மனோரமாவுக்கு, மேடையில் பாடுவது யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. அருகில் இருந்த நண்பரிடம் கேட்டதற்கு, அவர் மகன் பூபதி தான் பாடுகிறார் என்று தெரிந்து, மகிழ்ந்தார்.
கடந்த, 1975ம் ஆண்டு, இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், இங்கு அதன் தாக்கம் அவ்வளவாக இல்லை.
இந்நிலையில், அடுத்த, ஆறாவது மாதத்தில், அதாவது, 1976, ஜனவரியில், தி.மு.க., ஆட்சி கலைக்கப்பட்டு, குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.
இச்சமயத்தில் ஒருநாள், வருமான வரித்துறை அதிகாரிகள், மனோரமாவின் வீட்டை குறி வைத்து, வேட்டையை துவங்க வந்தனர்.
மனோரமாவின் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள், 'உங்க வீட்டை சோதனையிட வந்திருக்கிறோம்; முடிகிற வரை நீங்க வீட்டை விட்டு வெளியே எங்கேயும் போகக் கூடாது...' என்று கட்டுப்பாடு விதித்தனர். அந்த வீட்டையும், வீட்டில் உள்ள அனைவரையும் அவர்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
எதற்காக இந்த திடீர் சோதனை...
எதுவும் ஆச்சிக்கு தெரியாது. ஆனால், சந்தேகமும், குழப்பமும் இருந்தது.
அன்று முழுவதும், வீட்டை அவர்கள் சோதனை நடத்தினர். இண்டு இடுக்கு விடாமல் துழாவினர். சுவரை தட்டிப் பார்த்து, உள்ளே ஏதாவது சுரங்கம் அமைத்து பணம் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று முயற்சித்தனர்.
சுமார், ஆயிரம் படங்கள் வரை நடித்திருப்பதால், கோடிக்கணக்கான பணம் சம்பாதித்திருப்பார் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். இதனால், ஏராளமான கறுப்பு பணத்தை வீட்டில் பதுக்கி வைத்திருப்பார் என்று கருதியிருக்கலாம்.
திரை உலகம் என்பது, கோடிக்கணக்கான பணம் புரளும் ஒரு மாய உலகம். இந்த உலகத்திற்குள் நுழைந்தவர்கள், பணத்தில் தான் மிதப்பர் என்பது பலரது கணிப்பு; எண்ணம்.
இதே நினைப்பில் தான் அவர்கள் அன்று மனோரமா இல்லத்திலும் சோதனையை மேற்கொண்டனர்.
மனோரமா, கோடிக்கணக்கில் சம்பாதித்தது உண்மை தான். ஆனால், அவர் சம்பாதித்தது பணத்தை அல்ல; ரசிகர்களின் மனதை.இந்த உண்மை தெரியாத காரணத்தால் தான் அதிகாரிகள் அங்கு வந்து சோதனை என்ற பெயரில் நேரத்தை வீணாக்கி விட்டனர்.
பணம் தராமல் தலைமறைவாகி விடும் தயாரிப்பாளர்கள் தமிழ் திரை உலகில் உள்ளனர். பாதி சம்பளம் மட்டும் கொடுத்து, மீதியை அடுத்த படத்தில் சேர்த்து தருவதாக கூறி, 'எஸ்கேப்' ஆகிவிடும் தயாரிப்பாளர்களும் உண்டு.
இதனால், அதிக படங்களில் அவரால் நடிக்க முடிந்ததே தவிர, அதிக அளவிலான பணத்தை வாங்க முடியாமல் போயிற்று. இதுதான் உண்மை.
தன் இறுதி காலம் வரை, அவர் நடித்த ஒரு படத்திலாவது பேசிய சம்பளம் முழுவதையும் வாங்கிட வேண்டும் என்று முயற்சித்தது உண்மை. ஆனால், அது நடக்கவே இல்லை. அவரால் முழு சம்பளத்தையும் வாங்கவே முடியவில்லை.
