தனக்கு கிடைக்கவில்லை என்றால்...
என் உறவுக்கார பெண்ணுக்கு, ஒவ்வொரு முறையும் திருமணம் கைகூடி வரும் நேரத்தில், அவரை பற்றி தவறான செய்திகள், மாப்பிள்ளை வீட்டாருக்கு போய் சேர, திருமணம் நின்று விடும்.
இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது, உறவுக்கார பெண்ணின் குடும்பம். ஒவ்வொரு முறையும் திருமணம் நின்று போகும் சமயத்தில், அவளுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் ஒருவர், ஓடோடி வந்து அப்பெண்ணுக்கு ஆறுதல் சொல்வார்.
இதனால், அவருடைய நடவடிக்கைகளை ரகசியமாய் கண்காணித்த போது, அவர் தான், குற்றவாளி என்பதை கண்டுபிடித்து, 'ஏன் இப்படி செய்தீர்கள்...' எனக் கேட்டோம்.
'நான், அப்பெண்ணை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்; அவளோ, என்னை, உடன் பணிபுரியும் நண்பனாக மட்டுமே கருதுகிறாள். அதனால் தான் அவளை பற்றி தவறான விஷயங்களை பரப்பி, அவளை யாரும் திருமணம் செய்ய முன் வராத நிலையை ஏற்படுத்தினேன். இனி, நம்மை கல்யாணம் செய்து கொள்ள யாரும் வரமாட்டார்கள் என, அவள் விரக்தி நிலைக்கு போகும்போது, நான் இருக்கிறேன் என்று சொல்ல நினைத்தேன்...' என்றார்.
அப்போது, என் உறவுக்கார பெண், 'நீ முதலிலேயே உன் விருப்பத்தை கூறியிருந்தால், நானும், ஓ.கே., சொல்லி இருப்பேன்; ஆனால், உன் சுயநலத்துக்காக, என்னை மிகவும் மோசமான பெண்ணாக்கி, கேவலப்படுத்தி விட்டாய். இனி, உன்னுடன் வாழ்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நண்பனாக இருந்ததால், மன்னிக்கிறேன்; என் முகத்தில் விழிக்காதே...' என, ஆவேசமாய் கூறி அனுப்பினாள்.
காதலைத் தெரிவிக்க எத்தனையோ நேர்மையான வழிகள் இருக்கும் போது, குறுக்கு வழியில் ஈடுபட்டால், மூக்குடைந்து போவது தான் மிச்சமாகும்!
— பி.சுமதி, சென்னை.
தேசத்தை போற்றுவோம்!
எங்கள் கிராமத்தில், ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் வசிக்கிறார்; ஓய்வு பெற்றது முதல், 20 ஆண்டுகளாக, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின நாட்களில், தவறாமல் தன் வீட்டு முன், தேசியக் கொடி ஏற்றி, மரியாதை செய்வது, அவரது வழக்கம்.
இதுபோன்ற தினங்களில், பெரியவர், சிறியவர் என எந்த வித்தியாசமுமின்றி, அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்கள் முன் தேசிய கொடியை ஏற்றி, இனிப்பு வழங்குவதோடு, தேச பக்தி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி, 'தேசிய கீதம்' பாடி, நிகழ்ச்சியை முடிப்பார்.
மிக எளிமையாகவும், உண்மையான தேச பக்தியுடனும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சேவை செய்து வரும் அவருடைய இச்செயல், ஒரு முன்னுதாரணமாக உள்ளது.
பள்ளி, கல்லுாரி, அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு கிராமத்திலும், தெருவிற்கு ஒருவராவது சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று இதுபோல் கொடியேற்றி, அதற்கான முக்கியத்துவத்தை உரைப்பது, இளம் தலைமுறையினருக்கு, இந்த தேசத்தின் மீதான மதிப்பையும், பற்றையும் உயர்த்தும்.
கிராமங்கள் தோறும் இதை கடைப்பிடிக்கலாமே!
பி.புண்ணியமூர்த்தி, அய்யம்பேட்டை.
கிராம மக்களின் யோசனை!
கிராமத்தில் இருக்கும் தோழி வீட்டுக்கு சென்றிருந்த போது, மாதாந்திர கூட்டம் நடைபெறும் இடத்திற்கு போக வேண்டும் என, அவசரப்பட்டாள்.
அதுபற்றி அவளிடம் விசாரித்தபோது, டெங்கு, மலேரியா என மர்ம காய்ச்சல் பரவுவதால், கிராமத்தை துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, ஊர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஊர் தலைவர் போன்றே, மற்றொரு நபருக்கு சுகாதார துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள், கிராமத்து இளைஞர்களை ஒன்றிணைத்து, ஞாயிறுதோறும் கிராமத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவர். இதனால், இப்போது, எங்கள் கிராமத்தில் கொசுக்களே இல்லை.
மாதம்தோறும் கிராம சபை கூட்டம் நடக்கும்; கிராம வளர்ச்சி, சுகாதாரம் பற்றி பல விஷயங்களை கலந்தாலோசிப்போம் என்று கூறி, கூட்டத்திற்கு கிளம்பினாள்.
எல்லா உதவிகளுக்கும் அரசை எதிர்பார்க்காமல், மற்ற கிராமத்தாரும் இதுபோன்ற செயல்களை பின்பற்றினால், நோய் இல்லா துாய்மையான சமுதாயத்தை உருவாக்கலாமே!
— ம.புனிதா, கோவை.