வேதியியல், கணிதம், உயிரி தொழில்நுட்பம், நுட்பக்கலை என அறிவியல் மற்றும் கலை சார்ந்த பல்கலைக்கழகங்கள் நெதர்லாந்தில் அதிகம்.
அங்கு படிக்க வேண்டும் என்றால் டச்சு மொழி அவசியம் இல்லை. ஆனால், அங்கு சில ஆண்டுகள் தங்கி ஆய்வுப் படிப்பு மேற்கொள்ள,, டச்சு மொழி தெரிந்திருந்தால் கூடுதல் பலம்.
தமிழகத்தில் டச்சு மொழி கற்பிக்கப்படுவதில்லை. நெதர்லாந்து செல்லும்போது, அங்கேயே கற்கலாம். நெதர்லாந்திலுள்ள ஈஸ்வர், க்ரானிஜன் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரிடம் பேசினோம்...
சென்னையில் டச்சு மொழி கற்பிக்கப்படுவதில்லையா?
நெதர்லாந்தில் உயர்கல்வி பயில மிகக் குறைந்த மாணவர்களே செல்கின்றனர். எனவே மிகக் குறைந்த மாணவர்களுக்காக ஒரு மொழியைக் கற்பிக்க இங்கு யாரும் முன்வருவதில்லை.
நெதர்லாந்தில் படிக்க குறைவான மாணவர்கள்தான் செல்கிறார்களா?
ஆராய்ச்சிப் படிப்பிற்கு வெளிநாடு செல்லும் மாணவர்கள் குறைவுதான். குறிப்பிட்ட துறை குறித்து நன்கு அறிந்து கொண்டால்தான் நாம் சிறந்த பல்கலைக்கழகங்களைத் தேர்வு செய்ய முடியும்.
டச்சு தெரிந்தால்தான் நெதர்லாந்து செல்ல முடியுமா?
பிரான்ஸ், ஜெர்மன் போல நெதர்லாந்தில், அந்நாட்டு மொழி கற்பது கட்டாயம் இல்லை. நான் இங்கு வந்தபோது, எனக்கு டச்சு மொழி சுத்தமாகத் தெரியாது. என்னுடைய ஆராய்ச்சிப் படிப்புக்கு அந்த மொழி அவசியம் இல்லை. ஆனால், நான் அங்கு சில ஆண்டுகள் வசிக்கப்போகிறேன. கடைகளுக்குப் போவது, அந்த ஊர் மக்களோடு பேசுவது, சுற்றிப்பார்ப்பது என மற்ற விஷயங்களுக்கு மொழி நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். டச்சு தெரியவில்லை என்றால் நம்மை யாரும் தவறாக நினைக்கப் போவதில்லை. ஆனால் தெரிந்திருந்தால், நாம் கூடுதல் சுதந்திரத்துடன் வாழ முடியும்.
டச்சு மொழி கற்பது சுலபமா?
எந்த அயல்மொழியும் தெரியவில்லை என்றால், கற்றுக்கொள்ள சில மாதங்கள் ஆகும். டச்சு மொழி உச்சரிப்பு கொஞ்சம் கஷ்டம். ஆங்கில மொழி தெரிந்திருந்தாலும், இந்த மொழியின் உச்சரிப்பை உள்வாங்கிக் கொள்ள சிலநாட்கள் தேவைப்படும். ஜெர்மன் மொழியின் உச்சரிப்பு ஓரளவு பொருந்தும். அங்குள்ள ஆசிரியர்களிடமே கற்றுக் கொள்வதால், உச்சரிப்பைத் தெளிவாகவும், சரியாகவும் கற்றுக்கொள்ள முடியும்.
பெரும்பாலான மாணவர்களுக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்பதால், ஆரம்wபத்தில் ஆங்கிலம் மூலம்தான் டச்சு சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அதன்பின், டச்சு மொழியை, டச்சில்தான் சொல்லித்தருவார்கள்.