* ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் படிப்பு பலன் தருமா?
-ராதாகிருஷ்ணன், புதுச்சேரி
ஒருங்கிணைந்த படிப்பு அறிமுகம் ஆகி சில ஆண்டுகளில் வரவேற்பை பெற்றன. கேம்பஸ் வேலைவாய்ப்புகளில் இந்த படிப்பு களை முடித்தவர்களுக்கு பணி கிடைத்தது. எனினும் மாணவர்கள் மத்தியில் இப்படிப்புகள் குறித்து குழப்பமே காணப்படுகிறது. ஆனால் இன்றும் இந்தப் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளும் சிறப்பாகவே உள்ளது. எனவே எந்த குழப்பமுமின்றி படிக்கலாம். ஆனால் எந்த கல்லுாரியில் என்பது மிக முக்கியம்.
* பிளஸ் 2 முடித்துள்ளேன். ஓமியோபதி படிக்கலாமா?
- ஸ்வேதா, மதுரை
மாற்று மருத்துவம் என்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கும் ஓமியோபதி படிப்பைப் பற்றி கடந்த சில ஆண்டுகளாக ஓரளவு விழிப்புணர்வு உள்ளது. ஆங்கில மருத்துவம் மட்டுமே உயிர் காக்கும் என்ற சிந்தனையில் ஓரளவு மாற்றம் உள்ளது. எனினும் ஓமியோபதி படிப்பை ஏனோ தானோவென்று முடிப்பவர் அதில் சிறப்பாக செயலாற்ற முடியாது. மனிதர்களின் உடல் பிரச்னைகளை வெறும் உடல் சார்ந்த நோயாக மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், நோய்க்கு காரணமான மன அழுத்தம், சூழல் காரணங்கள் என நோயின் முதல் நாடி மருந்தை தேர்வு செய்யும் முறை ஓமியோபதி. எனவே கூரிய புத்தியும், பகுத்தாராயும் திறனையும் கொண்டு நோயாளிகளை அணுகும் குணாதிசயம் மிக அவசியம். அப்படி அடிப்படை திறனை வளர்த்துக் கொண்டால் இத்துறையில் நீங்கள் சிறப்பாக செயலாற்ற முடியும். ஆர்வத்துடன் படித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
* வங்கித் துறையில் சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன. சமீபத்தில் வெளியான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன உதவியாளர் பணிக்கு, விண்ணப்பிக்கலாமா? ஆலோசனை என்ன?
- கண்ணன், கோவை.
நீங்கள் தற்போது பணிபுரியும் வங்கி தனியார் வங்கி. இன்சூரன்ஸ் நிறுவனமானது அரசு நிறுவனம். நுாறாவது ஆண்டில் செயல்படும் இந்நிறுவனம் பலமான நிதி ஆதாரங்களை கொண்டது. நீங்கள் தற்போது பணிபுரிவது கிளார்க் ஆகத்தான். இதுவும் கிளார்க் பணிக்கான அறிவிப்பு தான் எனவே நிச்சயம் இன்சூரன்ஸ் பணிவாய்ப்பு பெற்றால் சிறப்பான எதிர்காலத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை.