சில ஆண்டுகளுக்கு முன்புவரை, கிராமங்களில் விறகு அடுப்புகள்தான் அதிகம். விறகு அடுப்புகளிலும் பல வகை உண்டு.
பெரும்பாலான பகுதிகளில், பிரதான வீட்டிலிருந்து ஒதுங்கியே அடுப்படி இருக்கும். ஒரே பாத்திரம் வைக்கும் அடுப்பு, இரண்டு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பு உண்டு. இரு பாத்திரங்கள் வைக்கும் அடுப்பில், ஒரு பகுதியில் விறகு நுழைப்பதற்கான வாய் இருக்கும். ஒரு புறத்தில் இருந்து மற்றொரு அடுப்புக்கு தீச் சுடர் செல்ல வழி இருக்கும். மேற்பகுதியில் பாத்திரம் நிலையாக நிற்க, மூன்று குமிழ்கள் இருக்கும்.
மண்ணில் செய்யப்பட்ட இவை, சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருக்கும். புகை போக்கிகளுடன் இணைக்கும் வகையில், அடுப்பின் ஒரு மூலையில் துளை இடப்பட்டிருக்கும். அந்தத் துளை மண்குழாயுடன் இணைக்கப்பட்டு, குழாய், கூரையின் மேல்பாகத்துக்கு வெளியே நீண்டிருக்கும். இரட்டை அடுப்புக்கு சில பகுதிகளில் கொடியடுப்பு என்று பெயர் உண்டு. தனியே எடுத்துச் செல்லும் வகையிலும், சுவருடன் இணைக்கும் வகையிலும் இருக்கும்.
குமுட்டி அடுப்பு என்று ஒரு வகை உண்டு. அது மண், இரும்பு என இருவகையில் செய்யப்பட்டது. மேல்பாகம் பாத்திரம் வைப்பது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதன் நடுப்பகுதியில் சல்லடை போல் இருக்கும். அந்தப் பகுதியில் மரக்கரித்துண்டுகள், உமி போட்டு பற்ற வைக்க வேண்டும். கரியும் உமியும் மெதுவாக எரிய எரிய அதன் சாம்பல் சல்லடை வழியாகக் கீழிறங்கி விடும்.மழைக்காலங்களில் விறகு கிடைக்காது. எனவே, விறகை, அரைகுறையாக எரித்து கரியாக மாற்றி அதனைப் பயன்படுத்தினர் நம் முன்னோர்.