இங்கிலாந்து நாட்டின் திரைப்பட இயக்குனர், பெய்சர் ஸ்கோட் என்பவர், ஆட்டோ டிரைவரான சித்ரலேகா பற்றி ஆங்கில படம் ஒன்றை எடுத்துள்ளார். கேரளாவில் கண்ணுார் மாவட்டத்தில், பையன்னுாரில், ஆட்டோ ஓட்டுகிறார் சித்ரலேகா. இவர், தலித் என்பதால், உயர் ஜாதியினரான, நாயர் சமூகத்தினர், இவருக்கு இடைஞ்சல் செய்தனர். 'எங்கள் மத்தியில், சி.ஐ.டி.யு., தொழிற்சங்க உறுப்பினர் அல்லாதவர் ஆட்டோ ஓட்ட முடியாது...' என்றனர்.
சித்ரலேகா, சி.ஐ.டி.யு., உறுப்பினர் ஆனார். அப்போதும் அனுமதி இல்லை. காரணம், தலித் ஒருவர், எங்களுக்கு சமமாக வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்தனர். ஆனால், அவர் விடவில்லை. கடந்த, 14 ஆண்டுகளாக போராடி வருகிறார்.
இந்த தகவலை வலைதளத்தில் பார்த்த, பெய்சர் ஸ்கோட், சித்ரலேகாவின் போராட்ட வாழ்க்கையை படமாக்க முன் வந்தார். பூலான்தேவி பற்றி, பண்டிட் குயின் என்ற படம் எடுத்த சேகர் கபூர், இவருக்கு உதவியாக இருக்கிறார்.
காங்கிரஸ் அரசு, சித்ரலேகாவுக்கு, 5 சென்ட் நிலம் அளித்தது. அதையும் திரும்ப பெற முயன்றது கம்யூனிஸ்ட் அரசு. ஆனால், நீதிமன்றம் உதவியதால், வீடு கட்டும் பணி ஆரம்பமானது. அதற்கும் இடைஞ்சல் செய்தனர் கம்யூ., தோழர்கள்.
படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம் என்று மார்தட்டும் கேரள மாநிலத்தில் தான் இந்த அவலம்!
— ஜோல்னாபையன்.