பிறப்பு- 07.10.1938 | மறைவு 29.7 2016
பூமி ஒரு மையப்புள்ளியில் இருந்து சுற்றுகிறது என்று, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் அது சுற்றும்போது சத்தம் வருமா? வராதா? இப்படியெல்லாம் யாரும் யோசித்ததில்லை.
ஆனால் ஒரு கவிஞருக்கு காந்தம், அறிவியல் பற்றி எல்லாம் கவலையில்லை. அவரின் சிறுவயது கற்பனை வேறாக இருந்தது. இரவில் மழைக்காலத்தில் ஓயாமல் தவளைகள் எழுப்பும் ஓசையைக் கேட்டிருக்கிறார் கவிஞர். அந்த ஓசை பூமி அச்சு சுற்றுவதால் வெளிப்படும் ஒலி என்று கருதி கவிதை எழுதினார். அந்தக் கவிஞர் ஞானக்கூத்தன்.
இவருடைய கவிதைகள் சாதாரண மனிதர்களின் விருப்பு வெறுப்புகளையும் சிக்கல்களையும் முன்னிலைப்படுத்தின.
ஞானக்கூத்தனின் இயற்பெயர் அரங்கநாதன். திருமந்திரத்தைப் படித்த பாதிப்பில் 'ஞானக்கூத்தன்' என்கிற புனைப்பெயரை வைத்துக் கொண்டார். மயிலாடுதுறை அருகில் திரு இந்தளூர் எனும் ஊரில் பிறந்த இவர்,'கசடதபற' இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர்.
திருக்குறள் இரண்டடிகளைக் கொண்டது. அதை ஞானக்கூத்தன் தன் பார்வையில் 'மோதிர விரலும் சுண்டு விரலும் போல்' என உவமையில் வியக்கிறார். முதல் வரி நான்கு சீர்களும் இரண்டாம் அடி மூன்று சீர்களும் கொண்டது குறள். அப்படிப் பார்க்கையில் ஞானக்கூத்தனின் உவமை உண்மைதான் என்பதை நினைத்து உவகை கொள்ள முடிகிறது.
ஆரம்பத்தில் மரபுக் கவிதைகள் எழுதினார். பின்னர் வசன கவிதைகளுக்கு மாறிவிட்டார்.
இவருடைய சிந்தனைகள், வேறு யாரும் அந்தக் கோணத்தில் யோசிக்காத வகையிலேயே இருக்கும்.
அரசுப் பணியாளர்கள் பெரும்பாலும் அலுவலகத்தில் தூங்கி வழிவர் என்பது பொதுவான கணிப்பு. நகைச்சுவை துணுக்குகளும் ஏராளம். அதை மையமாகக் கொண்டு ஒரு வரலாற்றுச் சம்பவத்தை கையிலெடுக்கிறார் ஞானக்கூத்தன்.
தமிழ்ப் புலவர் மோசி கீரனார், தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையை காணச் சென்றபோது களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் உறங்கியதும், அரசன் அவருக்கு கவரி (விசிறி) வீசிய கதையும் அனைவரும் அறிந்ததே. அதை,
'மோசி கீரா'
உன்மேல் அளவிறந்த
அன்பு தோன்றிற்று
இன்றெனக்கு
அரசாங்கத்துக் கட்டடத்தில்
தூக்கம் போட்ட முதல் மனிதன்
நீதான் என்ற காரணத்தால்.”
கேலியும் நகைச்சுவை உணர்வும் கொண்டு எழுதியிருக்கிறார். கைம்பெண் வெள்ளாடை அணிந்திருப்பதை, 'நடக்கும் வலம்புரிச் சங்கு' எனவும் , அணிலை 'சணலால் செய்தது போன்ற உடல்' எனவும், கொடியில் தொங்கும் காய்களை, 'தேவாங்குக் குட்டியின் விரல்கள் போல்' எனவும் வியப்பான உவமைகளை எடுத்துக்காட்டுகளாகத் தந்தார்.
'எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதை விட மாட்டேன்' போன்ற கவிதைகள் வழியாக அசலான குரலாக ஒலித்தவர் ஞானக்கூத்தன்.
அவருடைய நூல்கள்
அன்று வேறு கிழமை
சூரியனுக்குப் பின்பக்கம்
கடற்கரையில் சில மரங்கள்
மீண்டும் அவர்கள்
பென்சில் படங்கள்
ஞானக்கூத்தன் கவிதைகள்
என் உளம் நிற்றி நீ
இம்பர் உலகம்