விலங்குகள் இயல்பை மாற்றாதீர்!
சமீபத்தில், பழமுதிர் சோலை முருகன் கோவிலுக்கு போகும் வழியில், அங்கிருந்த குரங்குகளுக்கு, தின்பதற்கு பழங்கள் கொடுத்தோம். இதைப் பார்த்த வனத்துறை அதிகாரி எங்களை அழைத்து, 'குரங்குகளுக்கு, இப்படி பழங்கள் கொடுத்து பழக்குவது தவறானது...' என்று அறிவுறுத்தினார்.
ஆச்சர்யமாக இருந்தது... 'விலங்குகளுக்கு உணவிடுவது நல்லது தானே...' என்று கேட்டோம்.
அதற்கு அவர், 'சுற்றிப் பார்ப்பதற்கு வரும் மனிதர்கள், பிரியத்தில் தான், குரங்குகளுக்கு உணவு கொடுக்கின்றனர். ஆனால், தினமும் இப்படியே, இந்த குரங்குகளுக்கு உணவு கிடைத்து விடுவதால், கஷ்டப்பட்டு உணவு தேடுவது, மரங்களின் மேல் ஏறி பழங்கள் பறிப்பது போன்ற பழக்கங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக் கொண்டிருக்கின்றன.
இப்படியே போனால், அவைகள், பயிற்சி இல்லாமலேயே புதிய தலைமுறைக்கு மாறிவிடும் அபாயம் உள்ளது. இப்போதே, வரிசையில் உட்கார்ந்து பிச்சை எடுப்பது போல, இந்த குரங்குகளும், டூரிஸ்ட்களிடம் பிச்சை எடுத்து வருகின்றன. எனவே, இயற்கையுடன் இணைந்து வாழும் விலங்குகளை, அதன் போக்கில் வளர விடுவதே ஆரோக்கியமானது...' என, கூறினார்.
கேட்கும்போதே மனசு, 'திக்'கென்றது; நிறைய யோசிக்கவும் வைத்தது.
இலவச அரிசி வாங்கி, இலவச மிக்ஸியில் சட்னி அரைத்து, இலவச கிரைண்டரில் இட்லிக்கு மாவாட்டி, இலவச மின் விசிறியில் இளைப்பாறி, இலவச, 'டிவி'யில் படமும், சீரியல்களும் பார்க்கும் நம்ம ஊர் மக்களுக்கும், இதுதான் நடக்கிறது; உழைக்கவே மனம் வருவதில்லை.
மேட்டர் என்னவோ குரங்குகளைப் பற்றித்தான். ஆனால், அது, நம் மக்களுக்கும் அப்படியே பொருந்துவதை நினைத்தால், மனம், 'பகீர்'ரென்கிறது.
இந்த நிமிடத்திலிருந்து நாம் திருத்திக் கொள்வோமா தோழர்களே!
—சி.பி.செந்தில், சென்னிமலை.
ஓய்வு பெற்றவர்கள் செய்யும் சேவை!
எங்கள் தெருவில், அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்று, பென்ஷன் வாங்கும் மூன்று பெரியவர்கள் இருக்கின்றனர். காலையில், மூவரும் ஒன்றாக கிளம்பி, அருகில் இருக்கும் பூங்காவிற்கு, 'வாக்கிங்' செல்வர். ஒருநாள் காலை, 8:00 மணிக்கு, மூவரையும், அருகிலுள்ள தனியார் பள்ளியருகே பார்த்தேன். மூவரும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, சாலையை கடக்கும் குழந்தைகளுக்கு உதவுவது, பள்ளி வாகனத்திலிருந்து இறங்கும் குழந்தைகளை அழைத்து போய் பள்ளியில் விடுவது போன்ற காரியங்களை செய்தபடி இருந்தனர்.
இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது, 'காலை, 7:30 மணிக்கே, 'வாக்கிங்'கை முடித்து விடுவோம். பின், நேராக அந்த தனியார் பள்ளிக்கு சென்று, அங்கு, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். அந்த பள்ளியில் பெற்றோர் - ஆசிரியர் கழகம் இருக்கிறது. அந்த கழகத்திலிருந்து சிலர், போக்குவரத்தை ஒழுங்கு செய்ய வருகின்றனர். ஆனால், அவர்களால் அனைத்து பணிகளையும் செய்ய முடிவதில்லை. எனவே, எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். மாலை வேளையிலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த, அந்த தனியார் பள்ளிக்கு சென்று விடுவோம்...' என்றனர்.
பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின், பூங்காக்களில் உட்கார்ந்து வெட்டி கதை பேசிக் கொண்டிருப்போர் மத்தியில், உருப்படியான காரியம் செய்யும் அந்த பெரியவர்களை பாராட்டி வந்தேன்.
— ஜெ.கண்ணன், சென்னை.
பெண் குழந்தைகளை காப்போம்; வல்லரசாக மாறுவோம்!
அரசு மருத்துவமனையில், செவிலியர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தேன். கர்ப்பிணி பெண் ஒருவர், 'அட்மிட்' ஆகியிருந்தார். அவருக்கு, அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. பெண்ணாக பிறந்து விட்டதே என்று, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்காமலும், சரியாக பராமரிக்காமலும் இருந்தார், அந்த தாய்.
ஒரு கட்டத்தில், தாயின் கட்டிலுக்கு அடியில் பெண் குழந்தை கிடந்தது. அக்குழந்தை உடல் எடை குறைந்து, சோர்வுற்று, உடல் முழுதும் மஞ்சள் நிறம் படர்ந்து, அழுதபடியே இருந்தது. இதைக் கண்ட நாங்கள், எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அந்த தாயும், அவள் குடும்பத்தினரும் கேட்கவில்லை.
மருத்துவர் வந்து மிரட்டிய பின், மேல் சிகிச்சைக்காக அக்குழந்தையை வேறொரு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஒரு பக்கம், பெண்கள் சாதிக்கின்றனர்; மறுபக்கம் பெண்கள் சிதைக்கப்படுகின்றனர். இச்சிதைப்பிற்கு முடிவு தான் என்ன?
இப்போதெல்லாம், 'மகளிர் தினம்' என்பது வெறும் ஒரு வார்த்தையாகவும், ஒரு நாளாகவும் மட்டுமே இருக்கிறது. இந்நிலை மாறினால் தான், நம் நாடு, வல்லரசாக மாறும்.
— வி.கீர்த்திகா, வேலுார்.
கண்ணிருந்தும் குருடரானவர்!
நண்பனின் புது மனை புகு விழா அழைப்பை ஏற்று சென்றிருந்தேன்; கடந்த, 2015ம் ஆண்டு பெய்த மழையில், முதல் மாடி வரையில் வெள்ளம் வந்து மூழ்கிய பகுதிக்கு பக்கத்திலேயே இருந்தது, நண்பன் வாங்கி இருந்த வீடு.
பறவைகள் சரணாலயமான சதுப்பு நிலத்தில், மண்ணைக் கொட்டி தூர்த்து மேடாக்கி, அதை பிளாட்டாக்கி, கட்டடம் கட்டி விற்றிருந்த ஒரு பில்டரிடமிருந்து, வீட்டை வாங்கியிருந்தான். அதுவும் தரை தளத்தில்!
அதிர்ந்து போன நான், 'சொந்த வீடுங்கறது நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் கனவு தான்; அதுக்காக இப்படியா... இந்த இடத்தைப் பற்றி நல்லா தெரிஞ்சுருந்தும் ஏண்டா இந்த இடத்துல வீடு வாங்குனே...' என்று ஆதங்கத்துடன், கேட்டேன்.
அதற்கு அவன் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்... 'நாற்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடு, பத்து லட்சம் ரூபாய் தள்ளுபடியில் சகாய விலையில் (25 சதவீதம் தள்ளுபடி தரணும்னா, அந்த இடத்தோட தரத்தை கொஞ்சம் யோசிச்சு பார்த்துக்குங்க...) கிடைச்சது; 12 மாசமுமா மழை பெஞ்சிட்டு இருக்கப் போவுது... வருஷத்துல, ஒரு பத்து, பதினைஞ்சு நாள் தானே பெய்யுது... அந்த நேரத்துல, வீட்டை பூட்டிட்டு, வேற எங்காவது போய் தங்கி இருந்துட்டு, மழை வெள்ளம் வடிஞ்ச பின், மீண்டும் வந்து குடியிருந்துக்க வேண்டியது தான்...' என்றான்.
'அது சரி... தண்ணியில வீட்டுல இருக்குற பொருளெல்லாம் நாசமாயிடுமே... அதுக்கு என்ன பண்ணுவே...' என்று கேட்ட போது, அவனிடம் பதில் இல்லை.
கண்ணிருந்தும் குருடர் என்று கேள்விப் பட்டிருக்கிறோம்; அன்று, நேரில் கண்டேன்; அந்த மன வருத்தத்தில் விருந்துண்ணக் கூட மனம் வராமல், பரிசுப் பொருளை மட்டும் கொடுத்துவிட்டு, கனத்த மனதுடன் திரும்பினேன்.
— எம்.சோமசுந்தரம், சென்னை.