பூக்கும் நீரூற்று!
மணலை அள்ளி ஆற்றை
மலடாக்கி விட்டோம்...
மலடான ஆறுகளில்
பூப்பதில்லை
மருந்துக்குக் கூட
சிறு புல் பூண்டுகள்!
இப்போது கிணறள்ளி
நீர் உறிஞ்சும்
கீழ்நிலையை
செய்து வருகிறோம்!
கிணறுகளும் ஒருநாள்
கிழட்டுத்தன்மை
அடையக்கூடும்!
அப்போது, குடிநீருக்காய்
அறுத்துக்கொள்வோமா
அவரவர் குரல்வளையை
நிலம் சுரண்டி, காடு திருடி
காணாது தொலைத்து விட்டோம்
பல கானாறுகளையும்
நிலத்தடி நீரையும்!
இனி... கடலள்ளி
மேகம் கருணை காட்டும்
நீரையாவது
கவனித்து சேமிப்போம்!
குளிரும் பூமி
வேரொடி பூக்கும்
ஆயிரமாயிரம் நீரூற்றுகளை!
அந்த நீரூற்றில்
முகம் நனைத்து
விளையாடும்
நம் அடுத்தடுத்த
சந்ததிகள்!
— இ.எஸ்.லலிதாமதி, சென்னை.