அன்பு சகோதரி —
நான், 45 வயது பெண்; கணவர் வயது, 50. கல்லுாரியில் படிக்கும், இரண்டு மகள் மற்றும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் ஒரு மகன் உள்ளனர்.
பனிரெண்டாம் வகுப்பு முடித்தவுடனே, எனக்கு திருமணம் செய்து விட்டனர். படிப்பில் அதிக ஆர்வம் இருந்தாலும், குடும்ப கடமைகளால், மேற்படிப்பு படிக்க இயலவில்லை.
தற்போது, ஓரளவுக்கு கடமைகள் நிறைவேறி விட்டதால், படிக்கும் ஆர்வம் மேலோங்கி வருகிறது.
பெண்களுக்கு திருமணம் செய்வதற்கு, இன்னும் சில காலம் உள்ளது; அதற்குள் ஒரு டிகிரியாவது படித்து விட மாட்டோமா என்று ஏங்குகிறேன்.
'மருமகன் வரும் வயதில் படிப்பு என்ன வேண்டி கிடக்கிறது...' என்கிறார் கணவர். உறவினர்களோ, 'இந்த வயதில் எதற்கு இந்த ஆசையெல்லாம்...' என்று ஆர்வத்துக்கு தடை விதிக்கின்றனர்.
மகள்கள் படிக்கும் போது, அருகில் அமர்ந்து, அவர்கள் படிப்பதையே பார்த்துக் கொண்டிருப்பேன். என் ஆர்வத்தை புரிந்து, அவர்கள் என்னை மேற்கொண்டு படிக்க துாண்டுகின்றனர்.
ஆனால், கணவரும், மாமியாரும் தடைக்கல்லாக நிற்கின்றனர். படிக்கும் ஆவலை எப்படி பூர்த்தி செய்து கொள்வது என்று தெரியாமல், அலைபாய்ந்து கொண்டிருக்கிறேன்.
தக்க ஆலோசனை தாருங்கள், சகோதரி!
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரி —
ஆணின் கல்வி - கற்ற ஆணுக்கு மட்டுமே பயன்படும். பெண்ணின் கல்வி - அவளின் அடுத்த, 10 தலைமுறைக்கும் அறிவூட்டக் கூடியது. பெண்கள் சொந்த காலில் நிற்க, கல்வி மட்டும் உதவுவதில்லை, சிறந்த குடும்பத் தலைவியாக திகழவும் உதவுகிறது.
கல்வி கற்ற பெண்கள், குடும்ப நிர்வாகத்திலும், குழந்தை வளர்ப்பிலும் பிரமாதமாக செயல்படுகின்றனர். கல்வி என்னும் ஆயுதம் கொண்டு தான், பெண்களால், ஆணாதிக்கத்தை கத்தியின்றி ரத்தமின்றி வேரறுக்க முடியும். கல்வி, பெண்களின் மூன்றாவது கண், ஏழாவது அறிவு, வாழ்நாள் முழுக்க உதவும், ஏ.டி.எம்., மாஸ்டர் கார்டு.
இரண்டு மகள்கள், ஒரு மகன் ஆதரவோடு, கணவன் - மாமியார் எதிர்ப்பை தவிடு பொடியாக்கு. கணவன் - மாமியாரிடம் இதம் பதமாய் பேசி, சம்மதம் பெறு. அவர்கள் சம்மதிக்காவிட்டால் பரவாயில்லை, நீயே தரமான ஒரு பல்கலையின் தொலைதுார கல்வி இயக்ககத்தை அணுகி, இளங்கலை பட்டப் படிப்பில் சேர்ந்து, செமினார் வகுப்புகளுக்கு போ. செமினாருக்கு வரும் கலவையான மாணவ - மாணவியரிடம் கலந்துரையாடு. செமினார் எடுக்கும் ஆசிரியரிடம் சந்தேகம் கேள். 'அசைன்மென்டு'கள் எழுத சொன்னால், அழகாக எழுது. எவ்வித கல்வி அனுபவங்களும் பெறாமல், பட்டம் பெறுவது பாவம். அனுபவித்து படி. ஒரு விவசாயி, நெல் மகசூல் பண்ண, என்னென்ன பணிகளில் ஈடுபடுவானோ, அதைப்போல, ஒரு பட்டத்தை பெற, அதற்கான பணிகளில் ஈடுபடு. இளங்கலை பட்டப் படிப்போடு நின்று விடாமல், தொடர்ந்து படித்து, பல பட்டங்களை பெறு.
கல்வி கட்டணத்துக்காக, கணவனிடம் கையேந்தாதே. சேர்த்து வைத்த சிறுவாடு பணத்தில் அல்லது மகள் - மகன் பாக்கெட் மணியில் அல்லது நீ போட்டிருக்கும் நகையை விற்று படி. கணவன் - மாமியாரை எதிர்த்து படிக்கிறோம் என்கிற கர்வத்தில், அவர்களை பகைமை பாராட்டாதே. நீ குட்டிக்கரணம் போட்டு படிப்பதை, உன் கணவன் ஒரு கட்டத்தில் ரசிக்க ஆரம்பித்து விடுவான்.
அகராதி வைத்து, தெரியாத வார்தைகளுக்கு அர்த்தம் தேடு. தேர்வுகளை குருட்டு மனப்பாடமாக எழுதாமல், உன் சொந்த புரிதலில் எழுது. தினம், தமிழ் தினசரி வாசி. 'டிவி' சீரியல்களை பார்க்காமல், தமிழ் - ஆங்கில செய்திகளை கேள். மகள் - மகன்களின் பாடப் புத்தகங்களை புரிந்த அளவுக்கு வாசித்து பார்.
நீ மட்டும் படிக்காது, இல்லத்தரசிகளாக இருக்கும், உன் தோழிகளையும் படிக்க சொல். 'இல்லத்தரசிகள் நாம் அனைவரும், வெண் தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் கடாட்சத்தை பெறுவோம்...' என்று சொல்.
— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.