ஆனந்த போதினி, பிப்., 13, 1928 இதழில் காணப்படும் தலையங்கம்: நாடகத் துறை, அடைந்திருக்கும் சீர்கேட்டை அளவிட முடியாது. சங்கீதத்திலும், நடிப்பிலும் தேர்ச்சியில்லாத சில சிறுவர்களும், மற்றோரும் எங்கும் நாடகக்காரர்களாக, நடிகர்களாக வெளிப்பட்டிருக்கின்றனர்; நாடகாசிரியர் ஆகியிருக்கின்றனர். கல்வி அறிவு இல்லாத இவர்களால், புண்ணிய சரித்திரங்களெல்லாம் சின்னா பின்னமாகி, ஆபாசமான சரித்திரங்களே அரங்கேறுகின்றன. எதுகை, மோனை, தளை முதலிய இலக்கண அமைதியும், பொருட் பொருத்தமும் இல்லாத பாடல்களே மிகுதியாக பாடப்படுகின்றன. இடத்திற்கு பொருந்தாத வர்ண மெட்டுகளில் அமைக்கப்படுகின்றன.
உயர்ந்த ராஜபார்ட்காரரால், நரிக்குறவர் பாடும் ஒருவகை வர்ண மெட்டு பாட்டுகள் பாடப்படுகின்றன. ஆண்களும் - பெண்களும் எதிர் எதிரே நின்று, காதால் கேட்கத் தகாத காதல் மொழிகளை வெளிப்படையாக பேசி, கண்ணால் பார்க்கத் தகாத விதத்தில் இடுப்பை வளைத்து, இருவருடைய முன் பாகமும் ஒன்று சேரும்படி முன்னே நீட்டியும், பின்னே இழுத்தும் அநாகரிக ஆட்டத்தை ஆடுகின்றனர்.
எம்.ஜி.ஆர்., ஒரு வார இதழில், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், எம்.ஜி.ஆர்., அதில்:
தங்களுக்கு, ஆரம்பத்தில் புகழ் தேடி தந்த படம் எது?
மாயா மச்சீந்திரா.
முயற்சி இல்லாமல் கிடைப்பது எது?
மரணம்.
அதிர்ஷ்டம் உங்களுக்கு இல்லை; உண்மையா?
உண்மை தான்; அதிர்ஷ்டம்
இருந்திருந்தால், நான் இவ்வளவு உழைக்க வேண்டியதில்லையே!
உங்களிடம் உள்ள நல்ல குணம் என்ன... கெட்ட குணம் என்ன?
தெரியாது.
சுவையான செய்திகள்' நுாலிலிருந்து: பிரமுகர் ஒருவர், வருமான வரி அலுவலகத்துக்கு சென்று, அதிகாரிகளை பார்த்தார். 'எங்களால் ஆக வேண்டிய காரியம் உங்களுக்கு ஏதாவது உண்டா?' என்று கேட்டார், அங்கிருந்த ஒரு அதிகாரி.
'இல்லை... வெகு நாட்களாகவே எனக்கு ஓர் ஆசை; நான் யாருக்காக சம்பாதிக்கிறேனோ, அவர்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்று. பார்த்து விட்டேன்; வரட்டுமா?' என்று கூறி புறப்பட்டார் பிரமுகர்.
'புதுக்கோட்டை வரலாறு' நுாலிலிருந்து: சிவகங்கை தாலுகா, காளிப்பூர் கிராமத்தில் உள்ள காட்டில் ஒளிந்திருந்த கட்டபொம்மு, அவரது சகோதரர் ஊமைத்துரை, மைத்துனர் இருவர் மற்றும் மூன்று பேர் ஆக, ஏழு பேரையும் புதுக்கோட்டை அரசர் கண்டுபிடித்தார். கேப்டன் ஸ்மித்தின் ஆணைப்படி அவர்கள் மதுரைக்கு பலத்த காவலுடன் அனுப்பப்பட்டனர்.
பின், கட்ட பொம்மு, கயத்தாறு கிராமத்தில் பாளையத்தார் முன்னிலையில் துாக்கிலிடப்பட்டார். கட்டபொம்மனை பிடித்து கொடுத்ததற்காக, ஆங்கில கம்பெனியார் புதுக்கோட்டை அரசரின் ராஜ விசுவாசத்தை பாராட்டி, கம்பெனி சார்பில், கவர்னர் ஜெனரல் லார்டு கிளைவ் ஒரு கவுரவ பொன்னாடை, ஒரு குதிரை, இரண்டாயிரம் தங்க நாணயங்களை வழங்கினார்.
'அறிய வேண்டிய ஆயிரம் செய்திகள்' நுாலிலிருந்து: இறந்துபோன தன் மனைவி மும்தாஜ் நினைவாக ஷாஜகான் தாஜ்மகாலை கட்டினான் என்பது தெரியும்.
மும்தாஜ், தன், 14வது பிரசவத்தின் போது தான் இறந்து போனாள் என்ற விஷயம் பலருக்கு தெரியாது.
சீக்கியர்கள் மற்றும் யூதர்கள், வேற்று மதத்தினர் யாரும் தங்கள் மதத்திற்கு மாறி வருவதை விரும்புவதில்லை; அனுமதிப்பதும் இல்லை.
நடுத்தெரு நாராயணன்