எஸ்.அருள், சென்னை: சொகுசா பகல் துாக்கம் போடுறவங்கள கண்டா எனக்குப் பொறாமையா இருக்கு; நான் என்ன செய்ய?
பொறாமைப்படாமல், நீங்களும் மதிய உணவிற்கு பின், அரை மணி நேரம், 'கொர்' விடுங்கள்; 40 வயதை தாண்டியவர் என்றால், இந்த குட்டித் துாக்கம் புதுத் தெம்பைக் கொடுக்கும் என்கின்றனர் நரம்பியல் வல்லுனர்கள்!
* வி.புனிதா, கோவை: என் நண்பன் ஒருவன் ஊதாரி; மற்றவனோ கஞ்சன். இவர்களை இந்த குணம் எங்கு கொண்டு போய் விடும்?
ஆஸ்பத்திரியில்! கஞ்சன், மணிபர்சு நலமாக இருப்பதிலேயே குறியாக இருந்து, உடல் நலத்தைக் கெடுத்து, நோயில் விழுவான்; ஊதாரியோ, வாழ்வை கண்டபடி அனுபவித்து, உடம்பை கெடுத்துக் கொள்வான். அளவோடு வாழ்ந்தால் என்றுமே இன்பம் தான்.
வி.உஷா, காஞ்சிபுரம்: தம் தோற்றத்தைப் பற்றி அதிகமாக அக்கறை கொள்வது ஆண்களா அல்லது பெண்களா?
உங்கள் கேள்விக்கு, 'சர்வே'யை ஏன் துணைக்கு அழைக்க வேண்டும்... கண்ணை மூடி, 'பெண்' என்று பதில் கூறி விடலாம். இருந்தாலும், ஆதாரபூர்வமாகச் சொல்வதற்கு ஒரு சர்வேயை துணைக்கு அழைக்கிறேன். லண்டனில் இருந்து வெளியாகும், 'த எக்கானமிஸ்ட்' இதழ், 'எப்போதும் தம் தோற்றத்தைப் பற்றி, 100 பெண்களில், 20 பேரும், ஆண்களில், 16 பேரும் எண்ணிக் கொண்டுள்ளனர்...' என்று கூறுகிறது.
டி.இந்திரா, நாகப்பட்டினம்: வாழ்க்கையில் முன்னேற வயது ஒரு தடையா?
பதினைந்து வயது கூட ஆகாத சிறுவர்கள், பட்ட மேற்படிப்புக்கு தகுதி பெறும் சங்கதிகள் நடக்கவில்லையா... 25 வயதுக்குள், கோடிகளை சம்பாதிக்கும் இளைஞர்கள் பற்றி செய்திகள் படித்ததில்லையா... எம்.ஜி.ஆருக்கு, 40 வயதுக்கு மேலும், எம்.ஆர்.ராதாவுக்கு, 50 வயதுக்கு மேலும் சினிமாவில் ஜொலிக்கும் வாய்ப்பு கிட்டவில்லையா? வயது ஒரு தடையே அல்ல!
தீ.அசோகன், திருவண்ணாமலை: உண்மையான பொது நலவாதி யார்?
மறுநாளுக்கு சேர்த்து வைக்காதவன் எவனோ, அவனே உண்மையான பொது நலவாதி! இப்போதுள்ள பொது நலவாதிகள் ஒரு தலைமுறைக்கு அல்லவா சேர்த்து வைக்கின்றனர்!
* எஸ்.கலா, விழுப்புரம்: உயர என்ன வழி?
செய்ய வேண்டிய வேலையைத் தள்ளிப் போடாமல், மூளையை பயன்படுத்தி உழைத்தாலே உயர முடியும். இன்றுள்ள பொருளாதார நெருக்கடியான காலகட்டத்தில் உழைத்துக் கொண்டே இருந்தால் மட்டுமே உயர முடியும்!
எம்.சசிரேகா, ராமநாதபுரம்: இன்டர்நெட்டில் ஒரு வார இதழை படிக்க, இன்டர்நெட் மையத்திற்கு பணம் கட்டுகிறோம்; இதனால், இதழ் வெளியாகும் நிறுவனத்திற்கு என்ன பலன் உள்ளது?
விளம்பர வருமானம் தான்; 'ஹிட் ரேட்'டை பொறுத்து, எத்தனை பேர் பார்க்கின்றனர் என்பதைப் பொறுத்து விளம்பரங்கள் கிடைக்கும்.