ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தால், அது, அவர்கள் செய்த அதிர்ஷ்டம்; அதற்காக தான் ரசிக்கும் நடிகர் - நடிகையருக்காக எந்தவொரு ரசிகரும் திரைப்படம் எடுக்க முன் வருவதில்லை.
ரசிகர்களால் தியேட்டருக்கு சென்று அவரது படத்தை பார்க்க முடியும்; அவருக்கு, 'கட்அவுட்' வைத்து பாலாபிஷேகம் செய்ய முடியும்; ரசிகர் மன்றங்கள் அமைத்து தங்கள் ஆதரவை திரட்ட முடியும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ரசிகர்களின் அமோக ஆதரவு இருப்பதால் இந்த நடிகர் அல்லது நடிகையை வைத்து படமெடுத்தால், நிச்சயமாக நல்ல வசூலை பெற முடியும் என்று தயாரிப்பாளர்களை நம்ப வைக்க முடியும். அதனால், குறிப்பிட்ட நடிக, நடிகையரை வைத்து படம் எடுப்பதற்கு ஆர்வத்துடன் முன் வருவர், தயாரிப்பாளர்கள்.
அதேசமயம், தனக்கு ரசிகர்களின் பேராதரவு இருப்பதால், தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டியதில்லை என்று நினைத்து, அவர்களோடு சுமுக உறவு வைக்காமல் போனால், அவரை வைத்து படம் எடுக்க முன் வரமாட்டார்கள், தயாரிப்பாளர்கள்.
இதைப் பற்றி மனோரமா, 'நிறைய ரசிகர்கள் இருக்கிறாங்க; என்பதற்காக, சினிமாக்காரங்கள பற்றி எனக்கு கவலையே இல்லை; அவங்களால என்னை எதுவும் செய்ய முடியாது. எனக்கு ரசிகர்கள் தான் முக்கியம்...' என்று இறுமாப்புடன் கூறி, படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராம இருந்தவர்களை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட நடிகர்கள் இப்போது எங்கே இருக்கின்றனர் என்று தேடும் அளவுக்கு காணாமலேயே போயிட்டாங்க...' என்று திரை உலகின் யதார்த்தத்தை கூறியுள்ளார்.
கமல்ஹாசன் நடித்த, கல்யாணராமன் படத்தின், 100வது நாள் விழா, சென்னை, அட்லாண்டிக் ஓட்டலில் நடைபெற்றது.
அவ்விழாவில், கே.பாலசந்தர், கவிஞர் கண்ணதாசன், மனோரமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவின்போது கண்ணதாசன், 'இயக்குனர் கே.பாலசந்தர் நுாற்றுக்கணக்கான நடிகர், நடிகையரை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்தி, பெருமை அடைந்திருக்கிறார். ஆனால், என்னால் முடியவில்லை. நடிகை மனோரமாவை மட்டுமே என்னால் அறிமுகப்படுத்த முடிந்தது...' என்று குறிப்பிட்டார்.
அவருக்கு பின் பேசிய பாலசந்தர், 'நான், நுாறு பேரை அறிமுகப்படுத்தியதும், அவர் மனோரமாவை மட்டும் அறிமுகப்படுத்தியதும் சரிசமம் தான். ஏனென்றால், அந்த நுாறு பேருக்கு இணையான திறமைசாலி மனோரமா...' என்று கூறினார்.
இதைக் கேட்டதும், அரங்கில் பலத்த கரவொலி எழுந்தது.
அந்த அளவிற்கு திறமைசாலியாக திகழ்ந்தார், மனோரமா.
இந்நிகழ்ச்சிக்கு பின், அமெரிக்கா புறப்பட்டு சென்றார், கண்ணதாசன். புறப்படுவதற்கு முன், மனோரமாவிடம், 'யார் யாருக்கோ பாராட்டு விழா நடத்தறாங்க; உன்னைப் போன்ற சிறந்த கலைஞர்களுக்கு விழா நடத்தறதில்லை. இது, எனக்கு கவலையா இருக்கு. நான் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், உனக்கு பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தப் போறேன்...' என்றார்.
அவரது இந்த நிலைப்பாடு மனோரமாவை நெகிழச் செய்தது. அதனால், அமெரிக்காவிலிருந்து கண்ணதாசன் எப்போது திரும்பி வருவார் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், அமெரிக்காவில் இருந்து கண்ணதாசனின் உடல் மட்டுமே வந்தது.
இது, மனோரமாவிற்கு தாங்க முடியாத துயரமாக இருந்தது.
இந்த சோக நிகழ்ச்சிக்கு பின், பாராட்டு விழா நடத்துவதற்கு அனுமதி கேட்டு பலர் அணுகியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்தார், மனோரமா.
இந்நிலையில், 'கந்தர் ஆர்ட்ஸ்' நாடக சபாவினர், ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தனர். மனோரமா எவ்வளவோ மறுத்தும், அவர்கள் விடுவதாக இல்லை. விழாவை நடத்தியே தீருவது என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.
எனவே, அரைகுறை மனதோடு அதற்கு ஒப்புதல் கொடுத்தார், மனோரமா.
நாடக சபாவினர் தீவிரமாக விழா ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தபோது, ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது, இலங்கையில் பயங்கர இனக்கலவரம்; ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர், நோயாளிகள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல், ஆயிரக்கணக்கில் தமிழர்களை கொன்று குவித்தனர், சிங்களர்கள்.
இதைக் கண்டு, உலகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த தமிழ் இனமும் ரத்தக் கண்ணீர் சிந்தியது. தமிழகத்தில் ஆர்ப்பாட்டம், பேரணி என்று நடத்தி, இலங்கை தமிழர்கள் படும் அவதிக்காக, தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.இதுபோன்ற ஒரு கனத்த சூழலில் பாராட்டு விழா நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள அவர் மனம் மறுத்தது.
'என் மீது மிகுந்த அன்பும், பாசமும் கொண்ட ஈழத் தமிழர்கள், சொல்லொணா வேதனையில் சிக்கி, ரத்த சகதியில் புரண்டு கொண்டிருக்கும் கொடுமையான சூழலில், பாராட்டு விழா ஒரு கேடா... இந்நிலையில் விழா கொண்டாடினால், நான் எப்படி உண்மையான தமிழச்சியாக இருக்க முடியும்...' என்று சொல்லி, அந்த விழாவை ரத்து செய்யுமாறு கூறிவிட்டார், மனோரமா.
அவர்களோ, விழாவிற்கான ஏற்பாடுகளை பெரும்பாலும் செய்து முடித்திருந்ததால், எப்படியும் விழாவை நடத்தியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
ஆனால், மனோரமாவின் உறுதியை அவர்களால் அசைக்க முடியவில்லை.
'இதையும் மீறி நீங்க விழாவை நடத்தினா, கண்டிப்பா அதில் கலந்துக்க மாட்டேன்...' என்று அழுத்தமாக கூறிவிட்டார்.
இப்படித்தான் அவருக்கான பாராட்டு விழாக்கள் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தன.
அதன்பின், சில பாராட்டு விழாக்கள் அவருக்கு எடுக்கப்பட்டன. சென்னையில், ஜனவரி 14, 2008ல், பொங்கல் திருநாளன்று, மனோரமாவுக்கு, மிகப்பெரிய அளவில், அன்றைய தமிழக அரசின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்ட பிரமாண்ட விழா அது!
அந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும்போது...
— தொடரும்.
நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.
www.shankar_pathippagam@yahoo.com
- குன்றில்குமார்