தமிழக முதல்வர் பழனிசாமிக்கு,
மக்களுக்கு ஆபத்து வராம காக்க வேண்டியது அரசோட கடமை; இதை சரியான முறையில செஞ்சாத் தான் ஆள்பவனுக்கு பேரு அரசன்; அப்படித்தானே?
சின்னக்குப்பத்து மீனவக் குடும்பம்யா நாங்க. மீன்பிடி தடைக்காலம் முடிஞ்சு ஜூன் 15ம் தேதி கடலுக்குப் போனாரு என் கணவர். குடும்ப வறுமையினால நானும் வேலைக்கு போயிருந்தேன். மாநகராட்சி பள்ளியில நாலாம் வகுப்பு படிச்சிட்டு இருந்த என் ரெண்டாவது பையன், அன்னைக்கு ஸ்கூல் விட்டு வந்ததும், பக்கத்துல இருக்குற இ.பி., பங்களா பக்கம் விளையாடப் போயிருக்கான். ரொம்ப காலமா பயன்பாட்டுல இல்லாத அந்த இடத்துல விளையாடப் போன எம்புள்ளை வீடு திரும்பலை.
பங்களா பக்கத்துல, எண்ணுார் அனல் மின் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோண்டி வைச்சிருந்த பள்ளத்துல அவன் சிக்கியிருக்கான். கடல் ஊற்றும் மழைத் தண்ணியும் சேர்ந்து குளம் மாதிரி இருந்த 30 அடி பள்ளத்துல, எம்புள்ளை மூச்சடைச்சு செத்துட்டான். பள்ளத்துக்கு சுற்றுச் சுவரோ, கம்பி வேலியோ இல்லாதது தான் இந்த விபரீதத்துக்கு காரணம்.
பையனோட சடலத்தைப் பார்த்து கொதிச்சுப் போன எங்க மீனவ மக்கள், உடனடியா அந்த பள்ளத்தை மூடணும்; இறந்த பையனோட குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்கணும்னு போராட்டம் பண்ணினாங்க. பத்து நாள் கழிச்சு, எண்ணுார் அனல்மின் நிலைய முதன்மை பொறியாளரை சந்திச்சு மனு கொடுத்தேன்.
சம்பவம் நடந்து ஒரு மாசம் ஆயிடுச்சு. இப்பதான் அங்கே எச்சரிக்கை பலகையே வைச்சிருக்காங்க. முதல் தகவல் அறிக்கையும், வாரிசு சான்றிதழும் இன்னும் கைக்கு வந்தபாடில்லை. ரொம்ப சிறப்பா இருக்குதுங்கய்யா உங்க ஆட்சி!
- எண்ணுார் அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் பலியான, 8 வயது சிறுவன் கவினேஷின் தாய் ரேவதி, கத்திவாக்கம், திருவள்ளூர்.