“கிராமத்திலிருந்து வந்தா மட்டும்தான் இந்த மாதிரி யோசிக்க முடியும் என்பதெல்லாம் சும்மா கதை. சினிமாவுல வர்றா மாதிரி என் வாழ்க்கையில எந்தத் திருப்பமும் வர்ல. ரொம்ப சாதாரணமா என்னுடைய நண்பன் கெளதம் மூலம் பசுபதியைச் சந்திச்சேன். 2008-ல வேலை தேடிப் போனபோது, 'விஞ்ஞான ரதம்' பத்தி சொன்னாரு. எனக்குப் பிடிச்சிருந்தது. உடனே சேர்ந்துட்டேன்.” என்று சொல்ல ஆரம்பித்தார் அறிவரசன். பரிக்ஷன் அறக்கட்டளையின் 'விஞ்ஞான ரதம்' தமிழக மாணவ, மாணவியருக்கு ஒரு வரம். அதில் பயணம் செய்து, மாணவர்கள் மத்தியில் அறிவியலின் ஆச்சரியத்தைப் பரப்பி வருகிறார் அறிவரசன்.
“சின்னவயசிலிருந்து நான் எந்த ஒரு விஷயத்தையும் அதுக்கான நேரடி உதாரணம் மூலம் படிச்சு புரிஞ்சுப்பேன். அந்த மாதிரி எல்லோரும் படிக்கிறாங்களா? அதற்கான வாய்ப்பு, வசதி இருக்கான்னு பார்த்தா இல்லை. 'விஞ்ஞான ரதம்' மூலமா என்னோட கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்னு 2009 முதல் பல ஊர்களுக்குப் பயணம் போக ஆரம்பிச்சேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள கல்வி அதிகாரியோட ஒப்புதலுக்குப்பின் போவோம். அறிவியலைப் பாடப்புத்தகத்தில் இருந்து படிச்சு தெரிஞ்சுக்கறதுக்குப் பதில், நேரடியா பரிசோதனைகள் மூலம் தெரிஞ்சுக்கறது இன்னும் சுலபம்.
இயற்பியலில் வரும் நிலைமம் விதி (Law of inertia) எல்லோருக்கும் நன்றாகச் சொல்லத் தெரியும். ஆனால், அந்த விதியை பரிசோதனை செய்துக்காட்ட முடியுமா?
ஒரு முட்டையை எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் படுக்க வைத்துச் சுற்றுங்கள். கையை முட்டை மேலிருந்து மெதுவாக எடுத்துப் பாருங்கள். என்ன நடக்கும்? நீங்கள் கையை எடுத்ததும் முட்டை ஒரு சுற்று சுற்றிவிட்டுத்தான் நிற்கும். இது பச்சை முட்டையில் நடக்கும். காரணம், பச்சை முட்டைக்குள் திரவம் உள்ளது.
இதையே அவித்த முட்டையில் செய்தால், நீங்கள் கையை எடுத்தவுடன், முட்டையும் டக்கென்று சுற்றுவதை நிறுத்தும். இந்த மாதிரி ரொம்ப எளிதாக அறிவியலைப் பார்த்தும், செய்தும் கற்றுக்கொள்ள நிறைய பரிசோதனைகள் வைத்திருக்கிறோம். மாணவர்களும் இதில் பங்கேற்றுக் கொள்வார்கள். அவர்கள் முகத்தைப் பார்த்தே, அந்தப் பரிசோதனை புரிந்ததா, இல்லையா என்பதைக் கண்டுபிடித்து விடுவேன்.
இதுவரை இயற்பியல், வேதியியல், உயிரியல் என சுமார் 800 - -1000 பரிசோதனைகளாவது செய்து இருக்கிறோம். புதுப்புது பரிசோதனைகளை பல புத்தகங்களில் படித்து, எளிமைப்படுத்திச் சொல்லிக் கொடுக்கிறோம். அங்கிருக்கும் அறிவியல் ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி அளிக்கிறேன்.
எங்களுடைய பேருந்து ஒரு மாவட்டத்திற்குச் சென்றால், அங்கிருக்கும் அரசுப் பள்ளிகளுக்கு முதலில் போவோம். தனியார் பள்ளிகள் அழைத்தால், அங்கேயும் போய் பரிசோதனைகள் செய்து காண்பிப்போம். இதுவரை எங்களுடைய பேருந்து 3,000 பள்ளிகளுக்காவது சென்றிருக்கும். சராசரியாக 3 லட்சம் மாணவர்களையாவது சந்தித்திருப்போம். அமைதியாக அறிவியல் கல்வியைப் போதித்து வருகிறோம்.
அறிவியலும் ஒருமொழிதான். அதைப் புரிஞ்சு படிச்சாத்தான், நாளை நம் ஊருக்கு ஏதாச்சும் பண்ண முடியும் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன்” என்று நம்பிக்கை வார்த்தைகளைச் சொல்லி முடித்தார் அறிவரசன்.
அறிவரசனோடு சென்றால் ஒரு நாளில் :
• ஓர் அரசுப் பள்ளி போகலாம்
• 3 மணி நேரத்தில் 20 - 25 அறிவியல் சோதனைகள் செய்து பார்க்கலாம்.
• அறிவியல் கதைகள் கேட்கலாம்
• நாமே செய்து பார்க்க முடிந்த பரிசோதனைப் பொருட்கள் கிடைக்கும்.