முகம்மது இஸ்மாயில் (எ) காயிதே மில்லத்
5.6.1896 - 5.4.1972
திருநெல்வேலி
'நேர்மை' தான் அவரது நற்பண்புகளுக்கு அடித்தளமாக இருந்தது. தூய்மை, எளிமை, தேசபக்தி, மொழிப்பற்று என அனைத்தையும் மூச்சாகக் கொண்டிருந்தார். தன்னலமில்லாத அரசியல் நடவடிக்கைகளால் அனைவராலும் விரும்பப்பட்டு, 'காயிதே மில்லத்' என்று அழைக்கப்பட்டார். உருது மொழியில் அதற்கு, 'வழிகாட்டும் தலைவர்' என்று பொருள்.
பள்ளிக் கல்வியை திருநெல்வேலியில் முடித்து, உயர் கல்விக்காக சென்னை வந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கல்லூரித் தேர்வைப் புறக்கணித்தார். சமுதாயப்பணி அவரை அரசியலுக்கு இழுத்து வந்தது. பின்னர் முஸ்லிம் லீக் அமைப்பில் இணைந்து, அரசியல் வாழ்க்கையிலும் கண்ணியத்தைக் கடைப்பிடித்தார். சுதந்திரத்துக்குப் பிறகு நாடு பிரிவினை கண்டபோது, இந்திய முஸ்லிம் லீக் கட்சிக்குத் தலைவரானார். இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் இருந்தார். ராஜாஜி, காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி, பெரியார் என எல்லா தலைவர்களும் இவர் மீது மதிப்புக் கொண்டிருந்தார்கள்.
மாநில மொழிகளின் உரிமைக்காகப் போராடியது மட்டுமன்றி, 'இஸ்லாம் என் மதம்; தமிழ் என் தாய் மொழி' என்று கூறினார். 1949இல் தேசிய மொழி பற்றி விவாதம் எழுந்தபோது, 'இந்திய மொழிகளில் மிகப் பழமையானதும் ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வருவதும் தமிழ்தான். எனது கூற்றை எந்த வரலாற்று ஆசிரியராலும் மறுக்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும் நயங்களும் நிறைந்த மொழி தமிழ். எனது தாய் மொழி பற்றி நான் பெருமைப்படுகிறேன். பழமையான மொழியைத்தான் இந்நாட்டின் தேசிய மொழியாக்க வேண்டுமென்றால், இந்தியாவின் தேசிய மொழியாகத் தமிழைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று துணிவுடன் கூறினார். இஸ்லாமிய மக்கள் கல்வி அறிவுபெற அடிப்படைக் காரணமாக இருந்தார். இதற்காக, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இஸ்லாமிய சமூகத்தில் உள்ள செல்வந்தர்களிடம் பேசினார். அதன் பிறகே, முஸ்லிம் கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டன.
மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபட்டு, வாழ்நாள் முழுதும் மிக எளிமையாக வாழ்ந்த காயிதே மில்லத்தின் நினைவிடம், சென்னை திருவல்லிக்கேணியில் வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.