* எம்.தயாளன், மதுரை: என் நண்பன் ஒருவன், நன்றிகெட்ட தனமாக நடந்து கொள்கிறான் என மறைமுகமாகத் தெரிய வருகிறது. அவனுக்கு தொடர்ந்து உதவி செய்யலாமா?
நன்றி கெட்டு வருகிறான் என தெரிந்தும், உதவி செய்வீர்களானால் பாம்புக்கு பால் வார்த்த கதை தான்! நல்ல பாம்பிற்கு யாராவது பால் கொடுத்து வளர்ப்பரா... ஜாக்கிரதையாக இருங்கள்!
எம்.பாத்திமாபேகம், திருவள்ளூர்: நான் வக்கீலாக ஆசைப்படுகிறேன். 'முஸ்லிம் பெண் வக்கீலாகி என்ன செய்ய போகிறாய்?' என்கின்றனர் பெற்றோர்... என்ன செய்ய?
'முஸ்லிம் பெண்' என்பது எந்த தகுதி இழப்பையும் கொடுக்கவில்லை. ஆனால், வக்கீல் தொழிலில் ஜெயிக்க நிறைய ஆண்டுகள் ஆகும்; ஆயுளில் பாதி கரைந்து விடும்! மேலும், ஏராளமான தகுதி படைத்த வக்கீல்கள் கூட, 'கேஸ்' கிடைக்காமல் சும்மா இருக்கும் நிலையே இப்போது இருக்கிறது. அதில் ஒருவராக நீங்களும் ஆக வேண்டாமே!
சி.ராஜா, ராஜபாளையம்: புதிய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுவதில்லையே...
அப்படி சொல்ல முடியாது! பல்வேறு ரூபங்களில் எல்லா பத்திரிகைகளும் சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி என்று வெவ்வேறு போட்டிகள் அளிப்பது எதற்காக? புதிய தளிர்களை கண்டுபிடிக்க, ஊக்குவிக்கவே! தாம் எழுதியது அடுத்தடுத்து வெளியாக வேண்டும் என புதிய எழுத்தாளர்கள் எதிர்பார்க்கின்றனர். அது நடக்காத போது சோர்ந்து போய் மேற்கண்ட கேள்வியாக கேட்கின்றனர்!
எம்.தீபா, சென்னை: ஒரு குடும்பத்தை குதுாகலமாக்குவது கணவரின் வருமானமா... மனைவியின் நிர்வாகத் திறனா?
சந்தேகமில்லாமல் இரண்டாவதே! எவ்வளவு குறைந்த வருமானம் கொண்டு வந்தாலும், அதில் மிச்சம் வைக்கத் தெரிந்தவர்கள் பெண்கள் தான்! 99 சதவீத பெண்களுக்கு இது கை வந்த கலை! பெண்களின் நிர்வாகத் திறமையே குடும்பத்தில் குதுாகலம் நிலவ காரணம்!
* ஐ.ஹரி, சீர்காழி: சுய சம்பாத்தியம் இல்லாத இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வது சரியா?
சுய கவுரவம் இல்லை என்றால் திருமணம் செய்து கொள்ளலாம்! மனைவியின் சோப்பு, சீப்பு, பவுடர், பிரா மற்றும் பேன்டி தேவைகளுக்குக் கூட மாமனாரிடமோ, தகப்பனாரிடமோ கையேந்தி நிற்க கூச்சப்படவில்லை என்றால் உடனே தேதி குறிக்கலாம்!
* ஏ.சுகுமார், வந்தவாசி: 'எல்லை தாண்டிய மீனவர் கைது', - 'இலங்கை கடற்படை பிடித்துச் சென்றது...' என்றெல்லாம் செய்தி வெளியாகிறதே... ஒரு நாட்டின் கடல் எல்லை என்பது என்ன?
ஒவ்வொரு நாட்டுக்கும், அதன் கடற்கரையிலிருந்து, 12 கடல் மைல் சொந்தம்; அதற்கு பின் உள்ள கடல் பொதுவானது. இது சர்வதேச சட்டம்; எல்லா நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைமுறை. இலங்கைக்கு சொந்தமான அந்த, 12 கடல் மைலுக்குள் நம் மீனவர்கள் நுழைந்து விட்டால் கைது ஆகின்றனர். இது போலத்தான் குஜராத் மீனவர்களும், பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்!