வெங்கியைக் கேளுங்க
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2018
00:00

மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானி

மழை பெய்யும்போது தரையில் சில இடங்களில் வண்ணங்களாகத் தோன்றுவது ஏன்?
ரா.மாதவன், 8ஆம் வகுப்பு, சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளி, தேவகோட்டை.

இன்றைய காலத்தில் போக்குவரத்துக்காகப் பல்வேறு வாகனங்களைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. அவை இயங்கத் தேவைப்படும் எரிபொருட்களான பெட்ரோல், டீசலில் இருந்து சில துளிகள் பயணத்தின்போது சாலைகளில் கசிந்திருக்கும். மழை பெய்யும்போது அந்த எரிபொருளின் மீது நீர் மெல்லிய படலமாகப் படர்கிறது. இந்த மென்படலம் முப்பெட்டகம்போல ஒளிச் சிதறலை உண்டாக்கும். அதன் வழி நிறப்பிரிகை ஏற்பட்டு, வானவில்போல பல நிறங்கள் தரையில் தெரிகின்றன.

இணை பிரபஞ்சங்கள் (parallel universes) என்றால் என்ன?
ஜே.ஜேஸ்பர், 12ஆம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி, மதுரை.

ஒரு கால்பந்து வீரர் எட்டி உதைக்கும் காட்சியைப் பார்த்து, பந்து எந்தத் திசையில் செல்லும் எனச் சொல்லிவிட முடியும். ஆனால், அணுத் துகள்களின் நுண்ணிய விந்தை உலகில் விதிகள் விசித்திரமானவை. எர்வின் சோடிங்கர் (Erwin Schrodinger) எனும் குவாண்டம் தத்துவ விஞ்ஞானி பெயரில் உலவும் 'சோடிங்கரின் பூனை' (Schroedinger's Cat) என்ற கற்பனை சோதனையைப் புரிந்துகொண்டால் இதற்கான விடை கிடைக்கும்.
வெளியில் இருந்து பார்க்க முடியாத அறையில் ஒரு பூனையை அடைத்துவிடுவோம். அந்த அறையில், தானாகக் கதிர் வீச்சு செய்யும் ஐசோடோப்பு அணுக்கள் சிலவற்றை வைத்து விடுவோம். அந்த அணு இயற்கையாகக் கதிரியக்கம் செய்யும்போது பீட்டா துகள் வெளிப்படும். பீட்டா துகளால் செயற்படும் ஓர் இயந்திரம் விஷவாயு நிறைந்த குப்பியைத் திறக்கும். இதனால் உள்ளே இருக்கும் பூனை மடியும். அதேபோல அறையை நாம் திறந்து பார்த்தாலும், விஷவாயு குப்பி திறக்கும் படியான ஓர் இயந்திரம் உள்ளது எனவும் கொள்வோம்.
இப்போது பூனையின் நிலை என்ன? ஐசோடோப்பு அணுக்கள் இன்றோ அல்லது ஆயிரம் ஆண்டுகள் கழித்துக்கூடச் சிதையலாம். ஐசோடோப்பு என்று சிதையும் என உறுதியாகக் கூற முடியாது. அறையின் கதவைத் திறந்தால் பூனை மடிந்துவிடும். அதற்கு முன்னரே மடிந்து விட்டதா அல்லது அறையைத் திறந்ததால் மடிந்ததா எனவும் கூற முடியாது.
இவ்வாறே, அணுக்களின் உலகை அறிய முயன்றால், அதை நாம் சற்றே மாற்றி அமைத்து விடுவோம் என்கிறது இந்த குவாண்டம் தத்துவம். இதனை 'பார்வையாளர் விளைவு' (observer effect) என்கிறார்கள். அறையைத் திறந்து பார்க்கும் முன்னர், பூனை 50 சதவீதம் மடிந்தும் 50 சதவீதம் உயிருடனும் இருப்பதாகவே குவாண்டம் தத்துவம் கூறுகிறது. சில சமயங்களில் உயிருடனும் சில சமயங்களில் இறந்தும் இருப்பதாக இயற்பியலாளர்கள் சொல்வார்கள்.
இந்த முரணைத் தீர்க்கவே இணை பிரபஞ்சங்கள் (parallel universes) எனும் கருத்தை இயற்பியலாளர்கள் முன்வைக்கிறார்கள். ஒரு பிரபஞ்சத்தில் பூனை மடிகிறது; மற்றொரு பிரபஞ்சத்தில் பூனை உயிரோடு இருக்கிறது. அதாவது ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு நிகழ்விலும் பல்வேறு சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்தந்த சாத்தியக்கூறுகள் அனைத்தையும் மெய்ப்பிக்கும் விதமாக வெவ்வேறு புதிய இணை பிரபஞ்சங்கள் உருவாகின்றன என்கிறது இந்தத் தத்துவம்.


