பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுக்கான பாடங்களை படித்துக் கொண்டிருந்தாள் அனுராதா.
கைபேசி சிணுங்கியது. திரையில் தோழி கிரிஜாவின் புகைப்படம் தெரிந்தது. எடுத்தாள், ''ஹலோ...''
''அனு... உனக்கு விஷயம் தெரியுமா?''
''பீடிகை போடாம விஷயத்தை சொல்லு கிரி!''
''அவளோட சம்மதத்தோட தான் அது நடக்குதோ!''
''எவ சம்மதத்தோட எது நடக்குது!''
''மக்கள் இன்னும் கற்காலத்திலேயே வாழ்றாங்க பாரு!''
''உதை வாங்க போற... விஷயத்தை போட்டு உடைக்கப்போறியா, இல்ல போனை, 'கட்' பண்ணவா...சொல்ல வந்ததை தெளிவா சொல்லு...'' என்றாள் அனுராதா.
''நம்ம தோழி விந்தியாவுக்கு கல்யாணமாம், ரகசியமா செய்றாங்க... பொண்ணு வீட்டுக்காரங்க, 25 பேர், மாப்பிள்ளை வீட்டுக்காரங்க, 25 பேர் மட்டும் கல்யாணத்துல கலந்துக்கப் போறாங்களாம்... கல்யாணம், மண்டபத்துல இல்ல, வீட்ல.''
''கல்யாணம் பண்ணிக்க விந்தியா சம்மதம் சொன்னாளாமா?''
''அது தெரியல!''
''மாப்பிள்ளை என்ன வேலை பாக்கறான்... அவனுக்கு என்ன வயசிருக்கும்?''
''மாப்பிள்ளை, வாழைக்காய் மண்டில கணக்கு பிள்ளையா இருக்கிறானாம். வயது, 30 இருக்குமாம்.''
''இதெல்லாம் உனக்கு யார் சொன்னா?''
''தெருக்காரங்க தான் சொன்னாங்க.''
''இப்ப என்னடி பண்றது?''
''தெரியலையே.''
சற்றே யோசித்த அனுராதா நிலாவினாள், ''சரி, நீ போனை, 'கட்' பண்ணு. நான் ஆக வேண்டியதை பார்க்கிறேன்.''
கைபேசியில், '1098' என்ற எண்ணை அமுக்கினாள். ஏழெட்டு முறை, 'பிஸி டோன்' கேட்டது. பின், எதிர்முனை உயிர்த்தது.
''ஹலோ... நான் தென்காசியிலிருந்து அனுராதா பேசுறேன். பிளஸ் 2 மாணவி. என்னுடன் படிக்கும் விந்தியா என்கிற மைனர் மாணவிக்கு, நாளை திருமணம் நடக்கப் போகிறது.''
''விந்தியாவுக்கு என்ன வயதிருக்கும்?''
''பதினேழு வயசு.''
''விந்தியாவின் பெற்றோர் பெயர், திருமணம் நடக்கவிருக்கும் முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்.''
''விந்தியாவின் அம்மா பெயர் லட்சுமி, அப்பா பெயர் தமிழ்வாசகம். திருமணம், கதவு எண்:19, சுண்ணாம்புக்கார தெருவில் நடக்க இருக்கிறது.''
''தகவலுக்கு நன்றி... இந்த குழந்தை திருமணத்தை தடுக்க தேவையான முயற்சிகளை செய்கிறோம்.''
தன் வகுப்பு தோழியர் அனைவரிடமும் பேசி, இத்தகவலை கூறினாள் அனுராதா...''நம்ம விந்தியாவுக்கு நாளைக்கு திருமணம்; அதை தடுக்க சட்டப்படி ஏற்பாடுகள் செய்து விட்டேன். இருந்தாலும், நம் பங்கிற்கு நாளை நாம் அனைவரும் திருமண வீட்டு முன் கூடி, காவல் துறை வருவதற்குள், திருமணம் நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.''
அனைவரும் கோரஸாய், ''வருகிறோம் அனு... இளைய தலைமுறை பெண்களின் விஸ்வரூபத்தை சமூகத்திற்கு காட்டுவோம்,'' என்று சூளுரைத்தனர்.
சுண்ணாம்புக்கார தெரு, ஓட்டு வீட்டின் முன் சாமியானா போட்டிருந்தனர். வரிசைக்கு பத்தாய், 20 மடக்கு சேர்கள் விரித்து வைக்கப்பட்டிருந்தன.
மணப்பெண் விந்தியாவுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருந்தது. விந்தியாவின் தாய் பரபரப்பாய் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். பழைய சாமான்கள் குவிந்திருக்கும் அறையில் குடிபோதையில் நெளிந்து கொண்டிருந்தான் விந்தியாவின் தந்தை தமிழ்வாசகம்.
பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்த மாப்பிள்ளை, வீட்டு தாழ்வாரத்தில் புனுகு பூனை போல் உலவி கொண்டிருந்தான். வீட்டுக்குள் அனுராதாவும், அனுராதாவின் இருபதுக்கும் மேற்பட்ட தோழியரும் புயல் போல் பிரவேசித்தனர்.
''விந்தியா... இதென்னடி கூத்து? பிளஸ் தேர்வு எழுதி, நீட் தேர்வுல நல்ல மார்க் வாங்கி டாக்டர் சீட் பெறணும்ன்ற உன் கனவை துாக்கி கடாசிட்டியா?''
''எல்லாம் என் அம்மாவோட வற்புறுத்தலால் தான்... நான் என்ன பண்ண?''
''எங்க உயிரே போனாலும் சரி, நாங்க இந்த கல்யாணத்த நடத்த விடமாட்டோம்.''
மாப்பிள்ளையின் நண்பர்கள் ஓடி வந்தனர். ''யாராவது இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த நினைச்சீங்கன்னா, இங்க வெட்டு, குத்து நடக்கும்; பொட்டச்சிகள் திரும்பி பார்க்காம ஓடிப்போயிருங்க.'' என்றனர்.
வீட்டு வாசலில், இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்கள் தரை தேய்த்து நின்றன. வாகனங்களிலிருந்து சமூக நலத்துறை அதிகாரிகளும், கிராம நிர்வாக அதிகாரியும், காவல் துறை ஆய்வாளர் சரஸ்வதியும் இறங்கினர்.
ஒரு கிழவியிடம், ஆய்வாளர் சரஸ்வதி, ''இங்க மைனர் பொண்ணுக்கா கல்யாணம் பண்ணி வைக்கறீங்க?''
''இல்லீங்கம்மா... யாரோ உங்ககிட்ட தப்பா தகவல் சொல்லியிருக்காங்க... நாலாவது வீட்டு பொண்ணுக்கு வளைகாப்பு நடத்தப்போறோம்.''
''பொய்... பொய்... பொய்...'' அலறியபடி ஓடி வந்தாள் அனுராதா.
''நான்தான், ஹெல்ப் லைனுக்கு போன் பண்ணினேன்... மைனர் பொண்ணு கல்யாணத்துல, சம்பந்தப்பட்டவங்க எல்லாரையும் கைது பண்ணுங்க!''
விந்தியாவின் தாய் லட்சுமி, காவல் துறை ஆய்வாளர் சரஸ்வதியின் கைகளை பற்றிக் கொண்டாள்.
''உங்ககிட்ட தனியா பேசணும்.''
''லஞ்சம் குடுக்க கூப்பிடுறா... போகாதீங்க!''
சரஸ்வதியும், லட்சுமியும் தனியே ஒதுங்கினர். ''என்னம்மா சொல்லப் போற?''
''எனக்கும், என் மக விந்தியா டாக்டருக்கு படிக்கணும்; படிச்சு முடிச்சிட்டு எங்களை போன்ற ஏழைகளுக்கு சேவை செய்யணும்ன்னு ஆசை இருந்துச்சு. ஆனா, வீட்டு நிலைமை சரியில்லைம்மா.''
''என்ன சரியில்லை லட்சுமி?''
''என் புருஷன் தமிழ்வாசகம், கால்நடை உதவியாளராக வேலை பார்க்கிறார். பத்து ஆண்டுக்கு முன் குடிக்க ஆரம்பிச்சவர், இன்னைக்கு பெரும் குடிகாரர் ஆகிட்டார். குடிக்காதப்ப புத்தரா இருக்கிறவர், குடித்த பின் சாத்தான் ஆகி விடுவார். குடித்த பின், அவர் எங்களை பேசுற பேச்சிருக்கே அது ஆண்டவனுக்கே பொறுக்காது.''
''உன் புருஷன் மாதிரி லட்சக்கணக்கான குடிகாரர்கள் தமிழ்நாடு முழுக்க உள்ளனர்.''
''கடந்த ஆறு மாசத்துக்கு முன், ஒருநாள் என் புருஷன் குடிச்சிட்டு வீட்டுக்கு வந்தார். நானும், என் மகளும் படுத்திருந்தோம். என் மகளின் ஆடை விலகி இருந்திருக்கு. தொட்டு பார்த்திருக்காரு என் புருஷன். திடீர்ன்னு விழிப்பு வந்து, என் மக அலறியடைச்சு எந்திரிச்சுட்டா. என்னய்யா இது மிருகம் மாதிரி நடந்துக்கிறேன்னு கத்தினேன். 'நீயுன்னு நினைச்சு தொட்டுட்டேன்; பெருசு பண்ணாம விடு'ன்னார். நம்பினேன்.''
''அப்புறம்?''
