கன்னட காவிரிக் கரையில் தமிழ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2018
00:00

தென்கர்நாடகத்தின் காவிரிக் கரையை ஒட்டிய பகுதிகளில் அலைந்து திரிவதற்குச் சென்றிருந்தேன். அந்தப் பாதை வழியாகத்தான் 11ஆம் நூற்றாண்டில் சோழனைத் துறந்த இராமானுஜர் இடம்பெயர்ந்து சென்றார். சத்தியமங்கலத்திலிருந்து 27 கொண்டையூசி வளைவுகளாலான திம்பம் காட்டுவழியைப் பிடித்து ஏறினோம். திம்பத்திலிருந்து ஆசனூர் வழியாக ஒரு காட்டுப் பாதை செல்கிறது. அடர்ந்த கானகத்திற்குள் செல்லும் அந்த வழியில் எண்ணற்ற வனவிலங்கு குறுக்கீடுகள்.
'கேர்மாளம்' என்ற மலைச்சிற்றூர் வழியே சென்றால், கர்நாடகத்திற்கும் தமிழகத்திற்கும் தொடு எல்லையில் இருக்கும் 'கொள்ளேகால்' என்ற நகரத்தை அடையலாம். இந்தக் 'கொள்ளேகால்' பகுதியில் இருந்து மைசூர் அருகேயுள்ள மேல்கோட்டை வரையான பாதை, இராமானுஜர் நடந்த பாதை.
சுற்றுவட்டார விவசாய விளைபொருட்களின் சந்தையாகத் திகழ்வதுதான் கொள்ளேகாலின் சிறப்பு. கொள்ளேகாலின் வயல்வெளிகளில் சற்றுநேரம் உலவினோம். எங்கெங்கும் பசுமைபோர்த்திய நிலமகள். தென்னையும் வாழையும் நெல்லும் செழித்து விளைந்திருக்கும் மண். கொள்ளேகாலில் இருந்து காவிரி ஆற்றைத் தாண்டுவதற்குப் பழைய பாலம் ஒன்று இருக்கிறது. ஆற்றில் அளவான நீரோட்டம் இருந்தது. நாம் சென்றிருந்த நேரத்தில் மேற்குக் கர்நாடகத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்தது.
பாலத்தின் வழியே ஆற்றைத் தாண்டி வடக்காகச் செல்லும் சாலையில் சென்றால், 'தலைக்காடு' என்ற ஊர் வருகிறது. தமிழகத்துக்குத் திருச்சிராப்பள்ளியில் உள்ள காவிரியைப்போல் கர்நாடகத்தின் அகன்ற காவிரி 'தலைக்காட்டுக் காவிரி'தான். ஆற்றில் சுழலோ இழுப்போ எதுவுமிருக்காது. ஆற்றுநீர் அங்கே தேங்கித் தயங்கி நகரும். குளிப்பதற்கு உகந்த இடம். தலைக்காட்டில்தான் இராமானுஜர் நிறுவிய 'கீர்த்தி நாராயணர் கோவில்' இருக்கிறது.
தலைக்காட்டிலிருந்து மேலும் வடக்காகச் சென்றால் 'திருமுக்கூடல்' எனப்படும் நரசிபுரம் வருகிறது. காவிரியும் அதன் பெருந்துணை ஆறான கபினியும் கலக்குமிடம்தான் திருமுக்கூடல். திருமுக்கூடல் காவிரியில் மணிக்கணக்கில் நீராடினோம்.

மைசூரு
திருமுக்கூடலில் இருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில்தான் மைசூரு நகரம். தென்னிந்தியாவின் அழகியதும் தூய்மையானதுமான நகரம் மைசூரு. எங்கெங்கும் வானுயர்ந்த மரங்களும் பழம்பெருமை மிக்க கட்டடங்களும் அகன்ற தெருக்களும் கொண்ட நகரம் அது. அவ்வூரைப் பார்க்கையில்தான் ஒரு நகரத்தின் அழகு விளங்கும். விடிகாலை நேரத்தில் மைசூரு அரண்மனையின் தோற்றத்தில் மெய்ம்மறந்தோம். அங்கே உலவும் ஆயிரம் புறாக்களின் 'குகுக்கு' ஓசையால் அவ்விடம் இசைக்கச்சேரிக் கூடமானது.
மைசூரிலிருந்து பெங்களூரு செல்லும் வழியில் இருப்பதுதான் ரங்கப்பட்டணம். காவிரி இரண்டாகப் பிரிந்து தீவு போன்ற பகுதியை உருவாக்குகிறது. அவ்விடத்தைப் பயன்படுத்தித்தான் ஹைதர்அலி கோட்டை கட்டினார். கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டு, அரங்கநாதன் திட்டு பறவைகள் சரணாலயம் ஆகியவை அவ்விடத்தில் கட்டாயம் காணப்பட வேண்டியவை.

