சென்றவாரம்: ராஜமாதாவை காட்டில் கண்டுபிடித்தனர். இது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தப்பிய கதையை சொன்னார். இனி -
''சாம்பன் ஓடி வந்தான். உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினான். 'குழந்தை உயிருடன் இருக்கிறது. சுனையில் எறிய இருந்த போது, நாகப்பன் காப்பாற்றி விட்டான். கோபத்தில், இரு காட்டு வாசி பெண்களையும், கொன்று விட்டான் என் தலைவன் சோமன். உங்களை, மிருகங்களுக்கு இரையாக்க சோமன் கட்டளையிட்டான். அதை நிறைவேற்றியதாக சொல்லி விடுகிறேன். இனி அழுது கொண்டிருந்தால், அனைவருக்கும் ஆபத்து. ஓடுங்கள்...' என்று, அவசரப்படுத்தினான்.
''அங்கிருந்த தப்பிய நான், தாய் இல்லாது தவித்த ஜோதிடர் பிள்ளைக்கு, தாயாக இருந்து வருகிறேன்...'' என்றார் ராஜமாதா.
சிறிது நேரத்தில், மீண்டும் பயணத்தை துவக்கினர். காளியப்பன் குடிசையை அடைந்தனர்.
''அண்ணா... ராஜமாதாவும், மற்றவர்களும் உங்கள் குடிசையிலேயே தங்குங்கள். பெரியவர் என்னை மட்டும், மன்னரிடம் அறிமுகம் செய்யட்டும். என் தந்தை எழுதி வைத்த பரிகார ஓலையில் இருக்கும் மந்திரத்தை, அரண்மனை காவல் தெய்வம் முன் ஜெபித்துக் கொண்டிருப்பேன். 'பஞ்சமி திதி' முடியும் வரை, நான் ஒருவன் தான் இருப்பேன். அதனால், மன்னரையும், அவர் மனைவியையும், பெரியவர் குடிசைக்கு அழைத்து செல்லட்டும். மிகவும் எச்சரிக்கையாக வேண்டும். நாளை, ஒரு இரவு முடிந்தால், இரண்டில் ஒன்று நிச்சயம் தெரிந்து விடும். நல்லதே நடக்கும்...'' என்றான், ஜோதிடர் மகன்.
சற்று நேரத்தில், ராமுவின் பெற்றோர், பெரியவருடன் வந்து சேர்ந்தனர். தாயை கண்டதும் ராஜாவுக்கு மகிழ்ச்சி. ஆனந்த கண்ணீர் வடித்து, தழுவினர்.
ராமுவும், அவன் நண்பர்களும் தான், இந்த நிகழ்வுகளுக்கு காரணம் என்பதை அறிந்து ஆரத் தழுவி பாராட்டினார் ராஜா.
இங்கு -
'பஞ்சமி திதி' வேளையை எதிர்பார்த்து வானை நோக்கியப்படி இருந்தான். நிலவு தோன்றவும் பஞ்சமி ஆரம்பமானது; பரிகாரத்தை துவங்கினான், ஜோதிடர் மகன்.
திடீரென்று, 'டுமீல்... டுமீல்...' என்று குண்டுகள் வெடித்தன. அனைவருக்கும் ரத்தம் உறைந்தது.
'தொலைந்தது ராஜ குடும்பம்...' என்ற சத்தம், இருட்டில் கேட்டது.
ராமு அழுதபடியே கண்களை இறுக்க மூடி திறந்தான். அவனுக்கு, இதயம் நொறுங்கும் அதிர்ச்சி. காரணம், ஒரு பக்கம் பெரியவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார்; அடுத்த பக்கம் காளியப்பன் மனைவி, இதயத்தில் குண்டு துளைத்து மடிந்து கிடந்தாள்.
சிறுவர்கள் அழ, காளியப்பன் நெஞ்சுரத்துடன், ''தம்பிங்களா... அவங்க கிடக்கட்டும்; உடனே, நீங்க ராஜாவையும், ராஜமாதாவையும், ராணியாரையும் குடிசைக்குள் அழைத்து சென்று, கதவை தாளிடுங்க. நான் யார் என்று பார்த்து வருகிறேன். என் உயிர் பற்றி கவலை வேண்டாம்...'' என்று கத்தினான்.
''ஓ... அப்படி என்றால், குறி தப்பி விட்டதா. விக்கிரம சிம்மனும், ராஜமாதாவும் இறக்கவில்லையா... இதோ அடுத்த குண்டு தயாராக இருக்கிறது...'' என்று கூறிய முகமூடி, அடுத்த முக மூடியிடம், ''முடியுங்கள் காரியத்தை...'' என்று கூறினான். அப்போது, 'டூமீல்...டூமீல்...' என்று, இரண்டு குண்டுகள் காதை பிளந்தன.
காளியப்பன் ஓடி வந்தான். ராஜமாதாவுக்கும், மன்னருக்கும் பாதிப்பில்லை என அறிந்தான். குண்டு வெடித்த திசையை நோக்கினர் சிறுவர்கள். அங்கே, இரண்டு முக மூடிகளும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அவர்களிடம் ஓடினான் காளியப்பன்.
