில்லையா?
மாணவர்களோட உடல், மனம் இரண்டும் சம்பந்தப்பட்டதுதான் வகுப்பறை. உட்காரும் இருக்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் உண்டோ, அந்த வகுப்பறையோட சூழ்நிலைக்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பொருளையும் கண்ணுக்கு அழகா வெக்கணும். மனசுக்கு நிறைவா இருக்கணும்.”
உமா மிஸ் இன்னும் அழகியல் ரீதியாகவும் அது மனத்தில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியும் சொல்லிக்கொண்டே போனார்கள். பின்னர் வலைத்தளங்களில் இருந்து பிரமாதமான வடிவமைப்பு கொண்ட வகுப்பறைகளையும் காட்டினார்கள். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதமான அழகு. எத்தனை பேர் இதற்காக யோசிக்கிறார்கள், உழைக்கிறார்கள் என்பது புரிந்தது.
புது வகுப்பறைக்குப் போகும்போது, அதனை இன்னும் எப்படி அழகுபடுத்தலாம் என்ற யோசனைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன. யோசிக்கவே சந்தோஷமாக இருந்தது.