சிவப்பு நிறம் அதிக அலைநீளம் கொண்டிருக்கக் காரணம் என்ன? இதைவிட அதிக அலைநீளம் கொண்ட நிறம் இருக்கிறதா?
ஆ.யோகேஸ்வரி, 5ஆம் வகுப்பு, மாநகராட்சி தொடக்கப் பள்ளி, பூலுவபட்டி, திருப்பூர்.

சிவப்பு நிறம் ஏன் சிவப்பாகத் தெரிகிறது என்று கேட்பது போல குழப்பமான கேள்வி இது. 620 முதல் 750 நானோ மீட்டர் (nm) அலை நீளம் உடைய மின்காந்த அலைகளே சிவப்பு நிற ஒளி. அதே போல, 380-450 nm அலைநீள மின்காந்த அலைகள் ஊதா நிறம். சிவப்புக்கு மேலாகவும் ஊதாவுக்குக் கீழாகவும் அலைநீளம் கொண்ட மின்காந்த அலைகள், நமக்குப் புலப்படாது. ஒரு மில்லிமீட்டர் அலைநீளம் முதல், சுமார் 10,000 கி.மீ. அலைநீளம் வரை உள்ள மின்காந்த அலைகளே ரேடியோ, டிவி ஒளிபரப்புக்குப் பயன்படுகின்றன. அதேசமயம் அலைபேசிக்குப் பயன்படுத்தப்படும் மின்காந்த அலைகள் 30 செ.மீ.க்கும் குறைவான அலைநீளம் உடையவை. ரேடியோவை வைத்து அலைபேசி சிக்னலைப் பெற முடியாது.
மின்காந்த அலைகளை உணரும் ஒரு கருவிதான் நமது கண்கள். கண்கள் உணரும் மின்காந்த அலைகளை 'ஒளி' எனவும், ரேடியோ, டிவி மின்காந்த அலைகளை 'ரேடியோ அலைகள்' எனவும், கைபேசி அலைகளை 'மைக்ரோ வேவ்' எனவும் அழைக்கிறோம்.
சிவப்பு நிறத்தின் அலைநீளத்தைவிட கூடுதலான அலைநீளம் உடைய மின்காந்த அலைகள் உள்ளன. அவை நமது பார்வைக்குப் புலப்படுவதில்லை. நமது கண்களுக்குத் தெரியாத புறஊதா மின்காந்த அலைகள் சில பூச்சிகளுக்குத் தெரியும்! அவற்றின் கண்கள் சற்றே வேறுபட்ட கருவி அவ்வளவே.

வெண்டைக்காய் சாப்பிட்டால் கணித அறிவு கூடுமா?
வெ.நந்தகுமார், 11ஆம் வகுப்பு, ஸ்ரீ லக்ஷ்மி சோர்டியா பள்ளி, கடலூர்.

வெண்டைக்காயின் தாவரப் பெயர், அபெல்மாஸ்ச்ஸ் எஸ்க்யுலென்டஸ் (Abelmoschus Esculentus). இதில், ஃபோலேட் (Folate) எனப்படும் வைட்டமின் பி9, வைட்டமின் ஏ, பாஸ்பரஸ் போன்ற முக்கியச் சத்துகள் உள்ளன. இதன் விதையின் சத்து நுண் கிருமிகளை அழிக்கும். குடல் சுத்தம், வயிற்றுப் புண், சுவாசக் கோளாறு போன்ற பல நோய்களுக்கு வெண்டைக்காய் மருந்தாக உதவுகிறது. எனவே, வெண்டைக்காய் முக்கியமான ஆரோக்கிய உணவு என்பதில் சந்தேகமே இல்லை. இருந்தாலும், வெண்டைக்காய் சாப்பிட்டால் கணித அறிவு கூடும் என்பதற்கு, சரியான அறிவியல் ஆதாரம் எதுவுமில்லை. கணித அறிவு அதிகரிக்க வேண்டுமெனில், முறையான பயிற்சிகளுடன் படிக்க வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X