'கேரளாவில், 'கதகளி' என்ற நடனம் ஆடுகின்றனர்; அது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஏதோ, 'ஒட்டந்துள்ளல்'ன்னு ஒரு நடனம் அங்கே ரொம்ப பிரசித்தமாமே...' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன்.
'ஆமாம், பல நுாற்றாண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல், அப்படியே இருக்கிறது, கதகளி. அந்த நடன முறையில் சில மாறுதல்களைச் செய்து, ஒட்டந்துள்ளல் என்ற புதிய நடனக் கலையைக் கண்டு பிடித்தனர்...' என்றார் குப்பண்ணா.
அவரே தொடர்ந்தார்... 'கதகளியில் பல நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர். ஆனால், ஒட்டந்துள்ளலில் ஒரே ஒரு நடிகர் தான். இது, நம்மூர் கதாகாலட்சேப முறையை ஒத்திருக்கும். கதகளி முறையில் முகபாவங்களையும், ஆங்காங்கே நடிப்பையும் வெளியிட்டுக் கொண்டே, ராமாயணம், மகாபாரதம் முதலிய மலையாளப் பாடல்களை பாடுகிறார், ஒட்டந்துள்ளல் நடிகர். பெரும்பாலும், மக்களுக்கு நன்கு தெரிந்த நாட்டுப்புற பாடல்களே இவை!
'நல்ல வேலைப்பாடுள்ள ஒரு கிரீடம்; மணிகளும், பலவண்ண கண்ணாடித் துண்டுகளும் பதிக்கப்பட்டு வேலைப்பாடுள்ள ஒரு மார்பு கவசம்; கைத்தறித் துணியில் தைத்த ஒரு ஆடை; இவற்றை அணிந்திருப்பார், ஒட்டந்துள்ளல் நடிகர். சலங்கை கட்டி அவர் ஆடும்போது, தாளக்கட்டு தானாகவே ஏற்பட்டு விடுகிறது.
'பதினெட்டாம் நுாற்றாண்டில் வாழ்ந்த மலையாள கவிஞர் குஞ்சன் நம்பியார் கண்டுபிடித்த நடனம் இது. வெகு எளிய குடும்பத்தில் பிறந்த இவர், கதகளி பயிற்சிக்கு ஆளானார். கதகளி, காலப்போக்கில் பிரபுத்துவ டாம்பீகமாக ஆகிவிட்டதை அவர் உணர்ந்தார். அதனால், இவர் இந்த ஒட்டந்துள்ளலை ஆரம்பித்தார்.
'இந்த புதிய நடன முறை, மக்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இன்றும் கூட திறமையான ஓர் ஒட்டந்துள்ளல் நடிகருக்குக் கிடைக்கும் சபை வரவேற்பு, வேறு எந்த நடனக் கலைஞருக்கும் கிடைப்பதில்லை...' என்றார் குப்பண்ணா.
சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்க, பராமரிக்க வேண்டிய போலீசார், அதுவும், உயர் போலீஸ் அதிகாரிகள் சிலர் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை இவ்வாசகியின் கடிதம் சொல்லும்:
எனக்கு திருமணம் ஆகி, ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. ஏழு மற்றும் ஐந்து வயதில் ஒரு பெண், ஆண் என இருபிள்ளைகள். நானும், என் கணவரும் விரும்பித்தான் திருமணம் செய்தோம்; ஆனால், அது என் மாமியாருக்கோ, நாத்தனாருக்கோ பிடிக்கவில்லை. என் வீட்டுக்காரர், என்னை பற்றி, அவர்களிடம் குறை சொல்லி, என்னை அவமானப்பட செய்வார்.
என் கணவர், திருமணத்திற்கு முன், தங்கக் கம்பி தான்; ஆனால், திருமணம் ஆன பின், ஒரு சிறு தவறு என்றாலும் அடி, உதை தான். கர்ப்பமானவள் என்றும் பாராமல் கண், மண் தெரியாமல் கூட அடிப்பார். இப்படியே, ஏழு ஆண்டுகள் சந்தோஷம் இல்லாமல் வாழ்ந்தேன்.
பின், எதிர் வீட்டில் குடியிருந்த ஒருவர் மீது ஆசைப்பட்டேன். அவர், திருமணம் ஆகாதவர்; அவரை அந்தத் தெருவிலேயே நல்லவர் என்று புகழ்வர். நான்தான் முதலில் ஆசைப்பட்டேன். அவர் மறுத்தார்; பின், சம்மதிக்க வைத்தேன்.