ரங்கப்பட்டணம்
ரங்கப்பட்டணத்துக் காவிரியின் மேற்குக் கிளையில் 'திரிவேணி சங்கமம்' என்ற படித்துறை உள்ளது. அவ்விடத்துப் பெருமரங்களின் நிழலும் பழங்காலக் கட்டடங்களின் அழகும் மயங்க வைக்கின்றன. ரங்கப்பட்டணக் கோட்டைக்குள் திப்புவின் அரண்மனை இடிபாடுகள் இருக்கின்றன. அவர் உயிர்நீத்த இடமும் நினைவுப்பகுதியாக மாறியிருக்கிறது. அங்கே காவிரியின் கிழக்குக் கிளையில் மணிக்கணக்கில் நீராடினோம்.
ரங்கப்பட்டணத்திலிருந்து காவிரியைத் தாண்டி வந்தால் அதன் துணை ஆறான 'லோகபவானி' ஆற்றைக் காணலாம். அதன் கரையில் 'கரிகெட்டா' என்ற மலை இருக்கிறது. கரிகெட்டா என்றால் 'யானைமலை' என்பது பொருள். அம்மலை மீதிருந்து மைசூரு மண்டலத்தின் முழுக்காட்சியையும் கண்டோம். நடுநரம்புபோல் காவிரிநீர் ஓடிக்கொண்டிருக்க எங்கெங்கும் வயல்வெளிப் பச்சையே கண்ணுக்குத் தெரிந்தது.
கரிகெட்டாவிலிருந்து மேலும் வடக்காகச் சென்றால், 'பாண்டவபுரம்' என்னும் சிற்றூர் வருகிறது. அங்கிருந்து ஒரு மணிநேரப் பயணத்தில் 'மேல்கோட்டை' வருகிறது. மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரமாக விளங்கிய மேல்கோட்டை குன்றின்மீது அமைந்த சிற்றூராகும். தமிழ்நாட்டுத் திருவரங்கத்திலிருந்து இராமானுஜரைப் பின்பற்றிச் சென்றவர்களின் குடும்பங்கள் அங்கே வசிக்கின்றன. அங்குள்ளோர் பலருக்கும் தமிழ் தெரிகிறது. மேல்கோட்டைதான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறப்பிடமாகும்.

இராமானுஜர் நிறுவிய கோவில்கள்
தொண்டனூர் நம்பி என்பவர்தான் இராமானுஜரை அங்கே அழைத்துச் சென்றவர். அங்கிருந்தபோது ஹொய்சாள மன்னர் பிட்டி தேவராஜனின் மகளுக்கு இராமானுஜர் பித்தம் தெளிவித்ததால் மகிழ்ந்த மன்னன் வைணவத்தைத் தழுவி 'விஷ்ணுவர்த்தன்' என்ற பெயர் பெற்றானாம்.
இராமானுஜர் அங்கே வாழ்ந்த காலத்தில் தொண்டனூர், மேல்கோட்டை, குடகு, தலைக்காடு, பேளூர் ஆகிய ஐந்து ஊர்களில் வைணவக் கோவில்களை நிறுவினார். 'பஞ்ச நாராயணத் தலங்கள்' என்று இவை அழைக்கப்படுகின்றன. மேல்கோட்டை செலுவநாராயணர் கோவிலில் தமிழ்ப் பாசுரங்கள் பாடப்படுகின்றன.
தொண்டனூரில் உள்ள ஏரியில் எப்போதும் நீர்வற்றுவதில்லை. ஏரிக்கரையில் வானுயர்ந்தவாறு இராமானுஜர் சிலையும் இருக்கிறது. தொண்டனூர் நம்பிநாராயணன் கோவிலில் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. இராமானுஜர் நடந்த பாதை, தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் பாலம் அமைத்த பாதை என்றே சொல்லவேண்டும்.
- மகுடேசுவரன்

Advertisement

 

மேலும் பட்டம் செய்திகள்:வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X