ஒரு நிஜ அன்னபூரணி! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements
ஒரு நிஜ அன்னபூரணி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
00:00

எண்ணெய் காணாத தலையும், எப்போதோ வெள்ளையாக இருந்த வேட்டியும், கிழிசல் சட்டையும், பசியில் பஞ்சடைத்த கண்களுமாக, 50 பேர், மதுரை கீழமாசி வீதியில், டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகில் உள்ள நடைபாதையில் திரண்டிருந்தனர்.
காலை, 10:00 மணி; அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த மூன்று சக்கர சைக்கிள், சாப்பாடு கூடைகளுடன், ஒரு வயதான மூதாட்டியையும் சுமந்து வந்தது. அந்த மூதாட்டியின் பெயர், காந்திமதி!

சாதம், சாம்பார், வெண்டைக்காய் கூட்டு, காராபூந்தி மற்றும் மோர் என, அவற்றிற்குரிய பாத்திரங்கள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டதும், 'எல்லாரும் வரிசையாக உட்காருங்க...' என்கிறார் காந்திமதி. அந்த வார்த்தைக்காவே காத்திருந்தது போல, சிதிலமடைந்த அந்த பிளாட்பாரத்தில் இடம் பிடித்து, இரண்டு வரிசையில் உட்காருகின்றனர். தழை வாழை இலை போடப்பட்டு, அதில் சாப்பாடு பரிமாறப்படுகிறது. 'சாப்பிடுறதுக்கு முன், எல்லாரும் நம் வள்ளலார் சாமிய கும்பிட்டுக்குங்க...' என்கிறார், காந்திமதி. கும்பிட்டு முடித்ததும், சாப்பிட ஆரம்பிக்கின்றனர்.
சாதம், சாம்பார், கூட்டு எல்லாம் வரிசை கட்டி செல்கிறது. அவர்களில் பலருக்கு, இந்த ஒரு வேளைதான் உணவு போலும், இலை நிறைய சாப்பாட்டை வாங்கி, அதில் குளம் கட்டி சாம்பாரை ஊற்றச் சொல்லி, ஒரு பருக்கை விடாமல் சாப்பிடுகின்றனர். அதை ரசித்துப் பார்க்கும் காந்திமதி, கொஞ்சமும் அலுத்துக் கொள்ளாமல், அவர்கள் போதும் என்கிற வரை சாப்பாடு போடுகிறார். வயிறார சாப்பிட்டு, நன்றியை கைகளாலும், கண்களாலும் காட்டி செல்கின்றனர்.
மதுரை செல்லுாரில், எளிய குடும்பத்தில் பிறந்தவர், காந்திமதி; இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், திருப்பாச்சேத்தி கிராமத்திற்கு திருமணமாகி சென்றவருக்கு, கணவரால் கொடுக்க முடிந்தது, நான்கு குழந்தைகளை மட்டுமே!
அதனால், குடும்பத்துடன் மதுரைக்கு இடம் பெயர்ந்தவர், வீட்டு வேலை உள்ளிட்ட எந்த வேலை கிடைத்தாலும் செய்து, பிள்ளைகளை வளர்த்தார்; தன் சக்திக்கு ஏற்ப அனைவருக்கும் திருமணம் முடித்து, வாழ வழிகாட்டி விட்டார்.
வயதான காலத்தில், வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க இயக்கம் இவருக்கு ஆறுதல் தர, அடிக்கடி அங்கே செல்ல ஆரம்பித்தார். அங்கு அறிமுகமானவர் தான் அன்பானந்தம்; அன்றாடம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தர்மசாலை வைத்து, நன்கொடையாளர்கள் கொடுக்கும் அரிசி, பருப்பை வாங்கி வந்து சமைத்து, பலருக்கும் சாப்பாடு போட்டுக் கொண்டு இருந்தார். இவரிடம் சம்பளம் வாங்காத சமையல் தொழிலாளியாக, அந்தப் பணியில் தன்னை இணைத்துக் கொண்டார், காந்திமதி. அப்போது தான், பசிப்பிணி தீர்க்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
நான்கு ஆண்டுக்கு முன், அன்பானந்தம் இறந்துவிட, அவர் ஆரம்பித்த அன்னதான இயக்கத்தை யார் எடுத்து நடத்துவது என்ற கேள்வி வந்தபோது, 'வள்ளலார் வழி காட்டுவார்...' என்ற நம்பிக்கையுடன், தானே நடத்துவது என முடிவு செய்தார், காந்திமதி. தன் வழிகாட்டி அன்பானந்தம் போலவே, அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு, காய்கறி ஆகியவற்றை தானமாக கேட்டுச் செல்வார்; முதல் நாள் மாலை என்ன கிடைக்கிறதோ அதை வைத்து, மறுநாள் சமைத்து போட ஆரம்பித்தார்.
ஊனமுற்றோர், உழைத்து பிழைக்க முடியாதோர், மன நோயாளிகள், பிச்சை கிடைக்காதோர் போன்றவர்கள் வயிறார ஒருவேளை சாப்பாடு சாப்பிடட்டும் என்றுதான் ஆரம்பித்தார். ஆனால், இவரது சாப்பாட்டின் ருசி, இந்த பகுதியில் உள்ள மூட்டை துாக்கும் தொழிலாளர்களையும் ஈர்க்க, 20 பேர், 30 பேர் என்று கூடிக்கொண்டே போய் இன்று தினமும், 70 பேர் வரை சாப்பிடுகின்றனர்.
அதிகாலை எழுந்து, முதல் நாள் கிடைத்த அரிசி, பருப்பு, காய்கறி போன்றவைகளை வைத்து, சாப்பாடு தயார் செய்து, பசிப் பிணியாற்றுகிறார். இவரின் சேவையை அறிந்து, சிலர் கேட்காமலே, அரிசி, பருப்பு என கொடுத்து வருகின்றனர்.
மேலும், தங்கள் பிறந்த நாள், திருமண நாளன்று, அன்றைய அன்னதான செலவை ஏற்றுக்கொள்கின்றனர். இப்படிப்பட்ட நாட்களில், அப்பளம், வடை மற்றும் பாயசம் என்றெல்லாம் அன்னதானத்தில் துாள் பறக்கும். சிலநாள் எதுவும் கிடைக்காத போது, அரிசி, காய்கறிகளை கலந்து, கலவை சாதமாக போட்டு விடுவார். எப்படியும் தன்னை நம்பி வந்தவர்களை பட்டினி போட மாட்டார்.
இதைப் பற்றி கூறும் போது, 'அந்த அருட்பெருஞ்ஜோதி, என்னை இந்த வேலையில் இறக்கி விட்டுட்டாரு... எனக்கு, 70 வயசாகப் போகுது; வயசுக்கு ஏத்த மாதிரி கால் வலியில இருந்து தோள் வலி வரை எல்லா பிரச்னையும் இருக்குது. ஆனால், 'சாப்பிட மக்கள் வந்துருவாங்களே...' என்ற நினைப்பு, எல்லா வலிகளையும் மறக்கடித்து, என்னை அதிகாலையில் எழுப்பி விட்டுரும். எனக்கு பின் யாரு இதை செய்யறதுன்னு வள்ளலார் சாமி தீர்மானிச்சு வச்சிருப்பாரு. என் காலத்துக்கு பின் அவர் இப்பணியை ஏற்று நடத்துவார்...' என்கிறார்.
காந்திமதியிடம் பேசுவதற்கான மொபைல் எண்: 94420 24423.

எம்.கலைச்செல்வி

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X