அறிவியலை எளிமையாகச் சொல்லித்தர பல வழிகள் வந்தாலும், இன்னும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இவை சென்று சேரவில்லை. இந்தக் குறையைக் களையத்தான் பரிக்ஷன் அறக்கட்டளையின் தலைவரும், உணவு விஞ்ஞானியுமான பசுபதி, 'விஞ்ஞான ரதம்' என்ற பேருந்தை வடிமைத்திருக்கிறார். தமிழகத்திலுள்ள பல மாவட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இந்தப் பேருந்து செல்கிறது. 1,000க்கும் மேற்பட்ட அறிவியல் சோதனைகளுக்கான பொருட்கள், ஆசிரியர் என்று இந்தப் பேருந்தில் உண்டு.
இதில் பயணம் செய்யும் அறிவரசன் என்ற 31 வயது இளைஞர்தான், குழந்தைகளுக்கெல்லாம் இப்போது ஹீரோ. அறிவரசன், சென்னையில் பிறந்து, வளர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் தோல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் படித்திருக்கிறார். வழக்கமான ஐ.டி. வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், விஞ்ஞான ரதத்தில் பயணம் செய்து வருகிறார்.