அதேசமயம், போர்வை தொங்க விடப்பட்ட மரத்தில் இருந்து விழுந்தான் ஒரு முகமூடி. கையில் பெரிய துப்பாக்கி இருந்தது. காளியப்பன் துப்பாக்கியை பிடிங்கி, முகமூடியை கிழித்தான்; அது சாம்பன். அவன் குரல் கம்மியது.
''ராஜமாதா... ராஜமாதா...'' என்று முனகினான். ராமு தன் பாட்டியை அழைத்து வந்தான். சாம்பன் முடியாமல் எழுந்திருந்தான். பின், கை எடுத்து கும்பிட்டான். ''ராஜமாதா... நீங்க எனக்கு உயிர் கொடுத்தீங்க; அந்த நன்றியை காட்டி விட்டேன்... அரண்மனை பூஜை அறையில், வெடிகுண்டு இருக்கிறது. அதை உடனே அகற்றணும்...'' என்று கூறியபடி ஓடினான்.
சற்றும் தாமதிக்காமல், அதை எடுத்து இடு காட்டிற்கு ஓடி வரும் போது, இடறி விழுந்தான். அப்போது கையில் இருந்த குண்டு, மந்திரவாதி சோமன் மீது விழுந்து வெடித்தது. 'பீஸ் பீஸ்' ஆனான் சோமன்.
அவன் இறந்ததும், இடுகாட்டின் சவக்குழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த துர்மந்திர பொம்மைகள், அலறியபடி, மேல் எழும்பி, எரிந்து சாம்பலாகின. பின், பையில் இருந்த ஓலைச்சுவடு மற்றும் சோழிகளை, தீயில் வீசினர். சமாதியில் இருந்த துர்மந்திர பொம்மையையும் நெருப்பில் வீசினர்.
சோமனும், அவன் கூட்டாளிகளும், 'ரிமோட்' மூலம் தான் அந்த கடிகாரத்தை விளையாட்டு காட்டினர் என்பதை அறிந்து, அதை அழித்தனர் சிறுவர்கள். உடன் பெரிய ராஜாவின் படமும், பெண்டுலம் கடிகாரமும் விழுந்து துாள் துாளாகின; கடிகாரம் நின்றது.
அரண்மனையின் ஆஸ்தான ஜோதிடனாக, ஜோதிடர் மகன் அமர்த்தப்பட்டான். ராஜமாதா அறிவுரைப்படி, அரண்மனை இடுகாடு, மாற்றி அமைக்கப்பட்டது. அந்த இடத்தில், மாரியப்பன் பெயரில் இலவச ஆரம்ப பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. காளியப்பன் மனைவி பொன்னம்மாள் பெயரில், இலவச சுகாதர நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. மீதம் இருந்த நிலத்தில், கல்லுாரிகள் துவங்கப்பட்டன. ராமுவும், அவன் நண்பர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். பெரியவர் புகழை கூறியபடியே இருந்தனர். டேவிட்டையும், ஆசாத்தையும் ராஜ விருந்தினராக உபசரித்து, விலை உயர்ந்த பரிசுகளை கொடுத்து கவுரவித்தார்.
மாணவர்களின் கரவொலியால் கணபதி விலாஸ் உயர்நிலைப்பள்ளி கலை அரங்கம் அதிர்ந்தது. தலைமை விருந்தினர் எழுந்து, மாணவர்களின் இந்த நாடகத்தை வியந்து பாராட்டினார். மன்னர் நாடகம் முடிந்தது.
பள்ளி நாடக அரங்கில், பள்ளி தலைமை ஆசிரியர், பேசியதாவது:
''திகில் ஊட்டும் ஒரு ஆவி நாடகம் போடும்படி மாணவர்கள் என்னிடம் வேண்டினர்; நான் மறுத்தேன். பள்ளியில் அப்படி போட்டால் ஆவிகளும், பேய்களும், பிசாசுகளும் இருப்பதாக கூறுவதாக அமைந்து விடும் என்று உடன்படவில்லை. ஆனால், மாணவர்கள் திகில் உணர்வு ஏற்படும்படி போடுங்கள் என்றனர். அதன்பின் தான், 'ஆவிகள் இல்லையடி பாப்பா' என்ற தலைப்பில் நாடக பெயரை வைத்தோம்.
''என்னைப்பொறுத்த வரை ஆவிகளும், பிசாசுகளும், பேய்களும், பூதங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அவை வெளியில் இல்லை; நம் உள்ளேதான் இருக்கின்றன. ஒருவன் வளர்ச்சியில் அடுத்தவன் பொறாமை எண்ணம் கொள்கிறானோ அப்போது அவன் எண்ணத்தில் பேய் தாண்டவமாடுகிறது.
''பேய்களும், பிசாசுகளும், கெட்ட ஆவிகளும், பூதங்களும் நம்மிடம் தோன்றாமல் இருக்க வேண்டும் என்றால், தீய எண்ணங்களை அகற்ற வேண்டும். அப்படி ஒரு நிலை உருவானால், யார் வாழ்விலும் பாரதியார் கூறியபடி, அச்சம் இல்லாத நிலை ஏற்படும்'' என்று பேசி முடித்தார்.
மாணவ, மாணவியர், 'அச்சம் இல்லை... அச்சம் இல்லை... அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வான் இடிந்து வீழுகிற போதிலும் அச்சம் என்பதில்லையே...' என உணர்ச்சி பெருக்குடன் பாடினர்.
- முற்றும்.