ஆனால், இந்த உண்மை அதிகாரிகளுக்கு எப்படி தெரியும்? அவர்களிடம் இதை சொன்னால், அதை உண்மை என்று ஏற்றுக்கொள்ள அவர்கள் மனம் இடம் தராது. ஏனென்றால், அவர்கள் அரசு அதிகாரிகள். யாரை பார்த்தாலும், அவர்கள் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகமே தோன்றும். காரணம், அப்படிப்பட்ட பயிற்சிகள் தான் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும்.
அப்படி தான் மனோரமாவையும் சந்தேகித்து சோதனையிட்டனர். எவ்வளவோ துருவி துருவி சோதனையிட்டும், ஒரு ரூபாய் கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடைசியில் சலித்து போய் விட்டனர்.
புறப்படுவதற்கு முன், அவரது மகன் பூபதியை அழைத்து, 'தம்பி... எங்களுக்காகவாவது உங்க அம்மாவிடம் சொல்லி, கொஞ்சம் கூடுதல் பணத்தை வாங்க சொல்லப்பா. ஒண்ணுமே இல்லாம ஏமாந்து போறது எங்களுக்கு அவமானமா இருக்கு...' என்றார், ஒரு அதிகாரி.
இப்படி வருமான வரித்துறை அதிகாரிகளே வெறுத்து போய் சொல்கிற அளவிற்கு தான் மனோரமாவின் பொருளாதாரம் அமைந்திருந்தது.
தேவர் பிலிம்சின் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். அதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. அந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ரொம்பவே கடுப்படித்துக் கொண்டிருந்தார். மனோரமாவை கண்டாலே சிடு சிடுவென்று சீறிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், கதாநாயகி ஒரு குதிரையிலும், மனோரமா ஒரு குதிரையிலும் வருவதை போன்று படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இதில், கதாநாயகியின் கோபத்திற்கு நெய் வார்ப்பதை போல மற்றொரு புதிய பிரச்னை முளைத்தது. மனோரமாவிற்கு நல்ல துறுதுறுவென்று இளமை துள்ளலோடு இருந்த அழகான குதிரை கொடுக்கப்பட்டிருந்தது.
அதே நேரத்தில் கதாநாயகிக்கு, கிழட்டு குதிரை கொடுக்கப்பட்டிருந்தது. அது நடப்பதற்கே ஜீவன் இல்லாததுபோல காணப்பட்டது.
இது, அவருக்கு கடுங்கோபத்தை கொடுத்தது. மனோரமாவை எரித்து விடுவதை போல பார்த்தார்.
தன் கோபத்தையும், ஆத்திரத்தையும் அடக்கிக் கொண்டு, மனோரமா குதிரை மீது வருவதை போல தனியாக, 'க்ளோசப் ஷாட்' எடுப்பதை வேண்டுமென்றே தடுத்து கொண்டிருந்தார்.
இதை புரிந்து கொண்ட இயக்குனர், அந்த, 'ஷாட்'டை எடுக்காமல் வேறு, 'ஷாட்' எடுத்து, அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டார்.
பின், மாலையில் தங்கும் விடுதிக்கு செல்கிற போது, மனோரமாவிடம், 'நாளை காலையில் கொஞ்சம் சீக்கிரமாக, 'ஹீரோயின் ஷூட்டிங்'கிற்கு வர்றதுக்கு முன்னாடியே வந்திடுங்க. இந்த, 'ஷாட்'டை அவரோட தொந்தரவு இல்லாம எடுத்திரலாம்...' என்றார் இயக்குனர்.
அதேபோல மறுநாள் காலை சீக்கிரமாகவே எழுந்து படப்பிடிப்பிற்கு வந்தார் மனோரமா. கதாநாயகி வர தாமதமாகும் என்பதால், எந்த இடையூறுமின்றி படப்பிடிப்பை நிகழ்த்திட முனைந்தார் இயக்குனர்.
அப்போது...
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில்குமார்