இந்த விஷயம் என் கணவருக்குத் தெரிந்து, எங்களைப் பிரித்தார். பிரித்ததும் இல்லாமல், போலீசில் புகார் செய்தார். அங்கு,
டி.எஸ்.பி., விசாரித்தார். பின், என்னை பயமுறுத்தி, தன்னுடன் படுக்கச் சொல்லி இருமுறை என்னைப் பயன்படுத்திக் கொண்டார், டி.எஸ்.பி.,
உண்மையிலேயே இந்த ஜென்மத்தில் பெண் பிறவி எடுத்தவர்கள் அடுத்த பிறவி ஒன்று வேண்டவே வேண்டாம் என்பர். அந்த அளவு நான் கஷ்டப்பட்டு விட்டேன்.
டி.எஸ்.பி., என்னை பயன்படுத்திக் கொண்டது, என்னை விரும்புபவருக்கு தெரியும். இதைச் சொல்லியும், 'என் வாழ்வு உன்னோடு தான்' என்கிறார்.
இந்த வாசகியின் செயல் சரியா, தவறா என்ற பிரச்னையை ஓரம் கட்டி விடுவோம். ஆனால், நியாயம் வழங்க வேண்டிய ஓர் உயர் அதிகாரியே இப்படி நடந்து கொண்டால், சாதாரண மக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?
மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனிகளுடன் ஒற்றுமையாய் வாழ்வது எப்படி என்று எந்த டுடோரியலிலும் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில், பேராசிரியர் ஒருவர், தன் கட்டுரையில் இதற்கு சில விதிகளைக் குறிப்பிட்டுள்ளார்.
*குடும்பத்தினருடன் இனிமையாக, தோழமையாக பழகுங்கள்; அதே நேரம் ரொம்ப இழையாதீர்கள். அதிக நெருக்கம் திடீரென எரிமலையாகவும் வெடிக்கக் கூடும்
* உங்களுடைய முக்கியமான குடும்ப நிகழ்ச்சிகளில், அவர்களுக்கும் ஓர் இடம் கொடுங்கள்; ஆனால், அவர்களின் கை பொம்மையாக ஆட இடம் கொடுக்காதீர்கள்
* தனிமையாகவும், அந்தரங்கமாகவும் இருக்க அவர்களுக்கும் இடமளியுங்கள். அந்த உரிமை அவர்களுக்கும் உண்டு என்று நினையுங்கள்; அந்த உரிமையை உங்களுக்கும் அவர்கள் கொடுக்கும்படி வற்புறுத்துங்கள்
* அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்ந்தாலும், பிரியமாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
* தனக்கு மிஞ்சித் தான் தானமும், தர்மமும் என்பதற்கேற்ப, உங்களுடைய சொந்தக் குடும்ப நலன்களுக்குத் தான் முதல் இடம் என்பதை மறக்காதீர்கள்
* உங்கள் மனைவி, மக்களின் உரிமைகளை அவர்கள் பறிக்கின்றனர் என்று தோன்றினால், தைரியமாகச் சொல்லத் தயங்காதீர்கள். இல்லாவிட்டால், தங்களுக்கு எந்த வித உரிமையும் கிடையாதோ என்று மனைவி, மக்கள் மனம் வெதும்பி, மூக்கைச் சிந்துவர்
* குடும்பச் சண்டையில் தலையிடாதீர்கள்; தலையிட்டீர்களோ, கடைசியில் உருளும் தலை உங்களுடையதாக தான் இருக்கும்
* குடும்ப அங்கத்தினர்களில் எவரைப் பற்றியும் குற்றம் - குறை கூறாதீர்கள்; யாருக்கும் தனிச் சலுகை காட்டாதீர்கள்
* தியாகியாகவும் இருக்காதீர்கள்; குரோதங்களை மனதிற்குள் வைத்து குமையாதீர்கள்
* மொத்தத்தில் மாமியார், மாமனார், மைத்துனர், மைத்துனி என்று நினைக்காதீர்கள்; உங்களைப் போலவே அவர்களும் மனிதர்கள் என்ற ஞாபகம் இருக்கட்டும்!
— ஒரு ரெண்டு பேராவது இவற்றை மனதில் கொள்வார்களா?