''தொடர்ந்து என் மககிட்ட தப்பா நடக்க ஆரம்பிச்சிட்டார் என் புருஷன். தகப்பன் மீதிருந்த பாசம் போய், புலி, சிங்கத்தை பார்க்கிற மாதிரி பார்த்து நடுங்க ஆரம்பிச்சிட்டா என் மக. என் கணவரின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் எல்லை மீற ஆரம்பிச்சிருச்சு. கேட்டா, தைரியமா, 'நீ கிழவி ஆயிட்ட. உன் மக, புதுசா இளசா இருக்கா. பெத்தவன் ஆசையை உன் மக நிறைவேத்தட்டும்'ன்னு பேசினார். காறி துப்பினேன். 'இனிமே என் மக மேல கை பட்டுச்சுன்னா, உன்னை கொலை செய்ய தயங்க மாட்டேன்'னு குரலை உயர்த்தினேன். ஒருநாள் இல்லாட்டி ஒருநாள் பெத்த மகளையே என் புருஷன் சீரழிச்சிட்டார்ன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சேன்.''
''போலீஸ்ல புகார் பண்ண வேண்டியது தானே?''
''போலீஸ்ல புகார் பண்ணி, நானும், என் மகளும் மத்தவங்க முன் அசிங்கப்பட விரும்பல. குடிகார புருஷன்கிட்டயிருந்து மகளை தப்பிக்க வைக்கவே இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.''
''நானும், உன் பக்கம் இருக்கிற நியாயத்தை பார்த்து, 'உன் மக மைனர் இல்ல மேஜர்'ன்னு சொல்லி, உன் மக திருமணத்துக்கு அட்சதை துாவிட்டு போகலாம். ஆனா, அது உன் மகளுக்கான நிரந்தர தீர்வாகாது. பேயிடமிருந்து தப்பித்து பிசாசிடம் தஞ்சம் புகுவது போலிருக்கிறது நீ நடத்தும் திருமணம். உன் மகளுக்கும், மாப்பிள்ளைக்கும், 13 வயது வித்தியாசம். மாப்பிள்ளை பார்க்க, ரவுடி போல இருக்கிறான். நான் ஒரு உபாயம் சொல்கிறேன் கேள்.''
''சொல்லுங்கம்மா.''
''இந்த கல்யாணம், உடனடியாக தடுத்து நிறுத்தப்படுகிறது. உன் மகள், பெண்கள் விடுதியில் தங்கி, பிளஸ் 2 தேர்வும், நீட் தேர்வும் எழுத, நான் உதவி செய்கிறேன். உன் மகள் மருத்துவ படிப்பில் சேர்ந்தால், அவளது மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் என் தோழியர் நடத்தும், கல்வி அறக்கட்டளை ஏற்றுக்கொள்ளும். மருத்துவம் படித்து, பணிக்கு போன பின், உன் மகளுக்கு தகுந்த வரன் பார்த்து கட்டி வைக்கலாம்... என்ன சொல்ற?''
''இதெல்லாம் நடக்குமாம்மா?''
''என் வாக்குறுதிகளை நீ நிச்சயமாக நம்பலாம்... விந்தியா, உன் மணப்பெண் அலங்காரத்தை களைந்து, பள்ளிக்கு போ. இன்று மாலை நான் உன்னை மகளிர் விடுதியில் சேர்க்கிறேன்.''
''ஏதாவது அற்புதம் செய்து, கடவுள் இந்த கல்யாணத்தை நிறுத்த மாட்டாரா என, ஏங்கினேன். கடவுள் உங்களை அனுப்பி இருக்கிறார் இன்ஸ்பெக்டர் மேடம். உங்களின் இந்த உதவியை நான் ஆயுளுக்கும் மறக்க மாட்டேன்,'' என்றாள் விந்தியா.
குடிபோதையில் கிடந்த தமிழ்வாசகத்தை, இடுப்புக்கு கீழே பூட்ஸ் காலால் உதைத்தாள் சரஸ்வதி. ''குடிச்சா தாரத்துக்கும், மகளுக்கும் வித்தியாசம் தெரியாம போகும்னா அந்த குடி எதுக்குடா? கேஸ் போடாம உன்னை நாலு நாள் லாக்கப்ல வச்சு நசுக்கி எடுத்திடுறேன்.''
கூடியிருந்த கூட்டத்தை பார்த்து, ''குழந்தை திருமணங்களுக்கு, ஆயிரம் நியாயங்களை நீங்களும் கூறலாம். ஆனால், குற்றம் குற்றமே,'' விரல் சொடுக்கி ஆணித்தரமாக அறிவித்தாள்.
''கேவலம் சொத்துக்காக, என், 15 வயது மகளை, 50 வயது கிழவனுக்கு கட்டி குடுக்க இருந்தேன். என் அறிவுக் கண்ணை இந்த இன்ஸ்பெக்டர் பெண் திறந்து வெச்சுட்டார். இன்ஷா அல்லாஹ். அந்த கல்யாணத்தை நிறுத்திட்டு, என் மகளை தொடர்ந்து படிக்க வைக்கப் போறேன்,'' என முணுமுணுத்தார் கூட்டத்தில் இருந்த இஸ்லாமிய ஆண் ஒருவர்.
நிலாமகன்