பேச்சுத் தமிழில் வடசொல்லை மிகுதியாகப் பயன்படுத்தாவிட்டாலும், எழுத்துத் தமிழில் பற்பல வடசொற்களை நாம் பயன்படுத்துகிறோம். மொழியறிந்து எழுத வேண்டிய எழுத்தாளர்களே சில சொற்களைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், அவற்றைத் தமிழ்ச்சொற்களாகவே நினைத்துக் கொள்கிறோம். அத்தகைய சொற்கள் எவையென்று பார்ப்போம்.
தருணம் என்றொரு சொல் இருக்கிறது 'இந்தத் தருணத்தில் கூறுகிறேன், வேறு தருணத்தில் பார்க்கலாம், கூட்டம் கூடிய தருணத்தில் தலைவர் வந்தார்' என்று பலவாறாக எழுதுகின்றனர். தருணத்தைத் தவிர்த்து எழுதத் தெரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். தருணம் என்பது வடசொல்லாகும். அதற்கு நிகரான தமிழ்ச்சொற்கள் வேளை, பொழுது ஆகியன. 'இவ்வேளையில் கூறுகிறேன், வேறு பொழுதில் பார்க்கலாம், கூட்டம்கூடிய பொழுது தலைவர் வந்தார்' என்று பயன்படுத்த வேண்டும்.
அதேபோன்று பட்சம் என்ற சொல்லையும் நம்மவர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். 'அதிக பட்சம், குறைந்த பட்சம், இருக்கும் பட்சத்தில், இல்லாத பட்சத்தில்' என்று எழுதுவார்கள்.
அதிகம் என்பதும் வடசொல்தான். அதிகம் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் 'மிகுதி' என்பதாகும். அதிகரித்தது என்று சொல்லாமல் 'மிகுந்தது, கூடியது' என்று சொல்ல வேண்டும்.
பட்சம் என்பதற்கு அச்சொல் பயன்படுத்தப்படும் இடத்திற்கேற்ப அளவு, வேளை, நிலை, போது ஆகிய சொற்களைப் பயன்படுத்தலாம். பயன்படுத்தலாம் என்றுதான் சொல்ல வேண்டும். உபயோகப்படுத்தலாம் என்று சொன்னால் வடசொல்லாகிவிடும். உபயோகம் என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல் பயன்பாடு.
'இவ்வாண்டு வெய்யில் அதிகபட்சமாக இருக்கும்' என்று கூறாமல், 'இவ்வாண்டு வெய்யில் மிகுந்த அளவு இருக்கும்' என்று சொல்ல வேண்டும். 'குறைந்தபட்ச மழைதான் பெய்தது' என்று சொல்லாமல், 'குறைந்த அளவு மழைதான் பெய்தது' எனல் வேண்டும். இல்லாத பட்சத்தில், இருக்கும் பட்சத்தில் என்பனவற்றை இல்லாதபோது, இருக்கும்போது என்று கூறலாம்.
சமீபத்தில் என்றும் சொல்வார்கள். 'சமீபத்துல ஒரு விபத்து நடந்தது' என்பார்கள். சமீபம், விபத்து இரண்டும் வடசொற்கள். சமீபம் என்பதை அண்மை என்றும் விபத்து என்பதைக் 'கொடுமுட்டு' என்றும் கூறலாம். “அண்மையில் ஒரு கொடுமுட்டாயிற்று” எனலாம்.
தற்சமயம் என்பதைத் 'தற்போது' என்று கூறலாம். “தற்சமயத்திற்கு ஒரு வேலை கிடைத்தால் போதும்” என்பதைத் “தற்போதைக்கு ஒரு வேலை கிடைத்தால் போதும்” என்று சொல்லலாம்.
மகுடேசுவரன்