கண்களுக்கு மை போடுவது, பெண்களுக்கு பிடித்த விஷயம். விருப்பமான ஒரு விஷயத்தை செய்யும் போது, கவனமாக இருக்க வேண்டியதும் முக்கியம்.
'கண்ணில் மை, மஸ்காரா போட்டேன்; எரியுது, அரிக்குது, வீங்கிடுச்சு' போன்ற பிரச்னைகளோடு பலர் வருகின்றனர்.
பல பெண்கள் செய்யும் தவறு, காஜல் போடும் போது, நன்கு அடர்த்தியாக போடுவர். கண் ஓரங்களில் பூசும் மை, கண்களின் உள்ளேயும் சென்று விடும். கண்களின் உள்ளே, பல மணி நேரம் அப்படியே இருக்கும்.
கண்களில் நிறைய எண்ணெய் சுரப்பிகள் இருக்கிறது; அதில், அடர்த்தியான இந்த காஜல் அடைத்துக் கொள்ளும். இதனால், பாக்டீரியா தொற்று ஏற்படும். ஒருவர் பயன்படுத்திய காஜலை, மற்றவர் பயன்படுத்துவதாலும் தொற்று வரலாம்.
கான்டாக்ட் லென்ஸ் அணிபவர்கள், கைகளை சுத்தம் செய்து, லென்ஸ் அணிந்த பின், கண் மை போட வேண்டும். கண்களுக்கு உள்ளே படும்படி மை போட்டால், லென்சில் உள்ள புரத அடுக்கில் மை படிந்து, கண்களில் புண் ஏற்பட்டு, சமயத்தில் பார்வை இழக்கும் அபாயமும் உண்டு; பல நேரங்களில், அலர்ஜியால் கண்களில் கட்டி வரலாம்.
பிரச்னை இருந்தாலும் இல்லாவிட்டாலும், வீட்டிற்கு வந்தவுடன், குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி பட்சை, வெதுவெதுப்பான நீரில் நனைத்து, கண்களை நன்றாக துடைத்து, அதன்பின் பேபி ஆயில் போட்டு, சுத்தமாக துடைத்து விட வேண்டும். கண் மை, மஸ்காரா போட்டு துாங்குவது கூடாது.
'கண்களின் உள்ளே சென்ற மையால் பிரச்னை ஏற்பட்டு, பார்வையே பறி போய் விடுமோ!...' என, பயந்ததாக, பாலிவுட் நடிகை பிபாஷா பாசு, தன் அனுபவத்தை, சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருப்பது குறிப்பிடத் தக்கது.
அதனால், அழகுக்கு செய்யும் எந்த விஷயத்தையும், பாதுகாப்போடு செய்வது நல்லது.
டாக்டர் ஆர்.ரதி மலர்
கண் அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.
docradhi@gmail.com